feddral bank
BREAKING NEWS

‘கொங்கு மண்டலத்துக்கு இது தங்கத் தருணம்!’ – பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டும் பழனிசாமி லாபி

பதிவு செய்த நாள்: 21 Apr 2017 2:44 pm

அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் இணைவதில் மீண்டும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. கே.பி.முனுசாமியும் அமைச்சர் ஜெயக்குமாரும் ஆளுக்கொரு பக்கம் நின்று பேசுவதால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் அ.தி.மு.க தொண்டர்கள். ‘பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு கொடுத்த 11 எம்.எல்.ஏக்களும் எடப்பாடி பழனிசாமி பக்கம் சாய்வதற்கு ஒப்புக் கொண்டனர். பேச்சுவார்த்தை தொடங்குமா என்பது சந்தேகம்தான்”; என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

‘சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டு வாருங்கள்’ எனப் பன்னீர்செல்வம் வைத்த வேண்டுகோளை ஏற்று, ‘இரண்டு அணிகளும் இணைவது கட்சியில் எதிர்காலத்துக்கு நல்லது என்பதால் நான் ஒதுங்கிக் கொள்கிறேன்’ என வழிவிட்டார் தினகரன். இதனையடுத்து, இரண்டு தரப்பினரும் அதிகாரபூர்வமாக பேச்சுவார்த்தையைத் தொடங்காத நிலையில், ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டும் வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் ஒன்றுகூடிய நேரத்திலேயே, ‘முதலமைச்சர் பதவி உள்பட முக்கியமான அமைச்சர் பதவிகளைக் கேட்கிறார் பன்னீர்செல்வம்’ எனப் பற்ற வைத்தார் எம்.எல்.ஏ வெற்றிவேல்.

ஜெயக்குமாரும் பன்னீர்செல்வம் அணியின் கோரிக்கைகளுக்கு எதிராகப் பதில் கூறியிருந்தார். இதுகுறித்து நேற்று பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, ‘கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா இருக்கிறார் என தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளனர். இதனை வாபஸ் வாங்க வேண்டும். சசிகலா மற்றும் தினகரனிடம் இருந்து ராஜினாமா கடிதத்தைப் பெற வேண்டும். அவர்கள் குடும்பத்தில் இருந்து 30 பேரை நீக்கியதாக அறிவிப்பு வெளியிட வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றினால் இணைவோம். இல்லையென்றால், பேச்சுவார்த்தைக்கு செல்லமாட்டோம். நாங்கள் முதல்வர் பதவியோ, பொதுச்செயலாளர் பதவியோ கேட்கவில்லை. பேச்சுவார்த்தை என்று கூறி அழைப்புவிடுத்து அமைச்சர்கள் அவமானப்படுத்துகின்றனர். தினகரனை வெளியேற்றிவிட்டதாகவும் நாடகமாடுகின்றனர். கருணாநிதியின் வெற்றிடத்தை பன்னீர்செல்வம் நிரப்புவார். சசிகலா தயவால் முதல்வரான எடப்பாடி பழனிசாமி எப்படி சரியாக செயல்பட முடியும்?’ என ஆவேப்பட்டார். இந்தப் பேட்டியைக் கண்டு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எந்த விளைவையும் காட்டவில்லை.

“;எடப்பாடி பழனிசாமியின் மௌனத்துக்குப் பின்னால் மிகப் பெரிய விஷயங்கள் நடந்து வருகின்றன. ‘ஜெயலலிதா இருந்த சமயத்தில் நிதி அமைச்சராக பன்னீர்செல்வம் இருந்தார். அது அப்படியே தொடரட்டும். அமைச்சரவையில் பாண்டியராஜன், சண்முகநாதன் ஆகியோருக்கு இடம் கொடுக்கிறோம்’ என்று கொங்கு மண்டல அமைச்சர்கள் உறுதியாகக் கூறிவிட்டனர். இதனை பன்னீர்செல்வம் தரப்பினர் ஏற்கவில்லை. தவிர, முன்பு இருந்ததுபோல தற்போது எந்தப் பலமும் இல்லாமல் பன்னீர்செல்வம் இருக்கிறார். கொங்கு மண்டலத்தில் வி.சி.ஆறுக்குட்டி, அருண்குமார், ஓ.கே.சின்னராஜ் உள்ளிட்ட மூன்று எம்.எல்.ஏக்கள் பன்னீர்செல்வம் பக்கம் இருந்தனர். இதில், ஆறுக்குட்டி மட்டும் வேலுமணியோடு முரண்பட்டு நிற்கிறார். மற்ற இருவரும் எடப்பாடி பழனிசாமி பக்கம் வந்துவிட்டனர்.

