[email protected]
feddral bank
BREAKING NEWS

வார்தா புயலால் சிதைந்த சென்னையை களமிறங்கி சீரமைத்த முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம்

பதிவு செய்த நாள்: 16 Dec 2016 3:49 pm

முதல்-அமைச்சரை பார்ப்பது, நேரில் சந்திப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இது தான் தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக நிலவி வரும் சூழ்நிலை.

காமராஜர் முதல்- அமைச்சராக இருந்த போது சாதாரணமாக தெருக்களில் நடந்து சென்றதாக கேள்விப்பட்டிருக்கிறோம். பார்த்தது இல்லை. இப்போதும் பல மாநிலங்களில் முதல்- மந்திரிகள் சாதாரணமாக செல்வதை பார்க்கும்போது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அப்படிப்பட்ட சூழ்நிலை இல்லை என்று ஏங்குவதுண்டு.

நீண்ட இடைவேளைக்கு பிறகு அந்த கவலையை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தீர்த்து வைத்துள்ளார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற ஓ. பன்னீர் செல்வம் நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் பொறுப்புகளில் பல ஆண்டுகளாக செயலாற்றி வந்தவர். அமைச்சராக இருந்த போது பல பகுதிகளை சுற்றி பார்த்து வந்தவர்.

இப்போது முதல்- அமைச்சரான பிறகும் அதே போல் கெடுபிடி இல்லாமல் சுற்றி வருவது மக்களை ஆச்சரியமாக திரும்பி பார்க்க வைத்துள்ளது.

வார்தா புயல் தாக்கிய நாள் அதிகாலை 6 மணிக்கே ஓ.பி. எஸ் கோட்டையில் பணியில் இருந்தார். முந்தைய நாள் (ஞாயிற்றுக்கிழமை) ஏற்கனவே அனைத்து துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார். புயல் தாக்கினால் எடுக்க வேண்டிய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

வார்தா புயல் எப்படி வருமோ என்ற பீதியில் மக்கள் இருந்ததை போல் முதல்- அமைச்சரும் புயலின் வருகையை உன்னிப்புடன் கவனித்துக் கொண்டிருந்தார்.

தாக்கியது புயல். சிதைந்தது சென்னை. மறுகணமே மீட்பு பணிகளும், நிவாரணப் பணிகளும் தொடங்கியது.

மறுநாள் (செவ்வாய்) நேரடியாகவே ரிப்பன் மாளிகைக்கு சென்று நிவாரணப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் நியூ ஆவடி ரோடு பகுதியில் நேரில் சென்று பணிகளை பார்த்தார். மர அறுவை எந்திரங்கள் மூலம் மரங்களை அறுத்து ஊழியர்கள் அப்புறப்படுத்தியதை நேரில் பார்வையிட்டார். கீழே இறங்கி பணிகளை பார்வையிட்டதை பார்த்து அந்த பகுதி மக்கள் ஆச்சரியப்பட்டனர்.

அதை தொடர்ந்து பழவேற்காடு பகுதிக்கு சென்று பார்த்தார். அப்போது மீனவ கிராமங்களை சேர்ந்த பிரதிநிதிகள் முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து தங்கள் குறைகளை தெரிவித்தனர். அந்த பகுதியில் பாலம் அமைக்கவும், சேதம் அடைந்த மீன்பிடி உபகரணங்களுக்கு நிவாரணம் வழங்கவும் கேட்டுக்கொண்டனர்.

மறுநாள் புதன்கிழமை முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் வண்டலூர் மிருக காட்சி சாலையை நேரில் சென்று பார்த்தார். பெரும்பாலான மரங்கள் விழுந்து சிதைந்து கிடந்ததை பார்த்து சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தும்படி கேட்டுக்கொண்டார்.

அங்கிருந்து மாம்பாக்கத்துக்கு சென்ற முதல்- அமைச்சர் அங்கு நடைபெற்ற மின் சீரமைப்பு பணிகளை பார்த்தார்.

எண்ணூர் கத்திவாக்கம், மாத்தூர், பொன்னேரி பகுதிகளில் முகாம்களில் தங்கியிருந்த மக்களையும் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினார். அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவுகளை தானே ருசித்து பார்த்த பிறகுதான் வழங்கினார்.

நேற்று சென்னையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, சி.பி.ராமசாமி சாலை, டர்ன் புல்ஸ் சாலை, ஆர்ச் மி‌ஷப் மாதியாஸ் அவென்யூ பகுதிகளில் நேரில் சென்று மரங்கள் வெட்டி அகற்றப்படுவதை பார்த்தார். பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு ரொட்டி மற்றும் குடிநீர் பாட்டில்களை வழங்கி உற்சாகப்படுத்தினார்.

முதல்-அமைச்சரின் இந்த புதிய ஸ்டைல் மக்களை கவர்ந்துள்ளது. வியப்பில் ஆழ்ந்துள்ள அவர்கள் அதிசயமாக பார்க்கிறார்கள். பாராட்டுகிறார்கள். இதே பாணியில் பணிகள் தொடர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds