feddral bank
BREAKING NEWS

முதல் பார்வை: கூட்டத்தில் ஒருத்தன் – தென்படுகிறான்!

பதிவு செய்த நாள்: 28 Jul 2017 7:37 pm
By :

மக்கள் திரளில் கூட்டத்தோடு கூட்டமாக இருக்கும் ஒரு இளைஞன் தனி ஒருவனாக அடையாளம் பெற்றால் அதுவே ‘கூட்டத்தில் ஒருத்தன்’.

பள்ளிக்கூடம் படிக்கும் காலத்தில் இருந்தே முதல் ரேங்க் வாங்க முனைப்பு காட்டாமல், கடைசி இடத்திலும் இல்லாமல் நடுவாந்திரமாகவே இருக்கிறார் அசோக் செல்வன். நடு பெஞ்ச் மாணவரான அவரை அவரது பெற்றோரோ, ஆசிரியரோ பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. இதனால் எந்த ஈடுபாடும், ஆர்வமும் இல்லாமல் இருக்கும் அசோக் செல்வன் செய்த ஒரு சின்ன செயலுக்காக ப்ரியா ஆனந்த் பாராட்டுகிறார். அதனால் அகம் மகிழ்ந்து போகும் அசோக், ப்ரியா ஆனந்த் படிக்கும் கல்லூரியிலேயே சேர்ந்து அவரைப் பின்தொடர்கிறார். ஒருகட்டத்தில் ப்ரியா ஆனந்திடம் தன் காதலைச் சொல்கிறார். ஆனால், ப்ரியா மறுக்கிறார். பிறகு அசோக் செல்வன் என்ன ஆகிறார், எப்படி தன்னை நிரூபிக்கிறார், ப்ரியா ஆனந்த் உடனான காதல் என்ன ஆனது என்ற சில கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது கூட்டத்தில் ஒருத்தன்.

பத்திரிகையாளர் த.செ.ஞானவேல் இப்படத்தின் மூலம் இயக்குநர் ஆகியிருக்கிறார். சாதாரண மனிதனும் சாதிக்கலாம் என்று தன் முனைப்பு குறித்த சிந்தனையை விதைத்ததற்காக இயக்குநர் த.செ.ஞானவேலைப் பாராட்டலாம்.

அசோக் செல்வன் சுமாராகப் படிக்கும் மாணவனுக்கு ஏற்படும் பாதிப்புகள், கவலைகள், பாராட்டுக்காக ஏங்கும் உள்ளம் என அனைத்தையும் அப்படியே பிரதிபலிக்கிறார். சில தருணங்களில் அப்பாவி, வெகுளித்தனம் நிரம்பிய குணத்தை வெளிப்படுத்துவதற்காக ரொம்பவே மெனக்கெடுகிறார். அது கதாபாத்திரத்தின் தன்மையை வேறு விதமாக மாற்றி விடுகிறது. இயல்பாக நடிப்பதற்குரிய அம்சங்களை அடுத்தடுத்த படங்களில் அசோக் செல்வன் கைவரப் பெறுவார் என நம்புவோம்.

‘உன் பேர் கூட தெரியாது. நீ லவ் பண்றியா?’ என அசோக் செல்வனிடம் கேட்பது, தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பது, பிறகு கரைவது, அசோக் செல்வன் மீதான அன்பைப் பகிர்வது, ஏமாற்றம் உணர்ந்து அழுது வெடிப்பது என குறையில்லாமல் நடித்திருக்கிறார்.

சந்தடி சாக்கில் கவுண்டர்களை அள்ளி வீசி அப்ளாஸ் வாங்குகிறார் பால சரவணன். சமுத்திரக்கனியின் வருகை படத்துக்கு பலம் சேர்க்கிறது. தன் இருப்பை சரியாக சமுத்திரக்கனி பதிவு செய்திருக்கிறார்.

நாசர், மாரிமுத்து, ரமா, அனுபமா குமார் ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள். பகவதி பெருமாள் கதாபாத்திரம் செயற்கையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஜான் விஜய் கதாபாத்திரம் மிகைத் தன்மையோடும், நம்பகத்தன்மை இல்லாமலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவில் சென்னை மாநகரத்தையும், கல்லூரியின் எழிலையும் அப்படியே கேமராவில் அள்ளி வந்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையில் நீயின்றி நானும் இல்லையே, ஒருநாள் காதல் நீயில்லை பாடல்கள் ரசனை. லியோ ஜான் பால் ஒரு பாடலுக்கு கத்தரி போட்டிருக்கலாம்.

நடு பெஞ்ச் மாணவரின் ஏக்கங்களை, வலிகளை இயக்குநர் த.செ.ஞானவேல் நியாயமாக பதிவு செய்திருக்கிறார். ஆனால், முன்னுக்கு வர ஆசைப்படும் இளைஞனின் முயற்சிகளை சொல்லும் விதத்தில் போதிய நேர்மையும், விவரணைகளும் இல்லை.

திடீரென்று கல்லூரி உள்ளிட்ட எல்லோரும் அசோக்செல்வனின் புகழ்பாடிகளாக மாறுவது நம்பும்படியாக இல்லை என்றாலும், அது ஒரு திட்டமிடப்பட்ட நாடகம் என்பதை வெளிப்படுத்தி இயக்குநர் தன் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறார். ஆனால், அந்த நாடகம் முதிர்ச்சியில்லாமல், செயற்கையாக, ஒட்டாத அளவுக்கு உள்ளது. சஞ்சய் பாரதியின் கதாபாத்திரம் அடிப்படை நோக்கத்தையே சிதைக்கிறது.

எல்லோரும் கைவிட்ட பிறகு, நாயகன் அசோக் செல்வன் செயற்கரிய செயலைச் செய்வது, அதன்மூலம் புகழ் பெறுவது, அது டிவி பேட்டி வரை நீள்வது என இயக்குநர் கட்டமைத்திருக்கும் கதையின் இறுதிப் பகுதி சற்று ஆறுதல் அளிக்கிறது.

அடையாளம் இல்லாமல் இருக்கும் யாரும் சத்தமில்லாமல் சாதிக்கலாம் என்ற நம்பிக்கையை விதைத்த விதத்தில் மட்டும் இந்த ‘கூட்டத்தில் ஒருத்தன்’ தென்படுகிறான்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds