feddral bank
BREAKING NEWS

ஸ்டார் டைரி 5: அஜித் | சில ‘தல’யாய குறிப்புகள்!

பதிவு செய்த நாள்: 24 Jun 2017 1:07 pm
By :

திருப்பதி’ படத்தில் அஜித் ஒப்பந்தமான நேரம். ஏ.வி.எம். நிறுவனம் தயாரிக்கவிருந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் அஜித். அப்போது ஏ.வி.எம்.மில் இருந்து இயக்குநர் பேரரசு என்று அஜித்திடம் தெரிவித்தார்கள். அஜித் – பேரரசு இருவருக்கும் நெருக்கமான நட்பு நிலவி வந்தது. மனைவி ஷாலினியின் தங்கை அதிகமாக ராம நாராயணன் படத்தில் நடித்ததன் மூலம் ஷாலினியை தெரியும். அன்று முதலே இயக்குநர் பேரரசு, அஜித்துக்கு நெருக்கமான நண்பராக வலம் வர ஆரம்பித்தார்.

ஆனால், எனது அடுத்த படத்தை நீங்கள் தான் இயக்குகிறீர்கள் என்று பேரரசுவிடம் அஜித் தெரிவிக்கவில்லை. ஏனென்றால் தயாரிப்பாளர் மட்டுமே சொல்லவேண்டும் என்று அமைதியாக இருந்துவிட்டார். ஏ.வி.எம்மில் இருந்து “அஜித்தின் தேதிகள் இருக்கிறது. நீங்கள்தான் இயக்குநர்” என்று பேரரசுவிடம் கூறியபோது அவருக்கோ பெரிய அதிர்ச்சி. நமது நண்பர் நம்மிடமே கூறவில்லையே என்று.

*

தான் புதிதாக வந்தபோது அனுபவித்த கஷ்டங்கள் யாவுமே இன்றைக்கு வரும் புதிய இயக்குநர்களுக்கோ, நடிகர்களுக்கோ இருக்கக் கூடாது என்று நினைப்பார் அஜித். புதிதாக நிறைய இளைஞர்கள் வரவேண்டும் என்று நினைப்பார். புதிய இயக்குநர் என்ற வித்தியாசம் எதுவுமே பார்க்காமல் சில படங்களில் நடித்தார். அந்தப் படங்கள் சரியாக போகவில்லை.

இதனால் ‘கிரீடம்’ படத்தின்போது, “அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்து நான் நடிச்ச படங்கள் பெருசா பேசப்படலை. இது கடைசி முயற்சி. இந்தப் படம் மட்டும் சரியா போகலைன்னா இன்னும் அஞ்சு வருஷத்துக்கு எந்த ஒரு புது இயக்குநருக்கும் தேதிகள் கொடுக்க மாட்டேன்” என்று இயக்குநர் விஜய்யிடம் தெரிவித்தார் அஜித். அப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால், புதுமுக இயக்குநர்களின் படத்தில் நடிப்பதை தவிர்த்துவிட்டார். ‘கிரீடம்’ படத்துக்குப் பிறகு ‘ஏகன்’ ஏற்கனவே ஒப்புக்கொண்டதாலும் இயக்குநராக நடன இயக்குநர் ராஜு சுந்தரம் என்பதாலும் மட்டுமே நடித்தார்.

*

அஜித்துக்கு ஆன்மிக ஈடுபாடு உண்டு. தீவிரமான சாய்பாபா பக்தர். புதிதாக கார், பைக் என எந்த ஒரு புதிய பொருள் வாங்கினாலும் பாபாவுக்கு பூஜித்துவிட்டுதான் பயன்படுத்துவார். தன்னுடைய புதிய படங்களின் பூஜை, படப்பிடிப்பு தொடங்கப்பட்டும் நாள் என அனைத்துமே வியாழக்கிழமை அமைவது போல பார்த்துக்கொள்வார்.

சாய்பாபா பக்தராக இருந்தாலும் வேளாங்கண்ணி, நாகூர், நவக்கிரகக் கோயில்கள், கேரளாவில் குருவாயூர், சோட்டாணிக்கரை பகவதி அம்மன், கர்நாடகாவில் சாமுண்டீஸ்வரி, மூகாம்பிகை கோயில் என அனைத்து கோயில்களுக்கும் விசிட் அடித்திருக்கிறார்.

திருவான்மியூரில் இருந்து திருப்பதிக்கு 5 முறை நடந்தே சென்று ஏழுமலையானை தரிசித்துவிட்டு வந்திருக்கிறார். தன்னை யாரும் கண்டிபிடித்து விடக்கூடாது என்பதற்காக மாறுவேடத்தில் இரவு நேரத்தில் ஐந்து நாட்கள் நடந்து சென்றிருக்கிறார். ரஜினியைச் சந்தித்த போது அவர் கொடுத்த ‘ஹிமாலயன் மாஸ்டர்ஸ்’ புத்தகத்தை படித்ததில் இருந்து இமயமலைக்கு சென்றுவர வேண்டும் என்று ஆசையில் இருக்கிறார்.

