feddral bank
BREAKING NEWS

மக்கள்நல கூட்டணியை தொடர்ந்து நடத்தி செல்வோம்-திருமா

பதிவு செய்த நாள்: 29 Dec 2016 12:16 pm

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுவை உப்பளம் துறைமுக மைதானத்தில் அரசியல் அமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு நடந்தது.

மாநாட்டுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அமுதவன், தமிழ்மாறன், செல்வநந்தன், அரிமாத்தமிழன், தமிழ் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுவை மாநில முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் வரவேற்றார்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், புதுவை மாநில செயலாளர் ராஜாங்கம், இந்திய கம்யூனிஸ்டு தமிழ் மாநில செயலாளர் முத்தரசன், புதுவை மாநில செயலாளர் விசுவநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சிந்தனை செல்வன், ரவிக்குமார், முகமது யூசுப் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மாநாட்டில் தொல்.திருமாவளவன் மாநாட்டு மலரை வெளியிட்டு பேசினார். அவர் பேசியதாவது:-

மாநாட்டு மேடையில் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் உள்ளனர். ஆனால், வைகோ இல்லை என்ற வருத்தம் எனக்கு உள்ளது. மோடி அரசின் பொருளாதார கொள்கையால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், வைகோவுடனான நம் நட்புக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மோடியின் பொருளாதார கொள்கை வைகோவுக்கும், நமக்கும் உள்ள நட்பை சிதைத்து விட்டது. ஆனாலும், அவர் தனது உயர்நிலைக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை அறிவிக்கும் போது, மக்கள் நல கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. வெளியேறினாலும், கட்சி தலைவர்களிடம் உள்ள நட்பு என்றென்றும் தொடரும் என்று அறிவித்துள்ளார். அது நமக்கு ஆதரவையும், மகிழ்ச்சியையும் தருகிறது.

கம்யூனிஸ்டு கட்சிகளும், விடுதலை சிறுத்தைகளும் தொடர்ந்து மக்கள்நல கூட்டணியை நடத்தி செல்வோம். தேர்தல் ஆதாயத்துக்கு மட்டுமே உறவுகளை கட்டமைப்பது அல்ல நம் நோக்கம். மக்கள் பிரச்சனைகளுக்காக மக்களை ஒருங்கிணைத்து தற்போது பணியாற்ற வேண்டிய வரலாற்று தேவை உள்ளது என்பதை உணர்ந்து உள்ளோம்.

அதன் அடிப்படையில் தான் பிரதமர் நரேந்திர மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த நாளில் இருந்து விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகிறது. பிரதமர் மோடியிடம் நமக்கு என்ன பிரச்சனை தனிப்பட்ட வெறுப்பு ஏதும் உண்டா. இல்லை.

கருப்பு பணத்தை ஒழிக்க கள்ள நோட்டு புழக்கத்தை ஒழிக்க, தீவிரவாத செயல்களை தடுக்க, ஊழலை ஒழிக்க என்று பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். ஆனால், அது உண்மை இல்லை. அவரது நோக்கம் அதுவல்ல என்று சொல்வதற்குதான் இந்த மாநாட்டை கூட்டியுள்ளோம்.

ரூபாய் நோட்டுகளை ஒழிப்பதாக அறிவிப்பதற்கு முன்பு இது குறித்து பிரதமர் பாராளுமன்றத்தில் விவாதித்தாரா? அல்லது அமைச்சரவையில் விவாதித்தாரா? இல்லை. பிரதமர் நரேந்திர மோடியின் இந்த அறிவிப்பு முறை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது.

மோடி தற்போது எடுத்து வரும் நடவடிக்கைகளால் மட்டுமே கருப்பு பணத்தை ஒழித்து விட முடியாது. ஏனென்றால், மத்திய அரசின் கொள்கை தவறான கொள்கை நோக்கம் தவறானது. இன்னும் 50 நாட்கள் ஆனாலும் கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது.

இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

பிரதமர் நரேந்திர மோடியின் செல்லாத நோட்டு அறிவிப்பால் சில்லறை வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வணிகர்கள் மட்டுமல்லாமல், கடைகளில் வேலை பார்க்கும் கோடிக்கணக்கான ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செல்லாத நோட்டு அறிவிப்பு மக்களின் அடிப்படை உரிமையை பறிப்பதாகும். கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைத்து மோடி தலைமையிலான மத்திய அரசு நாள் தோறும் அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. பாராளுமன்ற ஜனநாயகத்தை சர்வாதிகாரத்தை நோக்கி மோடி அரசு இழுத்து செல்கிறது.

எனவே, இந்த பேராபத்தை எதிர்க்க அனைத்து ஜனநாயக சக்திகளும் போராட முன்வர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி அழைப்பு விடுக்கிறது. மோடி அரசு மறைமுகமாக திணித்துள்ள பொருளாதார அவசர நிலையை முறியடிப்போம்.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds