[email protected]
feddral bank
BREAKING NEWS

சென்னையில் இன்று மாலைக்குள் அனைத்து பகுதிகளிலும் முழுமையாக மின்வினியோகம்-அமைச்சர் பி.தங்கமணி தகவல்

பதிவு செய்த நாள்: 13 Dec 2016 12:52 pm

வார்தா புயல் சுழற்றியடித்து கோர தாண்டவம் ஆடியதில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் சாய்ந்து கிடக்கின்றன. பல பகுதிகளில் மின்வயர்கள் அறுந்து தொங்குகிறது. டிரான்ஸ் பார்மர்களும் சேதம் அடைந்துள்ளன.

அவற்றை சீரமைக்க மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். போர்க்கால அடிப்படையில் மின் இணைப்புகளை சீர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதுபற்றி அவர் நிருபரிடம் கூறியதாவது:-

வார்தா புயல் காரணமாக ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் ஆங்காங்கே விழுந்துள்ளது. மின் வயர்களும் அறுந்து கிடக்கிறது.

மின்கம்பங்கள், வயர்கள் மீது மரங்கள் விழுந்து கிடப்பதால் முதலில் மரங்களை அப்புறப்படுத்திவிட்டு மின் இணைப்புகளை சரிசெய்து வருகிறோம்.

இதற்காக 4 ஆயிரம் மின் ஊழியர்கள் மின் கம்பங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை, மதுரை உள்பட வெளி மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரம் மின் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மின்வாரியத்தில் போதுமான மின்கம்பங்கள் மற்றும் மின் சாதனங்கள் கையிருப்பில் உள்ளதால் சரி செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை.

தேவைப்பட்டால் இன்னும் கூடுதலாக 1000 ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு மின் கம்பங்களை சீர்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

முதல் கட்டமாக கோயம்பேடு, அண்ணாநகர் பகுதிகளில் சேதமடைந்த மின் இணைப்புகள் சரி செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் அனைத்து பகுதிகளிலும் சீரமைப்பு பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று மாலைக்குள் அனைத்து பகுதிகளிலும் முழுமையாக மின்வினியோகம் கிடைக்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். அதனடிப்படையில் பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds