தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் இன்று 95-வது பிறந்தநாளை கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் கொண்டாடினார்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அன்பழகனுக்கு வீட்டுக்கு சென்று பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
மு.க. அழகிரி, மாவட்ட செயலாளர்கள் பி.கே. சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம், மா.சுப்பிரமணியம், ப.ரெங்கநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் வாழ்த்து கூறினார்கள்.
உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியை நேற்று அன்பழகன் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். அப்போது அன்பழகனுக்கு கலைஞர் பிறந்த நாள் வாழ்த்து கூறினார்.
பொன்னாடை வழங்கி தனது மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி வருமாறு:-
கழகத்தினருக்கு கொள்கை வகுப்பெடுக்கும் பேராசிரியர். தலைவர் கலைஞரின் அரசியல் பயணத்தில் என்றென்றும் தோள் கொடுத்து துணை நிற்கும் தோழர். எமக்கு ஊக்கமளித்து ஆக்கப்பூர்வ ஆலோசனைகள் வழங்கும் நல்லாசான்.
இரு வண்ணக்கொடியும், பகுத்தறிவு சுயமரியாதை கொள்கைகளும் காலத்தால் அழியாத செல்வங்கள் என்பதை உணர்ந்து, லட்சிய வாழ்வு வாழும் பெருந்தகை.
நூறாண்டு கடந்த திராவிட இயக்கத்தை 94 வயதிலும் கட்டிக்காக்கும் உறுதிமிக்க உள்ளம். முதுமையை வயதுக்கு மட்டும் அளித்துவிட்டு, சிந்தனையில் எப்போதும் இளமையாகவும், வலிமையாகவும் இருக்கும் பேராசிரியர் பெருந்தகை அவர்கள் நூறாண்டு கடந்தும் நலமுடன் வாழ்ந்து கழகத்திற்கும், தலைவர் கலைஞருக்கும் என்றென்றும் துணை நிற்க வணங்குகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.