news@tamilnewsbbc.com
feddral bank
BREAKING NEWS

பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடும் அமளியால் ஒத்திவைப்பு

பதிவு செய்த நாள்: 15 Dec 2016 4:30 pm

பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன நிலையில், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுவருவதால் முக்கிய பணிகள் எதுவும் நடைபெறவில்லை. அவை முடக்கத்திற்கு மத்திய அரசின் பண ஒழிப்பு நடவடிக்கை தான் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதுதவிர தனிப்பட்ட ஊழல் தொடர்பான பிரச்சனைகளும் இணைந்துள்ளதால் அமளி, ஒத்திவைப்பு தொடர்கிறது.

பண ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக விவாதம் நடத்த தயாராக இருப்பதாக அரசு கூறுகிறது. ஆனால், வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் பிடிவாதமாக உள்ளனர். எனவே, பிரச்சினை முடிவுக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது பண ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக காங்கிரஸ் பிரச்சனை எழுப்பியது. இதற்கு பா.ஜ.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனால் மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையிலும் இது எதிரொலித்தது. பண ஒழிப்பு நடவடிக்கையால் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் அவர்களின் அவல நிலை குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் மாநிலங்களவையில் நோட்டீஸ் கொடுத்தார். அவரை பேசுவதற்கு துணை சபாநாயகர் அனுமதி அளித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.

அப்போது, பேசிய குலாம் நபி ஆசாத், முதல் முறையாக ஆளுங்கட்சி அவையை நடத்த விடாமல் இடையூறு செய்வதாக குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து அமளி நீடித்ததால் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

12 மணிக்கு அவை கூடியபோது, பண ஒழிப்பு நடவடிக்கையால் விவசாயிகள் படும் துன்பங்கள் குறித்து குலாம் நபி ஆசாத் பேசினார். ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் விவகாரத்தை எழுப்பினர். இதனால் மாநிலங்களவையில் அமளி தொடர்ந்தது. இதனால் 30 நிமிடங்களுக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது. 30 நிமிடம் கழித்தும் அவையை நடத்த முடியாத நிலை நீடித்ததால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல் 12 மணிக்குப் பிறகு மக்களவையிலும் கடும் அமளி ஏற்பட்டது. இதனால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds