[email protected]
feddral bank
BREAKING NEWS

காவேரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு

பதிவு செய்த நாள்: 10 Dec 2016 11:10 am

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கு உண்டு என்று 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்து உள்ளது. காவிரிப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண உதவும் இத்தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும்.

இது பொதுவாக மாநிலங்களின் உரிமைக்கும், குறிப்பாக தமிழகத்தின் உரிமைக்கும் கிடைத்த வெற்றியாகும். எனவே, காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை செயல்படுத்துவதற்காக மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும். இனி மேலும் காலம் தாழ்த்தாமல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு முன்வர வேண்டும். அதே சமயம் கர்நாடக அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை காவிரியிலிருந்து தொடர்ந்து திறந்துவிட வேண்டும். இதற்காக தமிழக அரசும், மத்திய அரசும் கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நதிநீர் பிரச்சினையில் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு தாமதமாக வழங்கப்பட்டு உள்ளது. எனவே, மேலும் காலம் கடத்தாமல் காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளையும் குறுகிய காலவரையறைக்குள் விசாரித்து இறுதி தீர்ப்பை வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பின் மீது நமக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளை பெற தமிழக அரசு தேவையான அனைத்து வாதங்களையும் எடுத்து வாதாட முன்வர வேண்டும் என கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கைக்கு ஆதாரமாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. தமிழ்நாட்டிற்கு தினசரி வினாடிக்கு 2,000 கனஅடி தண்ணீர் திறந்து விடவும் உத்தரவிட்டிருக்கிறது. இப்போதாவது மத்திய அரசு தமிழ்நாட்டின் நீராதாரத்தை பாதுகாக்க, காவிரி மேலாண்மை வாரியம், நீர் ஒழுங்காற்றுக்குழு ஆகியவற்றை தாமதமின்றி அமைத்து, தமிழ்நாட்டின் சட்டபூர்வ தண்ணீர் பெறும் உரிமையை உறுதிசெய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘தனியே சட்டம் ஒன்றை இயற்றித்தான் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியும்’ என மத்திய அரசு சொல்லிவந்த சாக்குப்போக்குகளுக்கு உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து தமிழ்நாட்டுக்கான தண்ணீரை உடனடியாகத் திறந்துவிட வேண்டும்.

தமிழக அரசு இப்போதாவது அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி காவிரி பிரச்சினையை விவாதிக்க வேண்டும், தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தை கூட்டி மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் விதத்தில் தீர்மானம் இயற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்றம் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்கு மேலான மேல்முறையீட்டினை விசாரிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கு உண்டு என்று தெளிவாக திட்டவட்டமாக கூறிவிட்டது. இந்திய அரசமைப்பு சட்டப்படி இப்பிரச்சினையில் உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு என்று திராவிடர் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. எனவே மேலும், காலத்தை வீணடிக்காமல் மத்திய அரசு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டு, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கிறேன். தனது மரணத்திற்கு பிறகும் காவிரி பிரச்சினையில் வெற்றி தேடித்தந்த மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை காவிரி விவசாயிகள் என்றும் நினைவில் வைத்திருப்பார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds