[email protected]
feddral bank
BREAKING NEWS

புத்தாண்டு கொண்டாட்டங்கள்: நட்சத்திர ஓட்டல் உரிமையாளர்கள்,கிளப் உரிமையாளர்களுக்கு போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவு

பதிவு செய்த நாள்: 29 Dec 2016 11:59 am
By :

சென்னையில் நட்சத்திர ஓட்டல்களில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போலீசார் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். நள்ளிரவு 1 மணி வரை மது விருந்து மற்றும் நடன நிகழ்ச்சிகளுக்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.

சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின்பேரில் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் பற்றி ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நட்சத்திர ஓட்டல் உரிமையாளர்கள், கிளப் உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

போலீஸ் தரப்பில் தென்சென்னை கூடுதல் கமிஷனர் சங்கர், தென்சென்னை இணை கமிஷனர் அன்பு, சென்னை கிழக்கு இணை கமிஷனர் மனோகரன் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

புத்தாண்டு கொண்டாட்டங்களில் நடைமுறைப்படுத்த வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்தக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

* பொழுதுபோக்கு இடங்களில், புத்தாண்டு தினத்தைக் கொண்டாட அனுமதி கோரி விண்ணப்பிப்போருக்கு, 31.12.2016 அன்று மாலை 6 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை, கொண்டாட்டங்களுக்கான சிறப்பு உரிமம் வழங்கப்படும். நள்ளிரவு 1 மணியுடன் நட்சத்திர ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் உணவு வழங்குதல், மதுபான விற்பனை மற்றும் நடன நிகழ்ச்சிகளை நிறுத்தி கொள்வதோடு புத்தாண்டு கொண்டாட்டங்களை கண்டிப்பாக முடித்து கொள்ள வேண்டும்.

* நட்சத்திர ஓட்டல் உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகளுக்கு வரும் வாகனங்கள் முறையாக சோதனை செய்யப்பட வேண்டும். அனைத்து நுழைவாயில்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, வளாகத்திற்குள் வரும் வாகனங்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.

* அனுமதி வழங்கப்பட்டுள்ள இடங்களைத் தவிர மற்ற இடங்களில் மது வகைகளை பரிமாறக் கூடாது. குறிப்பாக நடன நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் மது வகைகளை பரிமாற அனுமதிஇல்லை.

* நீச்சல் குளத்தின் மீதோ அல்லது அருகிலோ தற்காலிக மேடைகள் அமைத்தல் கூடாது.

* கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக, தற்காலிக மேடைகள் அமைக்கப்படும் பட்சத்தில், மேடையின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் வண்ணம் சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து தகுதிச் சான்றிதழ் பெறப்பட வேண்டும்.

* நீச்சல் குளங்களை 31.12.2016 அன்று மாலை 6 மணிமுதல் 1.1.2017 அன்று காலை 6 மணிவரை மூடி வைத்திருக்க வேண்டும்.

* விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வெளிநாட்டவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகம் சரிபார்க்கவேண்டும்.

* கேளிக்கை நடன நிகழ்ச்சிகள் நடக்கும் அறையில் பெண்களிடம் முத்தம் கொடுத்தல் போன்ற அத்துமீறும் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஓட்டல் நிர்வாகத்தினர் போதிய பணியாளர்களை நியமித்து கண்காணிக்க வேண்டும்.

* நீச்சல் குளத்திற்கு செல்லும் வழிகள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு தடைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

* அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கும் கூடுதலான விருந்தினர்களை நிர்வாகிகள் உள்ளே அனுமதிக்கக்கூடாது.

* மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும். மது அருந்தி வெளியே வரும் விருந்தினர்களை, மாற்று வாகனம் மூலம் அனுப்பி வைக்க, நிர்வாகிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

* குடிபோதையில் அத்துமீறல் செயல்களில் ஈடுபடுபவர்களை விடுதி நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்துதல் வேண்டும்.

* நிர்வாகத்தினர், கேளிக்கை நிகழ்ச்சிகள் மிகுந்த நாகரிகத்துடனும், கண்ணியத்துடனும் நடத்துவதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

* விதிமுறைகளை மீறும் விடுதி நிர்வாகத்தினர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முடிவு செய்யப்பட்டது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*