feddral bank
BREAKING NEWS

’விளைபொருளுக்கு உரிய லாப விலை கொடு’.. விவசாயிகள் உடலில் எழுதப்பட்டுள்ள வாசகம்!

பதிவு செய்த நாள்: 12 Apr 2017 5:48 pm

டெல்லியில் 30-வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழக விவசாயிகள், இன்று தங்கள் கோரிக்கைகளை உடலில் எழுதிப் போராடிவருகின்றனர்.

டெல்லி ஜந்தர்மந்தரில், கடந்த 14-ம் தேதி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்  காலவரையற்ற போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காவிரி மேலாண்மை அமைப்பு, பயிர்க்கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, வித்தியாசமான போராட்டங்களில் விவசாயிகள் ஈடுப்பட்டுவருகின்றனர். 

மண்டை ஓடு, மண் சட்டி, தூக்குக் கயிறு, எலிக்கறி, பாம்புக்கறி போன்றவற்றை வைத்துப்  போராட்டம் நடத்திவந்த விவசாயிகள், நேற்று முன்தினம் திடீரென்று நிர்வாணப் போராட்டம் நடத்தினர்.  'பிரதமர் நரேந்திர மோடி, எங்களை நேரில் சந்தித்து கோரிக்கைகளைக் கேட்கவில்லை' என்று குற்றம்சாட்டிய விவசாயிகள், டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகம் முன்பு நிர்வாணப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். டெல்லிக் காவல்துறை அவர்களைக் கைதுசெய்து அழைத்துச்சென்றது.

இந்த நிலையில், விவசாயிகள் இன்று தங்கள் உடலில், ‘விளைபொருளுக்கு உரிய லாப விலை கொடு’, ‘வறட்சி நிவாரணம்’, போன்ற கோரிக்கைகளை வாசகங்களாக  உடலில் எழுதிப் போராட்டம் நடத்திவருகின்றனர்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"