[email protected]
feddral bank
BREAKING NEWS

அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை பயன்படுத்தி அக்கட்சியை அடிமைப்படுத்த மத்திய அரசு முயற்சி-எச்.வசந்தகுமார்

பதிவு செய்த நாள்: 12 Dec 2016 12:02 pm

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வர்த்தக பிரிவு தலைவர் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவில் கருப்பு பணத்தை மீட்கும் முயற்சியாக மத்திய அரசு 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதனால் ஏழைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் சம்பள பணத்தை கூட எடுத்து செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தற்போது பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படும் பல கோடி ரூபாய் பணம் அனைத்தும் புதிய ரூபாய் நோட்டுகளாகவே இருக்கின்றன. எனவே மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் வசதி படைத்தவர்கள் மட்டுமே பயனடைந்து வருகிறார்கள்.

பெரிய நிறுவனங்களில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் மக்களை பொருட்களை வாங்க வைக்கும் கட்டாயத்தின் மூலம் சிறு வியாபாரிகளை மத்திய அரசு நசுக்கி வருகிறது. கருப்பு பணத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சியை வரவேற்கிறோம். அதற்காக மக்களை கஷ்டப்படுத்தக்கூடாது.

மத்திய அரசு மீண்டும் 1,000, 500 ரூபாய் நோட்டுகளையும், கூடுதலாக 200, 400 ரூபாய் நோட்டுகளையும் அச்சிட்டு புழக்கத்தில் விடவேண்டும். இந்த பிரச்சனை தொடர்பாக பேசுவதற்கு காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்படுகிறது. ராகுலுக்கு பேச வாய்ப்பளித்தால் மத்திய அரசின் புதிய ரூபாய் நோட்டு விவகாரங்கள் வெளியே வரும் என்ற அச்சமே இதற்கு காரணம்.

தமிழக புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வம் மக்களை காக்கும் வகையில் நடந்து கொள்ளவேண்டும். தமிழகத்தில் கடந்த 6 மாதங்களாக எந்தவித பணியும் நடக்கவில்லை. அதிகாரிகளிடம் இதுபற்றி கேட்டால் அமைச்சர்களை குறை கூறுகிறார் கள்.

அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை மத்திய அரசு பயன்படுத்தி அந்த கட்சியை அடிமைப்படுத்த நினைக்கிறது. இதனை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் அனைத்து தரப்பினரையும் அனுசரித்து செல்கிறார். இது கட்சியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். தகுதி அடிப்படையில் கட்சி நிர்வாகிகளை நியமிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மக்களோடு கலந்துள்ள தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், அக்கட்சியின் துணைத்தலைவர் ஆவதில் தவறில்லை. தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படலாம். அ.தி.மு.க. என்ற மிகப்பெரிய இயக்கம் ஒருநபர் கைக்கு சென்றுவிடக்கூடாது. அனைத்து சமுதாயத்தினரையும் அரவணைத்து செல்லும் நபர் ஒருவரே அ.தி.மு.க.வின் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*