தற்போதுள்ள சூழ்நிலையில், பன்னீர்செல்வம் உள்பட இரண்டு பேர்தான் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக உள்ளனர். ‘ 130 எம்.எல்.ஏக்களுக்கு மேல் தனிபலத்தோடு நாம் இருக்கிறோம். எதற்காக அதிகாரத்தை விட்டுக் கொடுக்க வேண்டும்? கட்சி அதிகாரத்தை பன்னீர்செல்வம் எடுத்துக் கொள்ளட்டும். அமைச்சரவையை கொங்கு கேபினட் என்று சொல்லும் அளவுக்கு தனி சிறப்போடு வலம் வருகிறோம். நமக்கு டெல்லி ஆதரவும் இருக்கிறது. சமூகரீதியாக நாம் நல்ல பலத்தில் இருக்கிறோம். வெறும் 2.5 சதவீதம் மட்டுமே உள்ள தென்மாவட்ட சமூகம் ஒன்றுக்கு நான்கு அமைச்சர்களைக் கொடுத்துள்ளனர். அதிகாரத்தை விட்டுக் கொடுத்துவிட்டால், எந்தக் காலத்திலும் நம்மால் முதலிடத்துக்கு வர முடியாது’ என விவாதித்து வருகின்றனர். இதைப் பிரதமரிடம் எடுத்துக்கூறி கிளியரன்ஸ் வாங்கிவிட்டார் தம்பிதுரை. இதை அறிந்துதான் முனுசாமியைப் பேசவிட்டு ஆழம் பார்க்கிறார் பன்னீர்செல்வம். தற்போது இறங்கி வர வேண்டிய இடத்தில் அவர்தான் இருக்கிறார். நாங்கள் அல்ல”; எனக் கொதித்தார் கொங்கு மண்டல அ.தி.மு.க சீனியர் ஒருவர்.

“;இரட்டை இலைச் சின்னத்தை மீட்டு, அம்மா காட்டிய வழியில் பயணிக்க வேண்டும் எனக் கடந்த நான்கு மாதங்களாக சரியான உறக்கம் இல்லாமல் செயல்பட்டு வருகிறார் பன்னீர்செல்வம். சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்தை எதிர்த்து பகிரங்கமாக குரல் கொடுத்தார். இதனால், சொந்த மாவட்டத்திலேயே நுழைய முடியாது எனத் தெரிந்திருந்தும் அவர் அஞ்சவில்லை. மக்கள் ஆதரவோடு அவர் வலம் வந்தநேரத்தில், முதல்வர் பதவிக்காக கூவத்தூரில் விழுந்து கிடந்தார் எடப்பாடி பழனிசாமி. ‘அம்மா மரணத்துக்கு விசாரணைக் கமிஷன் வேண்டும்’ என உண்ணாவிரதமும் இருந்தார் ஓ.பி.எஸ். தற்போது அணிகள் இணையும்போதும், ‘விசாரணைக் கமிஷன் அமைப்பதைப் பற்றியோ, சசிகலாவை கட்சியில் இருந்து நீக்குவதைப் பற்றியோ எந்த வார்த்தையும் சொல்லாமல் இருக்கிறார் பழனிசாமி. இதில் இருந்தே அவரை இயக்குவது மன்னார்குடி குடும்பம்தான் என்பது தெளிவாகிறது. ‘தினகரன் வேண்டாம். சசிகலா போதும்’ என திவாகரனின் வார்த்தைகளை சாசனமாக எடுத்துச் செயல்படுத்தி வருகிறார். நாங்கள்தான் பெரும்பான்மை பலத்தோடு இருக்கிறோம் எனச் சொல்பவர்கள், சசிகலா பெயரை முன்வைத்து ஒரு தேர்தலை சந்தித்துவிட்டு வரட்டும். ஆர்.கே.நகர் தேர்தல் பிரசாரத்திலேயே சசிகலா பெயரை ஓரம்கட்டியவர்கள் இவர்கள். மறைமுகமாக சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முனைகிறார்கள். மீண்டும் ஒரு தர்மயுத்தத்தை நடத்துவதற்கும் பன்னீர்செல்வம் தயாராக இருக்கிறார்”; எனக் குமுறி கொந்தளித்தார் பன்னீர்செல்வம் அணியின் ஆதரவாளர் ஒருவர்.

“;அ.தி.மு.கவை பல துண்டுகளாக சிதறி சின்னாபின்னமாக்கும் ஆப்ரேஷன் மிகத் துல்லியமாக நடந்து வருகிறது. தங்கள் பலத்தை தமிழ்நாட்டில் காட்டுவதற்காக மத்திய அரசு நடத்தும் பொம்மலாட்டம் இது”; என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"