feddral bank
BREAKING NEWS

ஜீப் காம்பஸ் இந்தியாவில்! – விலையில் சீப்… மலையில் டாப்!

பதிவு செய்த நாள்: 16 Jun 2017 1:22 pm
By :

ஜீப் என்றால் ஏ.சி, பவர் ஸ்டீயரிங், ஹார்டு டாப் போன்ற அம்சங்கள் எதுவும் இல்லாத… கரடுமுரடான பாதைகளுக்கு மட்டுமான ஜீப் இல்லை. இது, அதுக்கும் மேலே! ஆம், அமெரிக்க நிறுவனமான ஜீப் நிறுவனத்தின் காம்பஸ் எஸ்யூவி, இந்தியாவுக்கு வருகிறது. ஜீப்பின் மாஸ்டர் பிளாஸ்டர்களான செரோக்கி, ரேங்ளர் பற்றித் தெரிந்தவர்களுக்கு இது ஒரு பிரேக்கிங் நியூஸ். ஆஃப் ரோடர், சாஃப்ட் ரோடர் என்று கலந்துகட்டிக் கலக்க இருக்கும் காம்பஸ், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட இருக்கிறது. ஃபியட் க்ரைஸ்லர்தான் இப்போது ஜீப்பின் உரிமையாளர். புனேவில் உள்ள டிராபிக் சந்துபொந்துகள், ரஃப் அண்டு டஃப் ரோடுகள், மலைச் சாலைகள் என்று காம்பஸில் ஒரு 360டிகிரி ரவுண்ட்-அப்.

பார்த்தவுடன் செரோக்கியோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. 44 டிகிரி வெயிலில் தவித்த நம்மை, காம்பஸின் ஏ.சி கொஞ்ச நேரத்திலேயே கூல் செய்கிறது. சில்வர் டல்லடிக்கும் கலர்தான். ஆனால், புனேவின் நெருக்கடி மிகுந்த சாலைகளில், ‘யே ஃபாரீன் காடி தேக்கோ’ என்று வியந்தார்கள். 2 வீல், 4 வீல் டிரைவ் என்று இரண்டு ஆப்ஷன்கள் காம்பஸில். அதேபோல்தான் பெட்ரோல்/டீசல். நாம் ஓட்டியது டீசல் இன்ஜின். ஃபியட்டின் மல்ட்டிஜெட் இன்ஜின் இது. எஸ்யூவி என்பதால், டிரைவிங் பொசிஷன் உயரமாக இருந்தது. பானெட் தாழ்வாக இருந்ததால், விஸிபிலிட்டி அதிகம். 2 லிட்டர் இன்ஜின், 170 bhp பவர், 35kgm டார்க். நெடுஞ்சாலையில் 140-ல் பறக்கும்போது இன்பமாயிருந்தது.

கிட்டத்தட்ட 180 கி.மீ வேகம் வரை பறக்கலாம்போல. ஏனென்றால், அதற்குப் பிறகும் ஆக்ஸிலரேட்டரை மிதித்தாலும் பவர் கிடைப்பதுபோல ஓர் உணர்வு. ஒரு சொகுசு செடான்போல பறந்தது காம்பஸ். குறைந்த எடை (1,717 கிலோ) கொண்டிருந்தாலும், இதன் ஸ்ட்ரெய்ட் லைன் ஸ்டெபிலிட்டி அத்தனை சூப்பர். ஹை ஸ்பீடில் கார்னரிங்கில் செம ஃபன்னாக இருந்தது. காம்பஸின் பிரேக்ஸை எவ்வளவு வேண்டுமானாலும் நம்பலாம். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட வேரியன்ட்டை இந்த ஆண்டு இறுதிக்குள் எதிர்பார்க்கலாம். திடீரென டிராஃபிக் முடிந்து ஆஃப் ரோடு ஆரம்பித்தது. மலைச் சாலையும் வந்தது. 4 வீல் டிரைவ் என்பதால், குட்டிக்குட்டிப் பாறைகளில் ஏற்றிஇறக்குவது ஜாலியாயிருந்தது. Mud, Sand, Snow, Rock என்று நான்கு மோடுகள். ரொம்பவும் கரடுமுரடான பாதைகளில் இதன் ‘Select Terrain Dial’ எனும் ஆப்ஷனைப் பயன்படுத்தி, சஸ்பென்ஷன் டேம்பர் செட்டிங்கை மாற்றிக்கொள்ளலாம். இது ரேஞ்ச்ரோவர் காரிலிருக்கும் அம்சம். சாஃப்ட்ரோடில் சொகுசு என்றால், ஆஃப் ரோடில் அசத்தல். டிசைனிலும் பின்பக்கத்தில் அப்படியே ரேஞ்ச்ரோவர் இவோக்கைப் போலவேயிருக்கிறது காம்பஸ்.

காம்பஸின் கிரவுண்ட் கிளியரன்ஸ் ரொம்ப அதிகம். அதனால், பெரியபெரிய பள்ளங்கள், தடாலடி மேடுகளைப் பற்றிப் பயப்படவேயில்லை. கிரவுண்ட் கிளியரன்ஸின் துல்லியமான அளவை இன்னும் சொல்லவில்லை ஜீப். 220 இருக்கலாம். மலைச்சாலை ஹேர்பின் பெண்டுகளில் லேசாக பாடி ரோல் இருந்தது. ஃபியட் இன்ஜின் என்றால், டர்போ லேக் இல்லாமலா? குறைந்த வேகங்களில் டர்போ லேக் தெரிந்தது. 1,800 ஆர்பிஎம்-க்குப் பிறகுதான் டேக் ஆஃப் ஆகிறது. 4,000-4,500 ஆர்பிஎம் வரை பவர் டெலிவரியில் முக்கலே இல்லை. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், ரொம்ப லைட் வெயிட். சொகுசு காரா, எஸ்யூவியா என்றால், இரண்டுக்குமே தலையாட்டுகிறது காம்பஸ். ஆஃப் ரோடுகளில் ஜீப் எஸ்யூவிகளில் கிடைக்கும் அனுபவம்; சாஃப்ட் ரோடுகளில் அதிவேகத்தில் கிடைக்கும் ஸ்டெபிலிட்டி, சொகுசு. இதுதான் ஜீப்பின் ஸ்பெஷல். ஆகஸ்ட்டில் இது ஆன் ரோடுக்கு வரும்போது கிட்டத்தட்ட 25 முதல் 30 லட்சம் இருக்கலாம். ஜீப்பின் விலைகுறைந்த கார் காம்பஸ்தான். ஃபியட்டின் சர்வீஸ் நெட்வொர்க் மட்டும் ஸ்டெடியாக இருந்தால், ஃபார்ச்சூனர், எண்டேவர் கார்களுக்கு டஃப் பைட் காத்திருக்கிறது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*