feddral bank
BREAKING NEWS

முதல் பார்வை: அன்பானவன் அசராதவன் அடங்காதவன் – அத்துமீறல்

பதிவு செய்த நாள்: 24 Jun 2017 1:02 pm
By :

மதுரையில் அடிதடி, வெட்டுக்குத்து, கொலை என சம்பவங்கள் செய்யும் ரவுடியின் கதையே ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’.

மதுரையில் செய்யும் சில பல சம்பவங்களால் பெரிய பில்டப்புடன் வலம் வரும் சிம்பு ஸ்ரேயாவைக் காதலிக்கிறார். எதிர்பாராவிதமாக ஒரு சம்பவம் செய்யப் போய் ஆள் மாறாட்டம் நிகழ்ந்து விடுகிறது. அதனால் சிறை செல்கிறார். அங்கிருந்து நண்பர் மஹத் உதவுயுடன் தப்பித்து துபாய் சென்று பெரிய டான் ஆகி தலைமறைவாகிறார். 58 வயதில் தமன்னாவைப் பார்த்ததும் காதலில் விழுகிறார். ஸ்ரேயாவுக்கு நிகழ்வது என்ன, தமன்னா சிம்புவைக் காதலித்தாரா என்பது மீதிக் கதை.

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் இரண்டாவது படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்பதில் இருந்தே படம் எப்படி இருக்கும் என்பதை எளிதாக யூகித்துக் கொள்ளலாம்.

இரண்டு கதாபாத்திரங்கள், மூன்று விதமான தோற்றங்கள் என சிம்பு பின்னிப் பெடலெடுக்க வேண்டிய படம்தான். ஆனால், அதற்கான எந்த சமிக்ஞையும் படத்தில் இல்லை.

நீங்க இல்லைன்னா நான் இல்லை என்று ரசிகர்களுக்காக டைட்டில் கார்டில் நன்றி சொல்லும் சிம்பு அதற்கான நியாயத்தைப் படத்தில் செய்யவே இல்லை.

மைக்கேல் கதாபாத்திரத்தில் எங்கே பார்த்தாலும் டி.ஆர். மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறார். மருந்துக்குக் கூட சிம்புவைப் பார்க்க முடியவில்லை. நான் டி.ஆர்.ரசிகன் என்று சிம்பு படம் பார்த்தபடி ஸ்ரேயாவிடம் சொல்கிறார். அவரோ டி.ஆருக்கு ஒரு பையன் பொறப்பான். அவன் எப்படி வரப் போறான் பார் என்று ஜோசியம் சொல்கிறார். அது ஹாஸ்யமாக இல்லாமல் நமக்கு சோதனையாக அமைந்ததுதான் மிச்சம்.

முகம் முழுக்க தாடியை வளர்த்து, பின்னந்தலையின் முடியை இழுத்து சிலுப்பி சிறப்பு என்று சொல்லி சிரிப்பதும், ஸ்லோமோஷனில் நடப்பதும், காட்சிக்கு காட்சி இன்ட்ரோ காட்சியாகவே அமைத்திருப்பதெல்லாம் ரசிகன் இதயத்தில் இறங்கிய இடி.

சிவா கதாபாத்திரம் எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. கிராபிக்ஸ் காட்சியின் தன்மை எடுபடவில்லை.

அஸ்வின் தாத்தா கதாபாத்திரம் மிக செயற்கையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வயதுக்குரிய தோற்றமோ, பாவனையோ எதுவும் இல்லை. போதாத குறைக்கு வருகிறவர்கள், போகிறவர்கள் எல்லாம் அஸ்வின் தாத்தாவின் புகழ்பாடிகளாகவே இருக்கிறார்கள். அவரின் எந்த செய்கையும் நம்பும்படி இல்லை.

சிம்பு இந்தப் படத்தில் இரண்டு சங்கதிகளை மட்டும் செய்துகொண்டே இருக்கிறார். ஒய்.ஜி.மகேந்திரன் வாய்க்குள் வாய் வைப்பது, பெண்களைக் காரணமே இல்லாமல் கண்டபடி திட்டித் தீர்ப்பது. காதல் என்ற பெயரில் சிம்பு பேசும் வசனங்களை சகித்துக்கொள்ள முடியவில்லை.

ஸ்ரேயா கொடுத்த பாத்திரத்தை சரியாக செய்ய முயற்சித்திருக்கிறார். அவருக்கு நடிப்பு வரமாட்டேன் என்று அடம்பிடிக்கிறது.

தமன்னா குட்டி குட்டி ஆடைகளுடன் வருகிறார். ஹீரோவுக்கு புகழ் புராணம் பாடுகிறார். பாடல் காட்சிகளில் தனித்துத் தெரிகிறார். மஹத் வராத நடிப்பை வம்புக்கு இழுக்கிறார். விடிவி கணேஷ், நான் கடவுள் ராஜேந்திரன், ஒய்.ஜி.மகேந்திரன், கோவை சரளா ஆகியோர் படத்தில் இருக்கிறார்கள்.

கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவில் எந்தக் குறையும் இல்லை. யுவன் ஷங்கர் ராஜா அளவுக்கு அதிகமாகவே வாசித்திருக்கிறார். அவருக்கும் இந்தப் படம் சோதனைக் காலமாகவே அமைந்திருக்கிறது.

கதை, திரைக்கதை என்று இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. எல்லாம் தான் தோன்றித் தனமான, சிம்புவின் சுய புராணமாகவே இருக்கிறது.

உன்னோட முன்னாள் காதலனோட மட்டும் அப்படி இருந்தே. என்னோட இருக்க மாட்டியா? தற்கொலை செய்யப் போகும் இளைஞன் காதலியிடம் பேசும் வசனம் இது. ஒய்.ஜி.மகேந்திரன் கைக்கும், வாய்க்கும் பத்தலை என்கிறார். சிம்பு இன்னைக்கு ராத்திரி மட்டும் லவ் பண்ணுடி என்று பாடுகிறார். ஜி.வி.பிரகாஷும் தன் பங்குக்கு பேசிவிட்டுச் செல்கிறார். இரட்டை அர்த்த வசனங்கள். மலினம் நிறைந்த வார்த்தைகள் படத்தில் உள்ளன.

கன்னிப்பசங்க சாபம் சும்மா விடாது என்று சலம்பும் சிம்பு, நான் மோசமானவன் தான் ஆனா கெட்டவன் இல்லை என்கிறார். ஆனால் இந்த மோசமானவன் ஒவ்வாத தன்மையுடன் இருக்கிறான்.

எந்த தவறும் செய்யாமல் இருக்கும் பெண் தன்னை காதலிக்கவில்லை என்பதற்காக அவள் மீது வஞ்சம் வைப்பது, பழிவாங்கத் துடிப்பது அதுவும் கடைசியில் சிம்பு பழிவாங்கப் புறப்படுவதும், பார்ட் 2வுக்கு லீட் கொடுப்பது எல்லாம் பாவத்தின் உச்சம். மொத்தத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ அத்துமீறல்!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*