feddral bank
BREAKING NEWS

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்

பதிவு செய்த நாள்: 17 Nov 2016 2:45 pm

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது முதல் ஏழை, எளிய மக்கள் சொல்லொணாத் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர். மோடி அரசின் சர்வாதிகார அறிவிப்பால் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். தனது சொந்த பணத்தை எடுக்க முடியாமல் பொதுமக்கள் அல்லல்படுகின்றனர்.

பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தன் உயிருக்கு ஆபத்து என மோடி நாடகமாடுகிறார்.

கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் அந்த பணத்தை யெல்லாம் வெளிநாட்டு வங்கிகளில் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள் என்றும், அதை மீட்டு ஒவ்வொரு இந்திய குடிமகன் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்றும் வாய் சவடால் விட்டு விட்டு இப்போது அன்றாடக்காய்ச்சிகளின் வயிற்றில் அடித்திருக்கிறார்.

 தனது சொந்த பணத்தை எடுப்பதற்காக வங்கிகளுக்கு செல்பவர்களுக்கு கை விரலில் மை வைக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறோம். பொதுமக்களுக்கு எதிரான இந்த அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

வழக்கம் போல 500, 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். பொதுமக்களை இன்னலுக்கு ஆளாக்கிய ரிசர்வ் வங்கி கவர்னர் இதற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (18-ந் தேதி) காலை 10 மணிக்கு சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரளாக பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*