feddral bank
BREAKING NEWS

வெல்லப்போவது யார்? இந்தியாவா பாகிஸ்தானா? : பாக். டிவியில் ரிச்சர்ட்ஸ், லாரா, இயன் சாப்பல் கலந்துரையாடல்!!!

பதிவு செய்த நாள்: 17 Jun 2017 10:50 am
By :

டிவி நிகழ்ச்சியில் லாரா, ரிச்சர்ட்ஸ், இயன் சாப்பல் கலந்துரையாடல்.

வரும் ஞாயிறன்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் மோதவிருப்பதையடுத்து பாகிஸ்தான் டிவியில் பிரையன் லாரா, விவ் ரிச்சர்ட்ஸ், இயன் சாப்பல் ஆகியோர் ஆட்டம் குறித்து கலந்துரையாடல் நிகழ்த்தினர்.

அதில் விவ் ரிச்சர்ட்ஸ் கூறும்போது, “பாகிஸ்தானுக்கு வெற்றி பெற வாய்ப்பு ஏதாவது இருக்கிறது என்றால் டாஸ் வென்று முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைக்க வேண்டும். இது வித்தியாசமான ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தும். இரு நாடுகள் அதற்கேயுரிய அரசியல் சிக்கல்கள் காரணமாக இந்த ஆட்டம் சுவாரசியத்தை அதிகப்படுத்தியுள்ளது, அதனால் இரு அணிகளும் நிச்சயம் பெரிய அளவில் சவாலாக ஆடும், இதில் சிறப்பாக ஆடும் அணி வெற்றி பெறும் இதைக்காணத்தான் நாம் ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார்.

லாரா உடனே, “இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் ஏனெனில் அந்த அணியிடம் ஒரு நிலையமைதி காணப்படுகிறது. பாகிஸ்தான் அணியும் ஒரு வாரத்திற்கு முன்பு இருந்தது போல் தங்களை உணரமாட்டார்கள். இந்திய அணி ஏற்கெனவே பாகிஸ்தானை வீழ்த்தியிருக்கிறது, திட்டங்களை நல்லவிதத்தில் செயல்படுத்துகிறார்கள், எனவே அடுத்த 48 மணி நேரங்களில் சர்பராஸ் மற்றும் மிக்கி ஆர்தர் நிறைய வேலைகளைச் செய்ய வேண்டியுள்ளது. அதாவது வீரர்கள் தங்கள் எந்த அளவுக்கு சிறப்பாக இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ளச் செய்வது அவசியம். இந்திய அணி போல் ரன் விகிதத்தை பாகிஸ்தானினால் பராமரிப்பது கடினம், எனவே டாஸில் வென்று நன்றாக பவுலிங் செய்து ஓவருக்கு 6 ரன்களுக்குள் என்ற விகிதத்தில் இலக்கை துரத்துமாறு வைத்துக் கொள்ள வெண்டும். ஆனால் இந்தப் போட்டி நிச்சயம் வெகு சுவாரசியமான போட்டியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை” என்றார்.

விவ் ரிச்சர்ட்ஸ், “பாகிஸ்தானை இந்தியா முந்தைய ஆட்டத்தில் எப்படி அடித்து நொறுக்கியது என்று பார்த்தோம், அதனால் பாகிஸ்தான் நிச்சயம் வித்தியாசமான ஆட்டத்துடன், அணுகுமுறையுடன் களமிறங்க வேண்டும். நிச்சயம் வித்தியாசத்துடன் களமிறங்குவார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர் உடனே இந்திய தொடக்க வீரர்களின் ஃபார்மைக் குறிப்பிட்டு இந்திய அணி வெல்ல முடியாத அணியா? என்று இயன் சாப்பலிடம் கேட்ட போது, இயன் சாப்பல், “வெல்ல முடியாத அணி” என்று எதுவும் இல்லை என்று கூற மீண்டும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ‘பிராட்மேனின் ஆஸ்திரேலிய அணியை அப்படி அழைப்பதுண்டு, 1948-ல்… என்றார், உடனே லாரா ‘எத்தனை அணிகளுக்கு எதிராக?’ என்றா இங்கிலாந்துக்கு எதிராக என்று தொகுப்பாளர் பதில் அளித்தார்.

அப்போது இயன் சாப்பல், “யாரும் வெல்ல முடியாதவர்கள் என்பதெல்லாம் இல்லை. டான் பிராட்மேனுக்கு 100 ரன்கள் சராசரிக்கு 4 ரன்களே தேவை, ஆனால் அவர் டக் அவுட் ஆகி வெளியேறினார். எனவே பிராட் மேன் வீழ்த்த முடியாதவரா? அப்படியெல்லாம் இல்லை, யார் வீழ்த்த முடியாதவர்கள்? சரி. இந்தியா வலுவான பேட்டிங் அணியாகும். எனவே வலுவான அணியாக இருக்கும் ஒரு அணி முதலில் பேட்டிங் செய்வதற்கும் இலக்கைத் துரத்துவதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. இந்தியாவுக்கு இந்த வித்தியாசம் இல்லை என்றே கருதுகிறேன் ஏனெனில் வலுவான பேட்டிங் அணியாகும் அது. ஆனால் பாகிஸ்தானிடம் ஓரளவுக்கு நல்ல பந்து வீச்சு உள்ளது. எனவே நல்ல பேட்ஸ்மெனை பாகிஸ்தான் வீழ்த்த வேண்டும். அதாவது ரோஹித் சர்மாவையோ, ஷிகர் தவணையோ வீழ்த்துவது எப்படி என்பதில் கவனமிருக்க வேண்டும். அவர்களை தொடக்கத்தில் நெருக்க வேண்டும் எந்த ஒருபேட்ஸ்மெனையும் அவர்கள் இறங்கியவுடன் நெருக்கினால் அவர்களை வீழ்த்த வாய்ப்பு கிடைக்கும். எனவே சிறந்த வீரர்களுக்கு சுலபமான சிங்கிள்கள், இரண்டுகள் என்று 20 ரன்களை எளிதில் விட்டுக் கொடுத்தால் பெரிய சிக்கலில் அகப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான். புதிய பந்தில் 2 ஸ்லிப்களை வைத்து வீச வேண்டும். அவர்களுக்கு சவால் அளிக்க வேண்டும், அதாவது நாங்கள் உங்களை அவுட் ஆக்கவே இங்கு வீசுகிறோம் என்பதை எதிரணிக்கு அறிவுறுத்த வேண்டும். எனவே இந்த இந்திய பேட்டிங் வரிசைக்கு எதிராக காத்திருப்பு ஆட்டம் ஆடினால் நீங்கள் நீண்ட காலத்திற்கு காத்திருக்க வேண்டியதுதான்” என்றார்.

எனவே இந்தியாவின் டாப் 3 வீரர்களான ரோஹித் சர்மா, தவண், விராட் கோலியை வீழ்த்தி இந்திய அணியை கட்டுப்படுத்துவது எப்படி என்ற சவாலை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது என்பதை இந்த விவாதத்தின் மூலம் அறியலாம்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*