feddral bank
BREAKING NEWS

சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் கூட்டம்

பதிவு செய்த நாள்: 10 Dec 2016 11:47 am

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு, சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள கூடுதல் நூலக கட்டிட கூட்ட அரங்கில் நேற்று அஞ்சலி செலுத்தும் இரங்கல் கூட்டம் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா படத்துக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பேசியதாவது:-

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா போற்றுதலுக்கு உரிய மாமனிதர். குடிமக்கள் முதல் கட்சித் தொண்டர்கள் வரை அனைவரிடமும் தீராத அன்பு கொண்டவர். கர்நாடக மாநிலத்தில் பிறந்த அவர், தனது இளம் வயதிலேயே தந்தையை பறிகொடுத்தவர். மிகவும் ஒரு இக்கட்டான சூழலில் தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர். படிப்பில் தங்கப்பதக்கம் வென்றவர்.

சினிமா, நடனம், பாட்டு, அரசியல், ஆன்மிகம், சேவை, நிர்வாக ஆளுமை என பன்முகங்களை ஒருங்கே கொண்ட தைரியசாலி, திறமைசாலி. அவரது முதல் விருப்பம் வழக்கறிஞர் ஆவது தான். ஆனால் குடும்ப சூழல் காரணமாக சினிமாவிற்கு சென்றார். இதுவரை பன்மொழிகளில் 140 திரைப்படங்களில் நடித்து திரையுலகிலும் வெற்றிக் கொடி நாட்டியுள்ளார்.

எம்.ஜி.ஆர். தான் ஜெயலலிதாவின் குரு, வழிகாட்டி. அவரது அரசியல் வாழ்வு சொந்த விருப்பத்திற்கு மாறாக இருந்தாலும் முதல்-அமைச்சராக இருந்து ஏழை மக்களுக்கும், கல்விக்கும், நாட்டிற்கும் அவர் செய்துள்ள அர்ப்பணிப்பு அளப்பரியது. அரசியலில் இருந்த அனைத்து இடர்பாடுகளையும் துணிச்சலாக எதிர்த்து தான் அவர் உச்சத்தைத் தொட்டுள்ளார்.

தன்னுடைய 43 வயதில் தமிழக முதல்-அமைச்சர் பதவியை அலங்கரித்த ஒரே பெண்மணி இவர் மட்டும் தான். தொட்டில் குழந்தை திட்டம், தாலிக்கு தங்கம், அம்மா உணவகம், அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், மடிக்கணினி என ஏழை, எளிய மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை வாரி வழங்கியுள்ளார்.

தொடர்ச்சியாக 2-வது முறையாக முதல்-அமைச்சர் அரியணையில் ஏறிய அவர், அந்த வெற்றியை தொடர முடியாமல் மறைந்துள்ளார். அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று. தமிழகம் அவரது தலைமையை இழந்து தவிக்கிறது.

கட்சி பேதமின்றி அனைத்து தரப்பினரும் ஒன்று திரண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியது அவரது அரசியல் நிர்வாக ஆளுமையை மட்டுமல்ல, பெண்களின் உரிமைக்கும், முன்னேற்றத்திற்கும் அடையாள சின்னமாக திகழ்ந்தவர் என்பதை பிரதிபலிக்கிறது. அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் ஐகோர்ட்டு நீதிபதிகள், வழக்கறிஞர்கள், கோர்ட்டு ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds