ரூபாய் நோட்டு விவகாரத்தால் நாடு முழுவதும் மக்கள் கொதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். வங்கி மற்றும் ஏ.டி.எம்.களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் எடுப்பதால் மக்கள் மிகுந்த வேதனைக்கு ஆளாகி வருகிறார்கள்.
ரூபாய் நோட்டு விவகாரத்தில் மேற்கு வங்காள மாநிலத்தில் தான் அதிகமான எதிர்ப்பு இருக்கிறது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மாநில முதல்-மந்திரியுமான மம்தா பானார்ஜி மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் நேற்று மேற்கு வங்காள மாநிலத்துக்கு சென்றார். மம்தா பானர்ஜி மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகளை சந்தித்து விட்டு அவர் விமான நிலையம் சென்றார்.
கொல்கத்தா விமான நிலையத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேலை கருப்பு கொடியுடன் வந்த காங்கிரஸ் தொண்டர்கள் ஆவேசம் அடைந்து முற்றுகையிட்டனர். சிலர் தொண்டர்கள் அவரை கீழே தள்ளினர்.
உர்ஜித் பட்டேலுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர். அதோடு கையில் வைத்திருந்த கருப்பு கொடியை கிழித்து உர்ஜித் பட்டேல் மீது வீசி எறிந்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு அதிகாரிகள் உர்ஜித் பட்டேலை பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.