news@tamilnewsbbc.com
feddral bank
BREAKING NEWS

பழவேற்காடு பகுதியில் வார்தா புயலால் 500 படகுகள் சேதம் மீனவர்கள் கண்ணீர்

பதிவு செய்த நாள்: 14 Dec 2016 11:34 am

நேற்று முன்தினம் வார்தா புயல் கரையை நெருங்கி வரும்போதே, பழவேற்காட்டில் கடல் கொந்தளிக்க தொடங்கிவிட்டது. காலையில் இருந்து மதியத்திற்குள் சுழன்றடித்த சூறாவளி காற்றால் கடல் தண்ணீர் ஊருக்குள் புகுந்தது.

இதனால், கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படகுகள் கடல் தண்ணீரில் ஊருக்குள் இழுத்து செல்லப்பட்டன. வீட்டில் இருந்த ஆண்கள் மட்டும், வெளியே வராமல் அப்படியே முடங்கிப்போனார்கள். மாலை நேரத்திற்கு பிறகு தான் கடல் கொந்தளிப்பு குறைந்து, கடல்நீர் உள்வாங்கத் தொடங்கியது.

அப்பாடா… என்று மீனவர்கள் பெருமூச்சு விட்டாலும், வெளியே சென்று ஏற்பட்ட பாதிப்பை பார்க்க முடியவில்லை. திக்… திக்… நிமிடங்களோடே இரவுகளை அவர்கள் கடந்தனர்.

நேற்று காலை விடிந்ததும், மீனவர்கள் ஓடோடிச் சென்று தங்களது பைபர் படகுகளை தேடினர். ஆனால், பல படகுகள் ஊருக்குள் இழுத்து வரப்பட்டு சேதமடைந்து கிடந்தன. சில படகுகள் அதிர்ஷ்டவசமாக சேதமடையாவிட்டாலும், வீடுகளுக்கு இடையே சிக்கிக் கிடந்தன. கடல் நீர் புகுந்ததில், சில வீடுகளில் இருந்த பொருட்களும் நாசமாகின.

இதனால், மீனவர்கள் சோகத்துடன் காணப்பட்டனர். கடலுக்கு அருகே கரையோரம் கிடந்த படகுகளை மீனவர்கள் பலர் சேர்ந்து, கடலுக்குள் கயிறு கட்டி இழுத்தனர். ஆனால், ஊருக்குள் கிடந்த படகுகளை அவர்களால் மீட்டுக் கொண்டுவர முடியவில்லை.

‘வார்தா’ புயல் பாதிப்பு குறித்து பழவேற்காடு கூனங்குப்பம் பகுதி மீனவர்கள் பாபு, செல்வம், இளங்கோ ஆகியோர் கூறியதாவது:-

1984-ம் ஆண்டுக்கு பிறகு நாங்கள் இப்போது தான் மிகப்பெரிய புயலை பார்த்திருக்கிறோம். இந்தப் பகுதியில் 15 மீனவ குப்பங்கள் உள்ளன. சுமார் 1,200 பைபர் படகுகள் இங்கே உள்ளன. புயல் ஆபத்து இருப்பதாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதால், நாங்கள் யாரும் கடலுக்குள் செல்லவில்லை.

வீட்டில் இருந்த பெண்கள், குழந்தைகளை பாதுகாப்பாக வெளியே அனுப்பிவிட்டோம். உடமைகளை பாதுகாக்க அனைத்து வீட்டிலும் ஆண்கள் மட்டுமே இருந்தோம். புயல் சென்னையை நெருங்கியபோதே, இங்கே கடல் கொந்தளிக்க தொடங்கிவிட்டது. இதனால், கடல் நீரும் ஊருக்குள் புகுந்தது. நேரம் செல்லச்செல்ல காற்று பலமாக வீசியதுடன், கடல்நீரின் அளவும் அதிகரித்தது. சில வீடுகளை பாதியளவுக்கு கடல் நீர் புகுந்ததால், வீட்டில் இருந்தவர்கள் பயந்துபோனார்கள்.

பொழுது சாய்ந்தபோது தான் (மாலை நேரம்) காற்றின் வேகம் குறைந்து, கடல் நீர் உள் வாங்கத் தொடங்கியது. அதன் பிறகே நிம்மதி அடைந்தோம். ஆனால், இன்று (நேற்று) விடிந்ததும், சென்று பார்த்தால், எங்கள் படகுகளை நிறுத்திய இடத்தில் காணவில்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக ஊருக்குள் சிதறிக் கிடந்தன. சுமார் 500 படகுகள் புயலால் சேதமடைந்தன.

படகுகளின் பொருத்தப்பட்டிருந்த மோட்டாரும் தண்ணீரில் மூழ்கி நாசமானது. படகுகளில் வைக்கப்பட்டிருந்த மீன்பிடி வலைகளும் மண்ணால் மூடிப்போய் கிடக்கிறது. இன்னும் சில பேரின் வலைகளை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, உடனடியாக, அரசு எங்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும். ஊருக்குள் கிடக்கும் படகுகளை பொக்லைன் எந்திரங்கள் மூலம் தூக்கி பத்திரமாக கடற்கரையில் விடவேண்டும். சேதமடைந்த படகுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

தற்போது, புயல் தாக்குதல் ஓய்ந்த நிலையில், நேற்று மதியம் முதல், பொன்னேரியில் தங்க வைக்கப்பட்டிருந்த சேர்ந்த மீனவ குடும்பத்தினர் திரும்பி வந்தனர். பழவேற்காடு மேம்பாலத்தில் அவர்கள் குடும்பம் குடும்பமாக நடந்து வந்தது பார்ப்போரையும் பரிதாபப்பட வைத்தது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds