[email protected]
feddral bank
BREAKING NEWS

கர்நாடகாவில் ‘தேவதாசி’ முறைக்குள் தள்ளப்பட்ட 10 வயது சிறுமி மீட்பு!!!

பதிவு செய்த நாள்: 17 Jun 2017 11:38 am
By :

கர்நாடகாவின் கலபுர்கி மாவட்டத்தில் கோயில் பூசாரியால் தேவதாசி முறைக்குள் தள்ளப்பட்ட 10 வயது சிறுமி, 5 வருடங்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளார்.

காலாபுர்கி மாவட்ட குழந்தைகள் நலக் குழு, சைல்ட் ஹெல்ப்லைன் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை அதிகாரிகள் இணைந்து அச்சிறுமியை மீட்டுள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய குழந்தைகள் நலக்குழு உறுப்பினரும், சமூக சேவகருமான விட்டல் சிக்கானி, ”5 வருடங்களுக்கு முன்னர் தலித் சிறுமி தேவதாசி முறைக்குள் தள்ளப்பட்டுள்ளார். ஆனால் இந்தத் தகவல் இன்றுதான் எங்களுக்குத் தெரியவந்தது. உடனே அந்தச் சிறுமியை 2 மணி நேரத்துக்குள் மீட்டுள்ளோம்.

சிறுமியின் பெற்றோரும், கோயில் பூசாரி சரணப்பாவும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். பெற்றோர்களிடம் விசாரிக்கும்போது சிறுமி நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டதாகவும், இதுகுறித்து அவர்கள் பூசாரியிடம் விவாதித்தபோது அவரே தேவதாசியாகச் சிறுமியை கோயிலுக்கு நேர்ந்துவிடுங்கள் என்று கூறியதாகவும் தெரிவிக்கின்றனர்.

தாலி கட்டிய பூசாரி

அதைத் தொடர்ந்து அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாகவும், பூசாரி சிறுமிக்கு தாலி கட்டி, மற்ற சடங்குகளைச் செய்ததாகவும் கூறினர். பல ஆண்டுகளாக சுமார் 1000 சிறுமிகளை தேவதாசிகளாக மாற்றியுள்ளதை கோயில் பூசாரி ஒப்புக்கொண்டுள்ளார்” என்று தெரிவித்தார்.

இதுகுறித்துப் பேசிய துணை ஆணையர் உஜ்வால் குமார் கோஷ், ”இந்த சம்பவம் குறித்து கிராமத்தில் இருக்கும் இரண்டு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் இதுகுறித்து அவர்கள் எதுவும் கூறவில்லை.அவர்களின் கடமையைச் சரியாகச் செய்யாததால் அவர்களையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாகப் புகார் மனுவில் சேர்த்திருக்கிறோம்.

மீட்கப்பட்ட சிறுமி அரசு சிறார் இல்லத்தில் சேர்க்கப்படுவார். கலபுர்கியிலோ, வெளி மாவட்டத்திலோ அவரைப் பள்ளியில் சேர்க்கவும் முடிவெடுத்திருக்கிறோம்” என்றார்.

தேவதாசி முறை பலகாலத்துக்கு முன்னரே ஒழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds