[email protected]
feddral bank
BREAKING NEWS

மதுரையில் 500 கோடிக்கு செல்லாத நோட்டுகள் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி பழுதானதால் பரபரப்பு

பதிவு செய்த நாள்: 15 Dec 2016 10:03 am

கடந்த மாதம் 8-ந்தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து அந்த நோட்டுகளை இந்த மாதம் 31-ந்தேதி வரை வங்கிகளில் டெபாசிட் செய்து கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது.

இதனால் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்து வருகிறார்கள். அவ்வாறு வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்யும் ரூபாய் நோட்டுகளை வங்கிகள் அனைத்தும் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியில் ஒப்படைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலத்தில் இருந்து ரெயில் மூலம் பழைய, கிழிந்த ரூபாய் நோட்டுகளை எடுத்துச் செல்லும்போது ரூ.5¾ கோடி கொள்ளையடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைகள் வழியாக கன்டெய்னர் லாரிகள் மூலம் மட்டுமே ரூபாய் நோட்டுகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்று வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அந்த வகையில் மதுரையில் 7 வங்கிகளில் வசூலான 500, 1,000 ரூபாய் நோட்டுகளை கன்டெய்னர்கள் மூலம் சென்னை ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. அதன்படி 7 வங்கிகளில் இருந்து ரூ.2,100 கோடிக்கு செல்லாத நோட்டுகள், மதுரை ஞானஒளிவுபுரத்தில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி கிளைக்கு நேற்று கொண்டு வரப்பட்டன. ஏராளமான பெட்டிகளில் அந்த நோட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டன. அந்த பெட்டிகள், 3 கன்டெய்னர் லாரிகளில் ஏற்றப்பட்டு, நேற்று மாலை 4 மணியளவில் சென்னை புறப்பட தயார் நிலையில் இருந்தன.

இந்த லாரிகளில், கரூர் வைஸ்யா வங்கி கிளை துணை மேலாளர் உமாபதி தலைமையில் வங்கி ஊழியர்கள் செல்வதற்காக இருந்தனர். ஒவ்வொரு கன்டெய்னர் லாரியிலும் 2 துப்பாக்கி ஏந்திய போலீசாரும், வங்கி ஊழியர்களும் ஏறிக்கொண்டனர். அதேபோல அந்த 3 லாரிகளுக்கு முன்பும், பின்பும் பாதுகாப்புக்காக செல்லும் வகையில் தலா 2 போலீஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்தநிலையில் 500 கோடிக்கு செல்லாத நோட்டுகள் ஏற்றப்பட்டு இருந்த ஒரு கன்டெய்னர் லாரியில் திடீரென பழுது ஏற்பட்டது.

இதனால் அந்த லாரியும், மற்ற 2 லாரிகளும் புறப்பட முடியாதநிலை ஏற்பட்டது.

அப்போது மாலை 5 மணியாகி விட்டது. லாரிகள் மாலை 6 மணிக்குள் புறப்படவில்லையென்றால் இரவில் அனுப்பி வைக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் போலீசார், வங்கி அதிகாரிகள் இடையே பதற்றம் ஏற்பட்டது.

இதனால் உடனடியாக மற்றொரு கன்டெய்னர் லாரி ஏற்பாடு செய்யப்பட்டு அதில் பணப்பெட்டிகளை மாற்றும் பணி துரிதப்படுத்தப்பட்டது. சிறிதுநேரத்தில் மாற்று லாரியில் பணப்பெட்டிகள் ஏற்றப்பட்டு சரியாக மாலை 5¾ மணியளவில் அந்த வண்டி உள்பட 3 லாரிகளும் புறப்பட்டுச் சென்றன. இதனால் வங்கி அதிகாரிகளும், போலீசாரும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர்.

இந்த லாரிகள் இன்று அதிகாலையில் உளுந்தூர்பேட்டைக்கு சென்று நிறுத்தி வைக்கப்படும். அங்கு ஓய்வுக்கு பின்னர் காலையில் புறப்பட்டு சென்னை ரிசர்வ் வங்கிக்கு சென்றடையும் என்று போலீசார் தெரிவித்தனர்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds