feddral bank
BREAKING NEWS

கழற்றி விடப்பட்ட கத்தார்!

பதிவு செய்த நாள்: 16 Jun 2017 12:11 pm
By :

“தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டுமாம்,’’ என்று கேலியாக கிராமங்களில் கூறப்படும் பழமொழி உண்டு.

ஆனால் சந்தைப் பொருளாதாரத்தில் உலகமே மிகச் சிறியதாக சுருங்கிவிட்ட இந்நாளில், உலகின் ஏதேனும் ஒரு மூலையில் ஒரு சிறிய சம்பவம் நிகழ்ந்தாலும் அது சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

அத்தகைய நிகழ்வுதான் கடந்த வாரம் அரங்கேறியுள்ளது. அரபு நாடுகள் தங்களின் அண்டைநாடான கத்தாருடனான அனைத்து வித ராஜீய உறவுகளையும் முறித்துக் கொள்வதாக அறிவித்தது.

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), பஹ்ரைன், எகிப்து, ஏமன் ஆகிய நாடுகளுடன் லிபியா, மாலத்தீவுகளும் சேர்ந்து கொண்டு இந்த முடிவை அறிவித்தன.

அல் கொய்தா, இஸ்லாமிக் ஸ்டேட் மற்றும் முஸ்லிம் பிரதர்ஹூட் ஆகிய தீவிரவாத அமைப்புகளுக்கு கத்தார் உதவி செய்வதாக குற்றம் சாட்டி தடை விதிப்பதாக அறிவித்தன. இதனால் இப்பிராந்தியத்தில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. கத்தாருடனான வான் வழி மற்றும் தரைவழி, கடல்வழி போக்குவரத்துக்கு சவூதி அரேபியா தடைவிதித்துள்ளது. தூதர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், கத்தார் குடியுரிமை பெற்றவர்கள் 14 நாள்களுக்குள் வெளியேற வேண்டும் என்றும் கெடு விதித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் சில தினங்களுக்கு முன்பு கத்தாருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்போருக்கு 15 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. கத்தார் நாட்டவர் தங்கள் நாட்டுக்குள் நுழைய தடையும் விதித்துள்ளது.

அமெரிக்காவின் தூண்டுதல் காரணமா?

ஈரானை தனிமைப்படுத்த அந்நாட்டுடன் நட்புறவாக இருக்கும் கத்தாரை தனிமைப்படுத்த வேண்டும். இதில் அனைத்து வளைகுடா நாடுகளும் துணிச்சலான முடிவை எடுக்க வேண்டும் என்று சமீபத்தில் வளைகுடா நாடுகளில் பயணம் சென்றிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தியிருந்தார். கத்தார் மீதான நடவடிக்கைக்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலையை நிர்ணயிப்பதுபோல இயற்கை எரிவாயு (எல்என்ஜி) விலையை நிர்ணயிப்பதில்லை. அமெரிக்காவில் ஷேல் கேஸ் எனப்படும் படுகை மீதான எரிவாயு அதிகம் கிடைக்கிறது. ஆனால் இது எல்என்ஜி-யை விட அடர்த்தி குறைவானது. இதை விற்கலாம் என்றால் இயற்கை எரிவாயு உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஈரானைக் கட்டுப்படுத்த வேண்டும். அதேபோல அதன் நட்பு நாடான கத்தாரை கட்டுக்குள் வைக்க வேண்டும். இவற்றை செயல்படுத்தவே வளைகுடா நாடுகளை ஊக்குவிக்கும் வகையில் அரபு நாடுகளை தனது வலையில் அமெரிக்கா விழ வைத்துள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

வளைகுடா நாடுகளில் பிரச்சினை என்றால் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு (அமெரிக்கா தவிர்த்து) ஏற்படும். குறிப்பாக கத்தாரின் மீதான தடை இந்தியாவுக்கு மிகப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இந்தியாவுக்கு பாதிப்பு என்ன?

கத்தாரிலிருந்து இந்தியாவுக்கு வரும் அந்நிய நேரடி முதலீடு (எப்டிஐ) பாதிக்கப்படும். இந்தியா – கத்தார் இடையிலான இரு தரப்பு வர்த்தகம் 993 கோடி டாலராகும். இந்தியாவிலிருந்து கத்தாருக்கான ஏற்றுமதி 90 கோடி டாலராகும். அடுத்த 5 ஆண்டுகளில் இரு நாடுகளிடையிலான வர்த்தகம் ஒரு லட்சம் கோடி டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்துக்கும் மேலாக கத்தாரில் 6.5 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர்.

இந்தியாவிலுள்ள பிரபல நிறுவனங்கள் கத்தாரில் பெருமளவிலான தொழில் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. லார்சன் அண்ட் டூப்ரோ, பூஞ்ச் லாயிட், ஷரபோன்ஜி பலோன்ஜி, வோல்டாஸ், சிம்ப்ளக்ஸ், டிசிஎஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் ஆகிய நிறுவனங்களோடு எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ ஆகியனவும் கிளை பரப்பியுள்ளன. 210 கோடி டாலர் சாலை திட்டத்தை லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது. இது தவிர தோகா மெட்ரோ ரயில் திட்டத்துக்கான தண்டவாளம் அமைப்பது மற்றும் கட்டுமான ஒப்பந்தத்தையும் (74 கோடி டாலர்) இந்நிறுவனம் பெற்றுள்ளது.

வாரத்துக்கு 102 விமான சேவைகளை இந்தியாவின் 13 நகரங்களிடையே இயக்குகிறது கத்தார் ஏர்வேஸ். வாரத்துக்கு 24 ஆயிரம் பேர் கத்தார் –இந்தியா இடையே பயணிக்கின்றனர்.

கட்டமைப்புத் துறை, சாலைப் போக்குவரத்து, ரயில்வே உள்ளிட்ட துறைகள் மட்டுமின்றி ராணுவ பாதுகாப்பிலும் கத்தாருடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்தியாவில் உள்நாட்டு விமான சேவையில் ஈடுபடுவதற்கு கத்தார் ஏர்வேஸ் விண்ணப்பித்துள்ளது.

கடல்சார் பாதுகாப்புக்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

இந்தியாவின் திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) தேவையில் 15 சதவீதம் கத்தாரிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. எத்தலீன், புரோபலீன், அமோனியா, பாலி எத்தலீன் உள்ளிட்டவையும் கத்தாரிலிருந்து இறக்குமதியாகிறது. அதேபோல ஜப்பான், தென் கொரியாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவிலிருந்து அதிக அளவில் பொருள்கள் ஏற்றுமதியாவதும் கத்தாருக்குத்தான்.

இந்தியாவின் நிலை

இந்தப் பிரச்சினையில் இந்தியா எந்த பக்கமும் சேர முடியாது. ஏனெனில் இது வளைகுடா நாடுகளுக்குள்ளான பிரச்சினை. மேலும் தீவிரவாத இயக்கத்துக்கு உதவுவதாகக் குற்றம் சாட்டித்தான் கத்தாரை தனிமைப்படுத்தியுள்ளன. தீவிரவாதத்தை எதிர்க்கும் இந்தியா, சுய லாபத்துக்காக கத்தாரை ஆதரிக்க முடியாது. மேலும் கத்தாரில் உள்ள 6.5 லட்சம் இந்தியர்களின் நலனைக் காக்க வேண்டிய பொறுப்பும் இந்தியாவுக்கு உள்ளது. அதிரடியாக அவர்களை இங்கு அழைத்து வரவும் முடியாது. கத்தாரில் உள்ள இந்திய வம்சாவளியினர் 2016-ம் ஆண்டில் இந்தியாவுக்கு அனுப்பிய தொகை மட்டும் 398 கோடி டாலராகும்.

