feddral bank
BREAKING NEWS

வங்கிகளில் பணம் எடுக்க மீண்டும் கடும் கட்டுப்பாடு விதித்தது மத்திய அரசு

பதிவு செய்த நாள்: 17 Nov 2016 4:11 pm

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பணம் எடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இதில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இது தொடர்பாக டெல்லியில் மத்திய அரசின் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் இன்று காலை புதிய அறிவிப்புகள் வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* திருமணத்துக்கு ரூ.2.50 லட்சம் வரை வங்கிகளில் இருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம். மணமக்கள் அல்லது அவர்களது தாய் – தந்தை ஆகியோர் தங்களது வங்கி கணக்கில் இருந்து ரூ.2½ லட்சம் எடுத்துக் கொள்ளலாம்.

இதற்காக திருமண பத்திரிகை உள்ளிட்ட ஆவணங்களை வங்கியில் சமர்ப்பித்து பணத்தை எடுக்கலாம். ஒருவரது கணக்கில் இருந்து மட்டுமே இந்த பணத்தை எடுக்க முடியும்.

திருமணச் செலவுக்காக அரசின் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்று பிரதமருக்கும் நிதி மந்திரிக்கும் ஏராளமான கோரிக்கைகள் வந்ததால் அரசு இந்த முடிவு எடுத்துள்ளது.

* விவசாயிகள் தங்களது வங்கி கணக்கில் இருந்து வாரத்துக்கு ரூ.25 ஆயிரம் வரை எடுத்துக் கொள்ளலாம்.

* பதிவு செய்யப்பட்ட வணிகர்கள் வாரத்துக்கு ரூ.50 ஆயிரம் வரை பணம் எடுத்துக் கொள்ளலாம்.

* வேளாண் சந்தைக் கமிட்டியில் பதிவு செய்தவர்கள் வாரத்துக்கு ரூ. 50 ஆயிரம் வரை எடுத்துக் கொள்ளலாம்.

* பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு பணம் செலுத்த வேண்டிய தேதியில் இருந்து 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

* விளைபொருட்கள் விற்கும் போது காசோலை மூலம் பணம் பெறலாம்.

* ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து ரூ.4,500 வரை மாற்றிக் கொள்ளலாம் என்று இருப்பது ரத்து செய்யப்பட்டு நாளை முதல் ரூ.2000 மட்டுமே பணம் மாற்ற முடியும்.

* ஒரு முறை பணம் மாற்றிக்கொண்டவர் அடுத்து டிசம்பர் 31-ந்தேதி வரை அவர் பணம் மாற்ற முடியாது. வங்கிகளில் கூட்டத்தை கட்டுப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

* மத்திய அரசின் ‘சி’ பிரிவு ஊழியர்கள் ரூ.10 ஆயிரம் வரை சம்பளம் முன்பணம் பெற்றுக் கொள்ளலாம். இந்த முன்பணம் நவம்பர் மாத சம்பளத்தில் கழித்துக் கொள்ளப்படும்.

* ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கும் முறை படிப்படியாக மேம்படுத்தப்படும். இதற்காக ஏ.டி.எம்.களை மாற்றி அமைக்கும் பணி விரைவில் முடிவடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வங்கிகளில் முதலில் ரூ.4000 வரை பணம் மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் அது ரூ.4,500 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது ரூ.2000 ஆக குறைக்கப்பட்டு விட்டது.

அடுத்தடுத்த முரண்பட்ட அறிவிப்புகளாலும், கட்டுக்கடங்காத கூட்டத்தாலும் பலர் பணம் மாற்ற முடியாமல் தவிக்கிறார்கள்.

இன்று கூட்டமாக இருக்கிறது நாளை எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்திருக்கும் போது திடீரென்று ரூ.2000 மட்டுமே எடுக்கலாம் என்ற அறிவிப்பு இதுவரை பணமே எடுக்காதவர்களை பாதிப்பு அடையச் செய்துள்ளது.

இன்று சில தனியார் வங்கிகளில் ‘மை’ இல்லை என்று கூறி பணம் மாற்றித் தர மறுத்து விட்டார்கள்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds