feddral bank
BREAKING NEWS

நாங்கள் பேசக்கூடிய பிரதமரை தந்திருக்கிறோம்-ராகுல் காந்திக்கு அமித்ஷா பதில்

பதிவு செய்த நாள்: 13 Dec 2016 5:01 pm

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் மந்திரி ரமன் சிங் தலைமையிலான பா.ஜ.க. அரசின் 13-ம் ஆண்டு நிறைவுவிழாவையொட்டி, அம்மாநில தலைநகரான ராய்ப்பூரில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு மக்களுக்காக என்ன செய்திருக்கிறது? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பி வருகிறார். அவருக்கு முதலில் ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

நாங்கள் பேசக்கூடிய பிரதமரை தந்திருக்கிறோம். நீங்கள் நாட்டுக்கு தந்த பிரதமர் (மன்மோகன் சிங்) குரலை நாட்டு மக்கள் கேட்டதே இல்லை. அவரது குரல் உங்களுக்கும் உங்கள் தாயாருக்கும் (சோனியா) மட்டுமே தெரியும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான முந்தைய மத்திய அரசின் பத்தாண்டு ஆட்சிக்காலத்தின்போது சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்கள் நடைபெற்றன. எங்கள் தலைமையிலான பா.ஜ.க. அரசின்மீது எதிர்க்கட்சிகளால் இதுவரை ஒரேயொரு ஊழல் குற்றச்சாட்டைகூட சுமத்த முடியவில்லை. அந்த அளவுக்கு தூய்மையான, வெளிப்படையான ஆட்சியை நாங்கள் வழங்கி வருகிறோம்.

மக்களின் பிரச்சனைகளை தனது பிரச்சனையாக ஏற்று செயல்படக்கூடிய பிரதமரை நாங்கள் தந்திருக்கிறோம். எங்களது தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் ஏழை, எளியவர்ளுக்கு நன்மை தரும் 92 நலத்திட்டங்களை கடந்த இரண்டரை ஆண்டுகளில் பிரதமர் மோடி தொடங்கி வைத்திருக்கிறார்.

சமீபகாலம்வரை கருப்புப் பணத்துக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என்று எங்களைப் பார்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தன. ஆனால், நவம்பர் மாதம் 8-ம் தேதிக்கு பிறகு, இவ்வளவு கடுமையான நடவடிக்கைகளை ஏன் எடுத்தீர்கள்? என்று கேட்க தொடங்கி விட்டனர்.

கடந்த 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் வேரூன்றிப்போன கருப்புப் பணத்துக்கு ஒரேயொரு அதிரடி நடவடிக்கையின் மூலம் பிரதமர் மோடி முடிவுகட்டியுள்ளார். இதன் மூலம் லஞ்சம், தீவிரவாதம் ஆகியவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும், கருப்புப் பணத்துக்கு எதிரான இந்தப்போர் இனியும் தொடரும்.

இந்த நடவடிக்கையின் மூலம் கிடைக்கும் பணம் விவசாயிகள், தலித் மக்கள், பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினர் மற்றும் பெண்களின் நல்வாழ்வு திட்டங்களுக்காக செலவிடப்படும்.

கடந்த இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் பா.ஜ.க. அரசு என்ன செய்திருக்கிறது? என்று எங்களைப் பார்த்து ராகுல் காந்தி கேட்கிறார். ஓய்வுக்காக அதிக நாட்களை செலவிடுவதால் உங்களால் செய்திகளை அறிந்துகொள்ள முடிவதில்லை.

அதுமட்டுமின்றி, நீங்கள் பயன்படுத்தும் கூலிங்கிளாஸ் இத்தாலி நாட்டில் தயாரிக்கப்பட்டது. அதை கழற்றிவிட்டு, இந்திய நாட்டில் தயாரிக்கப்பட்ட கூலிங்கிளாஸை அணிந்துகொண்டு பாருங்கள். அப்போதுதான், இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் எல்லாம் உங்களுக்கு தெளிவாக தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds