feddral bank
BREAKING NEWS

பிரதமரிடம் 29 அம்சங்கள் அடங்கிய 141 பக்க கோரிக்கை மனுவை கொடுத்தார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

பதிவு செய்த நாள்: 20 Dec 2016 10:15 am
By :

தமிழக முதல்- அமைச்சராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக நேற்று டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

அப்போது, பிரதமரிடம் 29 அம்சங்கள் அடங்கிய 141 பக்க கோரிக்கை மனுவை அவரிடம் கொடுத்தார்.

இந்த சந்திப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

டெல்லியில் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை 19-ந் தேதி (நேற்று) மாலை 5 மணி அளவில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்.

ஜெயலலிதா இறந்த சோகமான சூழ்நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுவதை அப்போது முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார். டிசம்பர் 6-ந் தேதியன்று சென்னைக்கு வந்து ஜெயலலிதாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதற்கு பிரதமருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

கடந்த 12-ந் தேதியன்று தமிழகத்தின் வட மாவட்டங்களில் 140 கி.மீ. வேகத்தில் வார்தா புயல் வீசிய சம்பவம் குறித்தும், அதனால் ஏற்பட்ட இழப்புகள் குறித்தும் பிரதமரிடம் அவர் விளக்கி கூறினார். புயல் பாதிப்பை வெகுவாக குறைக்கும் அளவுக்கு போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது பற்றியும் ஓ.பன்னீர்செல்வம் எடுத்துரைத்தார்.

இந்த புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான முழு விளக்கம் அடங்கிய மனு ஒன்றை பிரதமரிடம் கொடுத்த அவர், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக ரூ.22 ஆயிரத்து 573 கோடி பணம் தேவைப்படுகிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.

தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக ஆயிரம் கோடி ரூபாயை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமரிடம் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் வலியுறுத்தினார்.

புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கிடுவதற்காக மத்திய குழுவை அமைத்ததற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்த அவர், 29 அம்சங்கள் கொண்ட கோரிக்கை மனுவை பிரதமரிடம் அளித்தார்.

மாநில அரசின் வளர்ச்சிக்காகவும், அதன் நலன் காக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் அந்த 29 அம்ச கோரிக்கைகளையும் மத்திய அரசின் உடனடி கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டார்.

காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் இறுதி ஆணைப்படி உடனடியாக அமைப்பதை பிரதமர் உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கர்நாடகாவின் மேகதாது திட்டத்தை பற்றிய கவலை, முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்துவது, நதிகள் இணைப்பு, அத்திக்கடவு அவிநாசி திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு, அணைப் பாதுகாப்பு மசோதாவில் தமிழகத்தின் சந்தேகங்கள், தேசிய நீர் கட்டமைப்பு மசோதா ஆகியவை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கொடுத்த மனுவில் வலியுறுத்தப்பட்ட சில அம்சங்களாகும்.

பாக் நீரிணைப் பகுதியில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமையை பாதுகாப்பது, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது, கச்சத்தீவை மீட்டெடுப்பது, மீன்பிடி மாற்று திட்டம் தொடர்பாக சிறப்பு ஒருங்கிணைப்பு திட்டம் ஆகிய அம்சங்களும் கோரப்பட்டன.

ஆழ்கடல் மீன்பிடி வழிகாட்டியை ரத்து செய்வது, எஸ்.டி. இனத்தவர் பட்டியலில் மீனவர்களை சேர்ப்பது ஆகிய அம்சங்களும் அதில் வலியுறுத்தப்பட்டு உள்ளன.

செய்யூர் அல்ட்ரா மெகா மின் திட்டம் தொடர்பான அனுமதி, மாநிலங்களுக்கு இடையேயான பசுமை மின்பாதை திட்டம் ஆகியவையும் அந்த மனுவில் கோரப்பட்டு உள்ளன.

4-வது நிதிக்குழுவின் தாக்கத்தால் வந்த பாதகமான சூழ்நிலையில் ஈடு செய்வதற்கான சிறப்பு நிதித் தொகுப்பாக ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடி அனுமதிப்பது, நீதித்துறையின் உள்கட்டமைப்பை பலப்படுத்துவதற்காக சிறப்பு நிதி அனுமதிப்பது, நிலுவையில் உள்ள 13-வது நிதிக்குழுவின் தொகை, 2015-ம் ஆண்டுக்கான தேசிய பேரிடர் நிவாரணத் தொகை ஆகியவை கோரப்பட்டது.

சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான கருத்துகள் பகிரப்பட்டன. மத்திய விற்பனை வரி இழப்பீட்டை உடனே தரும்படி கோரிக்கை விடுக்கப்பட்டது.

போலீஸ் படையை நவீனப்படுத்தும் திட்டத்துக்கு ஒதுக் கப்படும் நிதியை உயர்த்துவது தொடர்பாகவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கொள்கை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் இருப்பதை பிரதமருக்கு முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எடுத்து கூறினார்.

‘நீட்’ என்ற தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வால் தமிழகத்தின் ஊரகப் பகுதி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், எனவே அந்த தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், கால்நடை மருத்துவ தகுதித் தேர்வுக்கான எதிர்ப்பும் காட்டப்பட்டது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவாக அமைப்பது, முன்மொழியப்பட்டுள்ள தேசிய மருத்துவ கமிஷன் மசோதா, இந்திய மருத்துவ கவுன்சில் சட்ட திருத்தம் ஆகியவை பற்றிய தமிழகத்தின் கருத்தும் மனுவில் எடுத்துரைக்கப்பட்டு உள்ளது.

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிலை குறித்து பிரதமரிடம் ஓ.பன்னீர்செல்வம் எடுத்துரைத்தார். மேலும் வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்பு ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கி, அதை நடத்துவதற்கு சட்ட ரீதியாக வழிவகை செய்யும் வகையில் மத்திய சுற்றுச்சூழல், வனத் துறைக்கு உத்தரவு வழங்க வேண்டும் என்றும் பிரதமரை அவர் வலியுறுத்தினார்.

நோக்கியா கம்பெனியின் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டு, ஸ்ரீபெரும்புதூரில் மின்னணு உற்பத்தி கேந்திரத்தை மீட்டெடுக்க தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டார்.

மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கொச்சி-பெங்களூர் கெயில் பைப்லைன் திட்டம், சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவதற்கான முன்மொழிவு, சென்னையில் உள்ள ‘சிப்பெட்’ தலைமை அலுவலகத்தை டெல்லிக்கு மாற்றும் திட்டம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலை பிரிவுக்கு சிறப்பு நிவாரண உதவி நிதி மற்றும் இந்த பிரிவை தேசிய பேரிடர் நிவாரண நிதித் திட்டத்தில் சேர்ப்பது பற்றியும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வேளாண்மையில் சூரிய மின்சக்தி பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான மத்திய மானியத்தை உயர்த்துவது, தென்னந்தோப்புகளை சீரமைத்து மறுபடி நடுவது பற்றிய திட்டத்துக்கான அனுமதி, பிரதமரின் பாசல் பீம யோஜனா திட்டம், தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் சிறு பாசன திட்டத்தின் விரிவாக்கம்,

“அபேடா” மண்டல அலுவலகத்தை தமிழகத்தில் ஏற்படுத்துவது, ராஷ்டிரீய கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின்படி அசல் அனுமதியை திரும்பப் பெறுதல், பிரதமரின் கிரிஷி சிஞ்சய் யோஜனா திட்டத்தின் பகுதி திட்டத்தை (கமாண்ட் ஏரியா திட்டம்) தொடர்வது, மரபணு மாற்ற கடுகு பயிரீட்டை தடுப்பது ஆகிய கோரிக்கைகளும் அந்த மனுவில் இடம் பெற்றுள்ளன. தேசிய கால்நடை இயக்கத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் அனைவரும் பயனாளிகளாக இருப்பதால், கூடுதலாக மாதத்துக்கு 85 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி தேவைப்படுகிறது. எனவே கிலோவுக்கு ரூ.8.30 என்ற வீதத்தில் அரிசி தர வேண்டும் என்றும் கூடுதலாக ஏற்படும் ரூ.1,453 கோடி செலவை இதன் மூலம் தவிர்க்க வகை செய்ய வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டு உள்ளது.

தமிழகத்துக்கு கூடுதல் மண்ணெண்ணெய் தேவை என்றும், பொதுவினியோக திட்டத்தில் நேரடி பயன்பாடு மாற்றுத்திட்டம் தேவையில்லை என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் நிலுவையில் உள்ள பணிகள், அதன் இரண்டாம் பாகத்திற்கு தேவையான உதவி, ரெயில்வே நிலம் தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தில் மாற்றம் ஆகியவையும் கோரிக்கை மனுவில் இடம்பெற்றுள்ளன.

வார்தா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவாஸ் கிராமின் யோஜனா திட்டத்தின் கீழ் கூடுதல் வீடு ஒதுக்கீடு, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு தரப்பட வேண்டிய பாக்கித்தொகையை விரைவில் அளிப்பது ஆகிய கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டுள்ளன.

தேசிய ஊரக குடிநீர் திட்டத்தின் வழிகாட்டியில் முன்மொழியப்பட்ட மாற்றம் தொடர்பான தமிழக அரசின் கருத்து வலியுறுத்தப்பட்டு உள்ளது. சீரமைப்பு மற்றும் நகர்ப்புறமாக்கும் திட்டத்தின் கீழ் 4 நகராட்சிகளை சேர்ப்பது ஆகிய அம்சங்களும் கோரப்பட்டு உள்ளன.

நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் சென்னை புறவழி வட்டச்சாலை திட்டம், சென்னை நகர உட்கட்டமைப்பு திட்டம் ஆகியவற்றை இணைக்கும்படி கோரப்பட்டு உள்ளது.

ஜவுளித்துறையில், திருப்பூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு பொது நிலையத்தை அமைக்க கூடுதல் நிதி, ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்ட நிதி, தேசிய கைத்தறி மேம்பாட்டு திட்டத்துக்கான மத்திய அரசின் நிதி ஆகியவை கோரப்பட்டு உள்ளன.

தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கை பற்றி மனுவில் விளக்கமாக எடுத்துரைக் கப்பட்டு உள்ளது. பள்ளிக் கல்வி திட்டங்களுக்கான நிலுவையில் உள்ள தொகை கோரப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்களுக்கான கல்வி நிதியுதவியில் பாக்கித்தொகை கேட்கப்பட்டது. அரசு கேபிள் டி.வி.க்கு டி.ஏ.எஸ். உரிமம் கோரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை கேட்கப்பட்டு இருக்கிறது. வேறு மதங்களுக்கு மாறிய எஸ்.சி. இனத்தவருக்கு அதே இனத்துக்கான நிலையை தொடர்ந்து வழங்கவும் கோரப்பட்டு உள்ளது.

தமிழ்மொழியை மத்திய அரசின் அலுவல் மொழியாக ஆக்குவதோடு, சென்னை ஐகோர்ட்டில் வழக்காடு மொழியாக தமிழைக் கொண்டு வரவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகள் அனைத்தையும் உடனடியாக கவனிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டார்.

பொதுச் சேவையின் மூலம் லட்சக்கணக்கான மக்களை கவர்ந்த ஜெயலலிதாவுக்கு ‘பாரத் ரத்னா’ விருதை வழங்க வேண்டும் என்று பிரதமரை அவர் கேட்டுக்கொண்டார். பாராளுமன்றத்தில் ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கலச் சிலையை அமைக்கவும் கோரிக்கை விடுத்தார்.

முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வைத்த கோரிக்கைகள் மற்றும் அவர் அளித்த மனுவில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள், ஜெயலலிதாவுக்கு பாரத் ரத்னா விருது வழங்குவது பற்றிய கோரிக்கை ஆகியவை குறித்து விரைவாக முடிவு எடுப்பதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds