[email protected]
feddral bank
BREAKING NEWS

சசிகலா புஷ்பா கணவர் மீது தாக்குதல் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மோதல் பரபரப்பு

பதிவு செய்த நாள்: 29 Dec 2016 2:39 pm

அ.தி.மு.க. மகளிர் அணி செயலாளராக இருந்த சசிகலா புஷ்பாவை கட்சியில் இருந்து மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நீக்கினார்.

இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடப் போவதாக சசிகலா புஷ்பா அறிவித்தார்.

நேற்று மதியம் 1.45 மணியளவில் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வக்கீல்கள் என்று கூறிக் கொண்டு 10 பேர் வந்திருந்தனர். அவர்கள் நேராக கட்சி அலுவலகத்தில் கீழ்தளத்தில் உள்ள அறைக்கு சென்றனர்.

அப்போது அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் திரண்டிருந்தனர். ராதாபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. இன்பதுரையும், கட்சி அலுவலகத்தில் இருந்தார். அவர் அலுவலகத்துக்கு அருகில் நின்றவர்களிடம் சந்தேகப்பட்டு நீங்கள் யார் என்று கேட்டார். அப்போது அதில் ஒருவர் நான் சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரன் என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து இன்பதுரை அவரிடம் உனக்கு இங்கு என்ன வேலை என்று கேட்டார். அப்போது ஈரோடு முன்னாள் மாவட்ட செயலாளர் சிந்து ரவிச்சந்திரனும் உடனிருந்தார். இந்த நிலையில் லிங்கேஸ்வரனுக்கும், சிந்து ரவிச்சந்திரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நேரத்தில் சிந்து ரவிச்சந்திரன் திடீரென தாக்கப்பட்டார். அவரது கைக்கடிகாரமும் உடைந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அ.தி.மு.க.வினர் லிங்கேஸ்வரனை சரமாரியாக தாக்கினர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதன் பிறகே போலீசார் லிங்கேஸ்வரனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே இன்ப துரை எம்.எல்.ஏ.வும், சிந்து ரவிச்சந்திரனும் ராயப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். சிந்து ரவிச்சந்திரன் ஒரு புகார் அளித்தார்.

அதில் அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் அத்துமீறி நுழைந்து சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரன் என்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். எனது உடமைக்கும், சேதம் விளைவித்தார் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுபற்றி ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து லிங்கேஸ்வரனை கைது செய்தனர்.

இதற்கிடையே அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பொன்னையன் நேற்று பேட்டி அளித்தபோது சசிகலா புஷ்பா கணவர் தாக்கப்பட்டது தொடர்பாக நிருபர்கள் கேட்டனர். அதற்கு பொன்னையன் கூறியதாவது:-

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வந்த ஒருவர் விரும்பத்தகாத செயலில் ஈடுபட்டதன் காரணமாக கட்சி தொண்டர்கள் சிலர் ஆத்திரப்பட்டு அவரை தாக்கியுள்ளனர். இதை வன்முறை செயல் என்று கூற முடியாது.

நமக்கு பிடிக்காத நபர் நம் வீட்டுக்கு வந்தால் அங்கு என்ன நிகழுமோ அது போன்ற நிகழ்வுதான் நடந்துள்ளது. இதனை வன்முறை செயல் என்று கூற முடியாது. அது ஒரு இயற்கையான நிகழ்வு. வன்முறை சம்பவம் எதுவும் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடைபெறவில்லை. தொண்டர்கள் தங்கள் உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர். அ.தி.மு.க. எப்போதும் வன்முறை செயல்களில் ஈடுபட்டதில்லை. இந்த இயக்கம் வன்முறை செயலில் ஈடுபடும் இயக்கம் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் சசிகலா புஷ்பா உள்துறை செலலாளர் மற்றும் சென்னை போலீஸ் கமி‌ஷனருக்கு ஒரு புகார் மனு அனுப்பினார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு சென்ற எனது கணவரை ரத்த காயத்துடன் போலீசார் அழைத்து சென்றனர். நான் உடனடியாக எனது வக்கீல் உதவியுடன் ராயப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கும், மயிலாப்பூர் போலீஸ் நிலையத்திற்கும், ராயப்பேட்டை மருத்துவமனைக்கும் சென்று விசாரித்தபோது எந்த விவரமும் தெரியவில்லை என்று கூறி விட்டார்கள். என்னுடைய கணவரை கடைசியாக காவல் துறையினர்தான் அழைத்து சென்றார்கள்.

என்னுடைய கணவரின் உடலுக்கும் மற்றும் உயிருக்கும் எந்தவித ஆபத்து வந்தாலும் தமிழக காவல் துறையினர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். இது சம்பந்தமாக உடனடியாக விசாரணை செய்து எனது கணவர் பற்றிய தகவல் வழங்குமாறும், அவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*