கத்தாரின் நிலை

இந்தப் பிரச்சினையை கத்தார் எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதுதான் இப்போதைய பிரச்சினை. தடை விதித்துள்ள அனைத்து வளைகுடா நாடுகளும் தீவிர ஆலோசனைக்குப் பிறகே இந்த முடிவுக்கு வந்துள்ளன. இருப்பினும் இது இப்பிராந்தியத்தில் மிக மோசமான பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும். வளைகுடா நாடுகளுக்கும் கத்தாருக்கும் இடையேயான வர்த்தகம் கடந்த ஆண்டில் மட்டும் 1,100 கோடி டாலராகும். கத்தாரின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும்.

அதேசமயம் கத்தாருக்குத் தேவையான உணவுப் பொருள்கள் அனைத்தும் வளைகுடா நாடுகள் வழியாகத்தான் வந்தாக வேண்டும். இந்நிலை நீடிக்கும் பட்சத்தில் விலைவாசி உயரும், உணவுப் பொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு பொருளாதாரம் வீழ்ச்சியடையும். கடந்த வாரம் திங்கள்கிழமை இம்முடிவை வளைகுடா நாடுகள் அறிவித்த உடனேயே கத்தார் பங்குச் சந்தையில் 7.5 சதவீத அளவுக்கு சரிவு ஏற்பட்டது.

ராணுவ பலம்

ராணுவ ரீதியில் கத்தார் பலம் வாய்ந்த நாடாகக் கருத முடியாது. இதன் ஆண்டு ராணுவ செலவே 190 கோடி டாலர்தான். இது இப்பிராந்திய நாடுகள் செலவிடும் தொகையை விட மிகக் குறைவு. ஆனால் அமெரிக்க ராணுவத்துக்கு தளம் இங்கு உள்ளது. 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் இங்கு உள்ளனர்.

அல் ஜஸீரா

தோஹாவின் நிதி உதவியோடு சர்வதேச அளவில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் மிகவும் பிரபலமாக விளங்குவது அல் ஜஸீரா செய்தி சேனல். இந்த சேனலில் கடந்த மாதம் கத்தார் அமீர், ஈரான் தலைவரை புகழ்ந்து பேசிய பேட்டி ஒளிபரப்பானது. இதையடுத்து அனைத்து வளைகுடா நாடுகளும் அல்ஜஸீராவை தடை செய்துள்ளன.

இப்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அனைத்துமே குறுகிய கால அடிப்படையிலானவை.

அண்டை நாட்டை மாற்ற முடியாது. கத்தாரை சுற்றியுள்ள அனைத்து அரபு நாடுகளும் தடை விதித்ததன் மூலம் இப்போது தனித் தீவாகி விட்டது கத்தார்.

எண்ணெய் வளம் மூலம் செல்வம் கொழித்தாலும், உணவுத் தேவை உள்ளிட்ட தேவைகளுக்கு பிற நாடுகளை சார்ந்துதான் கத்தார் இருக்க வேண்டிய சூழல். இதை கத்தார் உணர வேண்டிய தருணமிது.

தீவிரவாதிகளுக்கு நேசக்கரம் நீட்டுவது, ஈரானுடன் நட்பு பாராட்டுவதை கத்தார் நிறுத்தாதவரை இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது கடினம்.

மேலும் இதில் பிற நாடுகள் தலையிட்டு சமரசம் செய்து வைக்க முடியாது. குறிப்பாக அமெரிக்காவின் சமரசத்தை கத்தார் ஏற்காது.

உணவு தண்ணீர் சப்ளை தொடர்பாக ஈரான், துருக்கி ஆகிய நாடுகளுடன் கத்தார் பேச்சு நடத்தி வருகிறது.

ஈரானை தனிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அரபு நாடுகள் கத்தார் மீது தடை விதிக்க இப்போது ஈரானிடம் உதவி கேட்பது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

இப்பிராந்திய நாடுகளே பேசி இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதுதான் இப்போதைக்கு உள்ள ஒரே வழியாகும்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*