feddral bank
BREAKING NEWS

டெல்லியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் கலாம் நினைவகம்

பதிவு செய்த நாள்: 28 Jul 2017 7:42 pm
By :

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரில் டெல்லியில் அமைந்துள்ள நினைவகம் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்துள்ளது.

டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை அருகில் உள்ள கித்வாய் நகரில் ஐ.என்.ஏ. மார்க்கெட் உள்ளது. இதன் நுழைவாயிலில் ‘டெல்லி ஹேட்’ என்ற பெயரில் கைவினைப் பொருட்களின் நிரந்தரக் கண்காட்சி டெல்லி அரசால் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களை சேர்ந்த கைவினைநர்கள் கடைகளை இதில் அமைப்பது உண்டு. இதன் உள்ளே நுழைந்தால் கடைசியாக அப்துல் கலாம் நினைவகம் அமைந்துள்ளது.

கலாம் நினைவகத்துக்கு டெல்லி ஹேட் அருகிலுள்ள கித்வாய் நகர் சாலையில் புகுந்தும் பின்புறமாக வாயில் எண் 2-ல் நுழையலாம். காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை கலாம் நினைவகம் திறக்கப்பட்டிருக்கும். திங்கட்கிழமை இதன் வார விடுமுறை நாளாகும்.

நினைவகத்துக்குள் நுழைந்தால் குழந்தைகளுடன் கலாம் இருக்கும் சிலைகள் நுழைவாயிலில் நம்மை வரவேற்கின்றன. குடியரசுத் தலைவர் மாளிகையில் கலாம் வசித்தபோது பயன்படுத்திய தட்டு, டம்ளர், ஸ்பூன், தேநீர் கோப்பை ஆகியவை இங்கு வைக்கப்பட்டுள்ளன. அவரது பட்டுத் துண்டு, 2 வேட்டிகள், குளிர் சால்வை, டிஷர்ட், இரு பந்த்கல்லா ஷூட் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கலாமுக்கு அளிக்கப்பட்ட நினைவுப் பரிசுகள் மற்றும் அவர் விரும்பிப் படித்த நூல்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றில், ஏ.பி.ஜே.அப்துல் கலாம் என்ற வார்த்தையை மட்டும் நூற்றுக்கணக்கான முறை நுணுக்கமான முறையில் எழுதி அவரது முகத்தை படமாக வரையப்பட்ட ஓவியம் வைக்கப்பட்டுள்ளது. பலரது கவனத்தைக் கவரும் இந்த ஓவியத்தை கரூரைச் சேர்ந்த ராம் பிரகாஷ் என்பவர் எழுதி வரைந்துள்ளார்.

சுமார் 650 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த நினைவகத்தின் சுவர்களில் கலாமின் வாழ்க்கையை சித்தரிக்கும் படங்கள் பெரிய அளவில் ஒட்டப்பட்டுள்ளன. இவற்றின் இடைவெளியில் அவரது உரைகளின் முக்கியக் கருத்துக்கள் மற்றும் ஆங்கில கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. இவற்றை படிப்பவர்கள் கலாம் வாழ்க்கையின் சில முக்கிய நிகழ்வுகளை அறிந்துகொள்ள முடிகிறது. இவற்றை பார்வையாளர்களிடம் விவரிக்க டெல்லி அரசு சார்பில் பணியாளர் ஒருவரும் அமர்த்தப்பட்டுள்ளார்.

நினைவகத்தை பார்வையிட வந்த அகமதாபாத் இளைஞர் நிஷாந்த் பட்டேல் ‘தி இந்து’விடம் நேற்று கூறும்போது, “கலாம் நினைவு நாள் என்பதால் இரண்டாவது முறையாக நான் இங்கு வந்தேன். அவரை பற்றிய குறிப்புகளை படிக்கும்போது நாட்டுக்காக பணியாற்ற வேண்டும் என்ற உத்வேகம் நமக்கு ஏற்படுகிறது.

கலாமின் கருத்துகளால் கவரப்பட்ட நான் சிஎஸ்ஐஆர் ஆய்வாளர் பணியை கடந்த அக்டோபரில் விடுத்து, யுபிஎஸ்சி குடிமைப்பணி தேர்வுக்காக தயாராகி வருகிறேன். பயோடெக் பாடப்பிரிவில் பிடெக் பயின்ற நான், அதைவிட அதிகமாக குடிமைப்பணி மூலம் மக்களுக்கு சேவை செய்ய முடியும் என நம்புகிறேன்” என்றார்.

அப்துல் கலாம் மறைவுக்கு பின் அவரது பொருட்கள் அனைத்தும் ராமேஸ்வரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் சிலவற்றைப் பெறுவதற்காக டெல்லி மாநில அமைச்சர் கபில் மிஸ்ரா அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார். இதைத் தொடர்ந்து கலாம் குடும்பத்தினரிடம் பெற்ற பொருட்களுடன், கடந்த ஆண்டு ஜூலை 30-ம் தேதி டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இந்த நினைவகத்தை திறந்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலாமின் குடும்பத்தினர் சார்பில் ஏ.பி.ஜே.ஷேக் சலீம் கலந்துகொண்டார். அனுமதி இலவசம் என்றாலும் நினைவகத்துக்கான அறிவிப்பு பலகை முக்கிய சாலையில் அமைந்துள்ள டெல்லி ஹேட் நுழைவாயில் எண் 1-ல் பெரிதாக வைக்காதது பெரிய குறையாக உள்ளது.

இதனால் கலாம் நினைவகத்தைப் பலரிடம் விசாரிக்க வேண்டியுள்ளதாக அங்கு வரும் மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*