news@tamilnewsbbc.com
feddral bank
BREAKING NEWS

ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா: தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

பதிவு செய்த நாள்: 21 Apr 2017 2:44 pm

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், தேர்தல்ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு, ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடப்பதாக இருந்தது. அ.தி.மு.க அம்மா அணி சார்பில் டி.டி.வி தினகரன், அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனன், தி.மு.க சார்பில் மருதுகணேஷ் உள்ளிட்ட 62 பேர் களத்தில் நின்றனர். இந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

கடந்த 6-ம் தேதி நள்ளிரவு, பணப்பட்டுவாடா தொடர்பாக கட்சிகளுக்குள் கைக்கலப்பு நடந்தது. இதனால், ஆர்.கே.நகர் தொகுதியில் பதற்றம் அதிகரித்தது. பிரச்னை நடந்த மறுநாளே சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி, முன்னாள் எம்பி., சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

வருமானவரி சோதனையில் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கியதாகக் கூறப்பட்டது. அதுமட்டுமன்றி, பணம் பட்டுவாடா தொடர்பாக அமைச்சர்களின் பெயர்ப்பட்டியல் அடங்கிய ஆவணம் ஒன்றும் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியதாகக் கூறப்பட்டது. இந்தத் தகவல், ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு, ஆர்.கே.நகர் தேர்தலை ரத்துசெய்வதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த நிலையில், ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாசெய்தவர்கள், பணம் பெற்ற வாக்காளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாகப் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜூலை 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Like our official page to unlock the content
Or wait 60 seconds