feddral bank
BREAKING NEWS

“உங்களுக்கு அரசியல் பத்தியம் அவசியம்!” தி.மு.க-வுக்கு தா.பாண்டியனின் அறிவுரை!

பதிவு செய்த நாள்: 21 Apr 2017 2:44 pm

விவசாயிகள் பிரச்னையில் நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து வரும் 25-ம் தேதி தமிழத்தில் பொது வேலைநிறுத்தத்திற்கு தி.மு.க தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பொதுவேலை நிறுத்தத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தங்களது தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் அவர்களை அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டில் சந்திதோம். அவரிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.

''தி.மு.க தலைமையில் ஒன்றிணைந்து விட்டீர்களே?''

''விவசாயிகள் பிரச்னை, வறட்சி என்று தமிழகம் தவித்துக் கொண்டு இருக்கிறது. டெல்லியில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டங்கள் நடக்கின்றன. வறட்சிக்கு உரிய நிவாரணம் தராமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது. இயற்கையோடு மத்திய அரசின் அரசியல் தாக்குதலும் தமிழகத்துக்கு வந்துள்ளது. மத்திய அரசின் ஜனநாயகமற்ற செயல்களைக் கண்டித்து, ஒன்றுபட்டு செயல்படுவதில் தவறு இல்லை. பி.ஜே.பி கால் ஊன்றுவதைத் தடுக்க யாரோடும் கூட்டு சேரலாம்.''

''அமைச்சர்கள் மீதும், அதிகார வர்க்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மீதும் திடீர் நடவடிக்கைகள் பாய்கிறதே?''

''தமிழ்நாட்டில் இப்போது நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது, ஆளும் கட்சியை குறிவைத்து, மத்திய அரசின் தாக்குதல் இருக்கிறது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் கொடுத்தத் தீர்ப்பை மத்திய அரசு ஏற்காவிட்டாலும் நாம் ஏற்க வேண்டும். அடுத்த சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும்வரை, இப்போது ஆட்சியில் இருக்கும் கட்சியை ஆட்சி நடத்த அனுமதிக்க வேண்டும். இன்னும் பச்சையாகச் சொல்லப்போனால், ஆளும்கட்சியானது, அவர்களுடைய கடமையைச் செய்யத்தவறினால் எதிர்க்கட்சி என்ற முறையில் விமர்சிக்கலாம். தேவைப்பட்டால் சகோதரனை அடிப்பதுபோல அடிக்கவும் செய்யலாம். ஆனால், எக்காரணம் கொண்டும் வேறு யாருக்கும் இடம் தரக் கூடாது.''

''பி.ஜே.பி ஆளும் மாநிலங்களில் வளர்ச்சி ஏற்படுகிறது என்று சொல்கிறார்களே?''

''அது வெறும் மாயை. அவர்கள் நோக்கம் தெளிவாக இருக்கிறது. சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் கோவாவிலும், மணிப்பூரிலும் வெற்றி பெற்றும் ஆட்சி அமைக்க முடியாமல் போய் விட்டது. எனவே, சகோதரப் பிளவுகளை மறந்து, அந்த முதல் எதிரியை எதிர்க்க நாம் ஒன்றுபட வேண்டும்.''

''தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று தி.மு.க மூத்த தலைவர்கள் சொல்கிறார்களே?''

''இப்போதைய அரசியல் சூழ்நிலையில், திராவிட இயக்கங்கள், தங்களுக்குள் இருக்கும் கருத்து மாறுபாடுகளை சற்று ஒதுக்கி வைக்கவேண்டும். உடல் சுகமில்லாமல் நோய்வாய்பட்டவர்கள் சிலவகை உணவுகளை ஒதுக்கி வைப்பார்கள். அதுபோல, பி.ஜே.பி-யை முறியடிக்கும் வரையில் தி.மு.க அரசியல் பத்தியம் இருக்க வேண்டும்.''

''இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கிவிட்டதே?''

''இரட்டை இலையில் நின்று ஜெயித்த எம்.எல்.ஏ-க்களை, எம்.பி-க்களை சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் அ.தி.மு.க என்ற முறையில்தான் அழைக்கிறார்கள். தேர்தல் ஆணையத்துக்கு மட்டும், இவர்கள்தான் அ.தி.மு.க-வா என்று சந்தேகம். அதற்காக இரட்டை இலையை முடக்கியிருக்கிறார்கள். இது, ஜனநாயகப் படுகொலை.''

''பி.ஜே.பி ஆட்சியை பிடிக்கும் என்று அக்கட்சி தலைவர்கள் பேசி வருகிறார்களே?''

''தேர்தல் மூலம் அவர்களால் காலூன்ற முடியாது. அவர்கள், கன்னக்கோல் போட்டு குழப்பத்தை ஏற்படுத்தி, ஏதாவது செய்து விடலாமா என்று துடிக்கிறார்கள். தமிழக மக்கள் விபரம் தெரிந்தவர்கள். தாமரை ஒரு நாளும் தமிழகத்தில் மலராது.''

''தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல்…?''

''ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு தமிழக அரசியலில் ஒரு நிலையற்றத்தன்மை நீடிக்கிறது.''

-எஸ்.முத்துகிருஷ்ணன்

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"