*

படப்பிடிப்பில் எப்போதுமே மற்றவர்களின் பேச்சுகளை அப்படியே கவனித்து இமிடேட் பண்ணி கிண்டல் செய்வார். அந்த காமெடியை எல்லாம் படத்தில் உபயோகிக்க வேண்டும் என்று பல இயக்குநர்கள் கூறியும், இது என்னோட பர்சனல், இதெல்லாம் படத்தில் உபயோகிக்கலாமா என்று சொல்லி தவிர்த்துவிட்டார்.

ஒரு முறை ஆபரேஷன் முடிந்து மருத்துவமனையில் இருந்த அஜித்தை பார்க்க சென்றார் இயக்குநர் சரண். தலையை எந்தப் பக்கமும் அசைக்க முடியாதபடி படுக்க வைத்திருந்த அஜித்தின் முகத்திற்கு நேராக சென்று பார்த்தார் இயக்குநர் சரண்.

அப்போது அஜித் கூறியது, “பரபரன்னு ஒரு ஆக்‌ஷன் கதை ரெடி பண்ணுங்க. இரண்டு மாதத்தில் வந்துவிடுகிறேன்” என்பதுதான். அவர் கூறியது போல இரண்டு மாதத்தில் ஆரம்பித்த படம் தான் ‘அமர்க்களம்’

*

முன்பு எல்லாம் நாட்டில் நடக்கும் முக்கிய சம்பவங்கள் அனைத்திற்குமே தனது கருத்தைச் சொல்வார் அஜித். அவருடைய பல கருத்துக்கள் சர்ச்சையில் சிக்கி இருக்கின்றன. ஒரு கட்டத்தில் என்ன நடந்தாலும், எந்த ஒரு கருத்தும் சொல்வதில்லை. அதற்கு அஜித் கூறிய காரணம், “என்னுடைய ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு விதத்தில் புரிந்துகொள்ளப்படுகிறது. அதனால் வருகின்ற பரபரப்பும், எதிர்ப்பு நிம்மதியைக் குலைக்கிறது. எனக்கே என்னைப் பற்றிய சந்தேகங்கள் வருகிறது. எப்போதுமே பாசிட்டிவ்வாக இருப்பது தான் முக்கியம் என தெரிந்து கொண்டேன். அதனால் இனிமேல் என்னுடைய வாழ்க்கையை அதன் போக்கில் எதிர்கொள்கிற மனுஷனாக இருக்கப் போகிறேன்” என்றார்.

அதற்கு பிறகு அவர் எந்த ஒரு கருத்தும் சொன்னதே இல்லை. ரசிகர் மன்றங்களைக் கலைத்தார். அறிக்கை என்பது விடுவதே இல்லை. பேட்டிகள் என்பது மிகவும் அபூர்வமாகிவிட்டது.

*

அஜித்… சில குறிப்புகள்:

* நம்மில் பலரும் காபி, ஜூஸ் என எது கொடுத்தால் வலது கையில் பிடித்துக் குடிப்போம், ஆனால் அஜித் எப்போதுமே காபி, ஜூஸ் குடிக்கும்போது இடது கையைதான் உபயோகிப்பார்.

* முதன்முதல் அஜித் மிகவும் ஆசைப்பட்டு வாங்கிய கார் எக்ஸ்ப்ளோரர். இப்போதும் அதை வீட்டில் பத்திரமாக பாதுகாத்து வருகிறார்.

* பிரபல வீரர் அயர்டன் சென்னா தான் அஜித்துக்கு ரேஸில் ரோல் மாடல். ஒரு கார் விபத்தில் சிக்கி மே 1-ம் தேதி மரணமடைந்தார். ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் அயர்டன் சென்னா மரணத்தை நினைத்து வருந்துவார்.

* தனது குழந்தைகள் பிறந்ததில் இருந்து இப்போது வரை அவர்களின் உடல் மொழிகளை புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்து சேகரித்து வருகிறார்.

* இரவு 8 மணி மேல் யாரையும் உடனடியாக போனில் அழைக்க மாட்டார் அஜித். “நீங்கள் ப்ரீயாக இருக்கிறீர்களா?” என்று குறுந்தகவல் அனுப்புவார். ப்ரீயாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அழைப்பார்.

*மெமோரியில் பள்ளியில் படித்த ஏரோ மாடலிங் தான் தற்போது ரிமோட் விமானம், பைலட் நடவடிக்கையில் என வளர்ந்து நிற்கிறது.

* ஒரு காலத்தில் மிகத் தீவிரமான கிரிக்கெட் ப்ரியர். ஆனால் இப்போது ‘கிரிக்கெட்டுக்கான முக்கியத்துவம் எல்லா விளையாட்டுகளுக்கும் கொடுக்க வேண்டும்’ என்ற கோரிக்கை வைத்திருக்கிறார்.

* தான் நடித்த படங்கள் வெளியாகும் போது படம் ஹிட்டா என்றெல்லாம் யோசிக்க மாட்டார். நடித்து முடித்து, படம் திரைக்கு வந்துவிட்டது. இனி மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்று நினைப்பார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*