[email protected]
feddral bank
BREAKING NEWS

கொள்கை அளவில் பா.ஜனதாவும், அ.தி.மு.க.வும் ஒத்துப்போக கூடிய கட்சிகள்-வெங்கையா நாயுடு

பதிவு செய்த நாள்: 10 Dec 2016 11:33 am
By :

பெங்களூருவில் நேற்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கட்சி கூட்டணி அமைக்குமா? என்பது தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது. மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சராகவும், அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா உடல்நலக் குறைவால் மரணம் அடைந்துள்ளார். அவரது அகால மரணம் தமிழக அரசியலை புரட்டிப்போட்டு இருக்கிறது. ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டு ஒருசில நாட்கள் தான் ஆகிறது.

தற்போதைய சூழ்நிலையில் தமிழ்நாட்டில் தேர்தல் எதுவும் இல்லை. இந்த சூழ் நிலையில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி அமைப்பது குறித்து பேசுவது தேவையில்லாதது. அதற்கான காலம் இன்னும் வரவில்லை.

தமிழ்நாட்டில் தற்போதைக்கு யாருடனும் கூட்டணி அமைக்கவோ, கூட்டணியை மாற்றியமைக்கவோ அவசியம் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் அ.தி.மு.க. சேருமா? என்றால், அவர்கள் தனிப்பட்ட கட்சி. இப்போது அவர்கள் எங்களுடன் கூட்டணியில் இல்லை. கொள்கை அளவில் பா.ஜனதாவும், அ.தி.மு.க.வும் ஒத்துப்போக கூடிய கட்சிகள்.

ஒரு சில பிரச்சினைகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு அ.தி.மு.க. ஆதரவு அளித்துள்ளது. ஆனால் வேறு சில விவகாரங்களில் மத்திய அரசை அ.தி.மு.க. விமர்சித்தும் வந்துள்ளது. அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி அமைக்குமா? என்பதை தற்போது கூறமுடியாது. கூட்டணி குறித்து முடிவு எடுக்க இன்னும் காலஅவகாசம் இருக்கிறது. அதனால் அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் கூட்டணி அமைப்பது குறித்து தற்போது விவாதிப்பது சரியல்ல.

ஜெயலலிதாவின் மரணத்தை தொடர்ந்து அ.தி.மு.க.வில் பிளவு ஏற்படுவதில் பா.ஜனதாவின் பங்கு என்ன? என்று கேட்கிறீர்கள். அ.தி.மு.க.வில் பிளவு பற்றி நான் எப்படி பதில் சொல்ல முடியும். இது ஒரு கற்பனையான கட்டுக்கதை. இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது.

ஊழல், கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கத்தில் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். பிரதமரின் அறிவிப்பை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டி வருகிறார்கள். ஆனால் ரூபாய் நோட்டு விவகாரத்தை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துக் கொண்டு பாராளுமன்றத்தை முடக்கி வருகிறது.

மற்ற விவாதங்கள் நடைபெறுவதை தடுத்து நேரத்தையும் காங்கிரஸ் வீணடிக்கிறது. இந்த நடவடிக்கைக்காக பிரதமர் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். பாராளுமன்றத்தை முடக்கியதற்காக அவர்கள் தான் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்மோகன்சிங் ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு ஊழல் மற்றும் நிர்வாக தவறுகளுக்காக அவர்கள் மன்னிப்பு கேட்டார்களா?

காங்கிரஸ் மற்றும் இதர எதிர்க்கட்சிகளை கேட்கிறேன் எது முட்டாள்தனமான நடவடிக்கை? ஊழல், கருப்பு பணத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது முட்டாள்தனமான நடவடிக்கையா? காங்கிரஸ் ஆட்சியில் ஊழல்களும், சுரண்டல்களும் நடைபெற்றபோது மற்ற கட்சிகள் அமைதியாக இருந்தது முட்டாள்தனமான நடவடிக்கையா?

இவ்வாறு அவர் கூறினார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*