[email protected]
feddral bank
BREAKING NEWS

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

பதிவு செய்த நாள்: 08 Dec 2016 10:49 am
By :

ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்தது. தமிழக அரசின் வற்புறுத்தலால், மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த ஜனவரி 8-ந்தேதி அனுமதி வழங்கி அறிவிக்கை வெளியிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதித்தது.

கோர்ட்டு உத்தரவின் பேரில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. தமிழக அரசு தரப்பிலும் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோகின்டன் பாலிநாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது.

கலாசார நிகழ்வு

இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நடைபெற்றது. மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.எஸ். நரசிம்மா தன்னுடைய வாதத்தில் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டு மனிதனுக்கும், மிருகத்துக்கும் பிணைப்பை உருவாக்கும் கலாசார நிகழ்வாகும். இது பல நூற்றாண்டு பாரம்பரிய பெருமை கொண்டது. சமூகத்தின் கலாசார நிகழ்வுகளுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு முகாந்திரம் கிடையாது.

ஜல்லிக்கட்டை எதிர்ப்பவர்கள் கூறுவதுபோல மிருகங்களுக்கு எதிராக எந்த வகையான வதையும் கிடையாது. அப்படி மிருகங்கள் வதைக்கப்படுகின்றன என்று அவர்கள் கூறினால் ஜல்லிக்கட்டு கோர்ட்டின் மேற்பார்வையில் நடக்கும் வகையில் அனுமதிக்கலாம்.

அனுமதிக்க வேண்டும்

ஜல்லிக்கட்டு நடைபெறும் ஒரு நாளை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இனப்பெருக்கத்துக்கு மட்டுமே காளைகள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் காளைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது, இதனால் நாட்டு மாடுகளின் எண்ணிக்கையும் குறைகிறது.

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன் எடுத்துச்செல்வது ஜல்லிக்கட்டு. அதற்கு தடைவிதிக்கும்பட்சத்தில் பொங்கல் போன்ற கலாசார நிகழ்வுகள் அழிந்துபோகும் ஆபத்து உள்ளது. எனவே, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

வீட்டுப்பிள்ளைகள் போல்…

தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேகர் நாப்டே தன்னுடைய வாதத்தில் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டில் காளைகள் எந்தவகையிலும் சித்ரவதை செய்யப்படுவது இல்லை. வீட்டுப்பிள்ளைகளை போல பராமரிக்கப்படுகின்றன. அவற்றுக்கான உணவு சரியான முறையில் தரப்படுகின்றன. ஜல்லிக்கட்டில் காளைகள் ஈடுபடுத்தப்படுவதற்கு முன்பும், பிறகும் பரிசோதித்து சான்றிதழ்கள் வழங்கப்படும். ஜல்லிக்கட்டில் பங்கேற்பவர்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். போட்டியின் போது முறை தவறி நடப்பவர்கள் வெளியேற்றப்படுவார்கள்.

காளைகள் பிரவேசிக்கும் வாடிவாசல் வரை உரிமையாளர்கள் கூடவே இருப்பார்கள். காளைகளை வீரர்கள் பக்கவாட்டில் இருந்துதான் பிடிக்க வேண்டும். காளைகள் ஓடும் தூரம் 10 அடியில் இருந்து 15 அடி வரை தான் இருக்க வேண்டும். ஒரு காளைக்கு ஒருவர் தான் அனுமதிக்கப்படுவார்கள். அதிகமாக இருந்தால் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள். இப்படி கட்டுப்பாடுகளுடன் தான் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. எனவே, ஜல்லிக்கட்டை தடை செய்ய தேவை இல்லை. வேண்டும் என்றால் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தீர்ப்பு ஒத்திவைப்பு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இந்த வழக்கில் ஒரு மனுதாரராக தன்னை இணைத்துக்கொண்ட பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தன்னுடைய வாதத்தில், சில மதங்களில் மிருகங்கள் மதத்தின் பெயரால் கொல்லப்படுகின்றன. இதை மிருகவதை என்று சொல்லாத நிலையில் ஜல்லிக்கட்டில் மிருகவதை என்று கூறுவதை ஏற்க முடியாது. நான் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை பாரம்பரியமாக கொண்டவன். ஜல்லிக்கட்டில் விலங்குகள் துன்புறுத்தப்படுவது இல்லை என்று என்னால் உறுதியாக கூற முடியும். ஜல்லிக்கட்டு மீது தடை விதிக்க எந்த முகாந்திரமும் இல்லை. எனவே ஜல்லிக்கட்டை அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர். மேலும் இரு வாரங்களுக்குள் அனைத்து தரப்பினரும் தங்கள் தரப்பு வாதங்களை எழுத்து வடிவில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*