[email protected]
feddral bank
BREAKING NEWS

ஓ.பி.எஸ் அணி நிபந்தனை! அடுத்த நகர்வில் முதல்வர் பழனிசாமி

பதிவு செய்த நாள்: 21 Apr 2017 2:45 pm

பன்னீர்செல்வம் அணியின் நிபந்தனையைத் தொடர்ந்து, கட்சியின் தலைமை அலுவலகத்தில், மூத்த அமைச்சர்களுடன்முதல்வர் பழனிசாமி முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார்.

கட்சியிலிருந்து சசிகலா குடும்பம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக பழனிசாமி அணியினர் அறிவித்ததோடு, 'கட்சியையும் சின்னத்தையும் காப்பாற்ற, பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்' என்று கூறினர். இதை வரவேற்ற பன்னீர்செல்வம், 'சசிகலா குடும்பம் தள்ளிவைக்கப்பட்டது… நாங்கள் நடத்திய தர்மயுத்தத்துக்குக் கிடைத்த முதல் வெற்றி' என்றார்.

இதனிடையே, 'பன்னீர்செல்வத்தின் நிர்பந்தத்தால் சசிகலா குடும்பத்தை தள்ளிவைக்கவில்லை என்றும், அமெரிக்காவில் ட்ரம்ப்பின் வெற்றிக்கு நான்தான் காரணம் என்றுகூட பன்னீர்செல்வம் சொல்வார்' என்றும், அமைச்சர் ஜெயக்குமார் நேற்று பேட்டியளித்தார். இதற்கு பதிலடிகொடுக்கும் விதமாக பன்னீர்செல்வம் அணியினர், 'ஜெயக்குமார் அரசியல் முதிர்ச்சியில்லாதவர்' என்று சாடியதோடு, 'கட்சியிலிருந்து தினகரன் தள்ளிவைக்கப்பட்டுள்ளது நாடகம் என்றும், சசிகலா, தினகரனிடம் இருந்து ராஜினாமா கடிதம் பெற வேண்டும்' என்றும் நிபந்தனை விதித்தனர்.

இதனிடையே, 'அ.தி.மு.க-வைக் காப்பாற்ற வேண்டும், சின்னத்தைக் கைப்பற்ற வேண்டும், நிபந்தனை எதுவும் விதிக்க வேண்டாம்' என்று அ.தி.மு.க அம்மா கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ-க்கள் குணசேகரன், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் பன்னீர்செல்வம் அணிக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த நிலையில், பன்னீர்செல்வம் அணியினரின் நிபந்தனையைத் தொடர்ந்து, முதல்வர் பழனிசாமி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று மூத்த அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார். இந்த ஆலோசனையில், அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் மற்றும் வைத்திலிங்கம் எம்பி., பங்கேற்றுள்ளனர். பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தைக் குழு அமைப்பதுகுறித்து ஆலோசிக்கப்பட்டுவருவதாகக் கூறப்பட்டாலும், பன்னீர்செல்வம் அணியினரின் நிபந்தனை தொடர்பாக முக்கியமாக ஆலோசிக்கப்பட்டுவருகிறது.

இதனிடையே, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில், பன்னீர்செல்வம் இன்று தனது அணியினருடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Like our official page to unlock the content
Or wait 60 seconds