[email protected]
feddral bank
BREAKING NEWS

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

பதிவு செய்த நாள்: 08 Dec 2016 10:04 am
பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் ரூபாய் நோட்டுகள் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்த மறுப்பதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் முன்மொழிந்தார். நிதிமந்திரி அருண்ஜெட்லி வழி மொழிந்தார்.

தீர்மானத்தில் எதிர்க்கட்சிகள் தங்களது இலக்கு நிலைகளை மாற்றிக் கொண்டு இருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசுக்கு மக்கள் ஆதரவு தெரிவிப்பதாகவும் பாராட்டு தெரிவிக்கப்பட்டு இருந்தது.

எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடினார்.

அவர் பேசியதாவது:-

முட்டுக்கட்டை

கடந்த காலங்களில் மக்களிடையே பதற்றத்தையும், சமூக மோதல்களையும் உருவாக்கிய பிரச்சினைகள் மற்றும் மத்திய அரசின் முடிவுகள் குறித்து எத்தனையோ முறை பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு இருக்கிறது.

ஆனால் இப்போது உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டு செல்லாது என்ற ஆக்கப்பூர்வமான விவகாரத்தில் மட்டும் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த மறுக்கின்றன. பாராளுமன்றத்தை நடத்தவிடாமலும் முட்டுக்கட்டை போடுகின்றன.

விழிப்புணர்வு தேவை

தற்போது குறைந்த பணப் புழக்கம் மற்றும் மின்னணுவியல் பொருளாதாரத்தை வேகமாக நோக்கி இந்தியா முன்னேறிக் கொண்டு இருக்கிறது. எனவே இதுபற்றிய விழிப்புணர்வை பா.ஜனதா எம்.பி.க்கள் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். எப்படி தேர்தல் நேரங்களில் மின்னணு ஓட்டுப் பதிவு மற்றும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பற்றி விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தினோமோ, அதுபோன்ற அணுகுமுறையை இதிலும் நமது எம்.பி.க்கள் கையாள வேண்டும்.

ரூபாய் நோட்டு செல்லாத விவகாரத்தில் மக்களின் ஆதரவு நமக்கு இருக்கிறது. ஆனால் சில எதிர்க்கட்சிகள் இதில் ஜனநாயகமற்ற தன்மையுடன் நடந்து கொள்கின்றன. இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் அவசியம் விவாதிக்கப்படவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

எம்.பி.க்கள் கூட்டத்துக்கு பின்பு நிருபர்களிடம் பேசிய பாராளுமன்ற விவகார மந்திரி அனந்த குமார், காங்கிரசும், திரிணாமுல் காங்கிரசும்தான் பாராளுமன்றத்தை நடத்தவிடாமல் முடக்கி வருகின்றன. எதிர்க்கட்சிகளிடம் இப்பிரச்சினையில் எவ்வித வலுவான காரணங்களும் இல்லை என்று குறிப்பிட்டார்.

ஜெயலலிதா மறைவுக்கு அனுதாபம்

எம்.பி.க்கள் கூட்டத்தில் பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தனது இலாகா குறித்து ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில் பெட்ரோலியத்துறை குறைந்த பணப் பயன்பாடு மற்றும் மின்னணு முறையில் பணம் கையாள்வதை நோக்கி முன்னேறி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கோவா முன்னாள் முதல்-மந்திரியும், ராணுவ மந்திரியுமான மனோகர் பாரிக்கர், கோவா அரசு மின்னணு முறையில் பணத்தை 60 சதவீதம் வரை கையாண்டு வருகிறது என்று குறிப்பிட்டார்.

முன்னதாக எம்.பி.க்கள் கூட்டத்தில், தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மூத்த பத்திரிகையாளர் மற்றும் அரசியல் விமர்சகர் சோ, ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் கவர்னருமான பாய் மகாவீர் ஆகியோரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கப்பட்டது.

அத்வானி அதிருப்தி

இதற்கிடையே பாராளு மன்றத்தில் நேற்று பாராளுமன்ற விவகார மந்திரி அனந்த குமார் நடந்து கொண்ட விதம் குறித்து பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி அதிருப்தி தெரிவித்தார்.

“பாராளுமன்றத்தை சபாநாயகர் நடத்துகிறாரா? அல்லது பாராளுமன்ற விவகார மந்திரி நடத்துகிறாரா?… சபையை நீங்கள்(சபாநாயகர்) நடத்தவில்லை என்று சொல்வேன். இதை பகிரங்கமாக வெளியிலும் கூறுவேன்” என்றார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*