feddral bank
BREAKING NEWS

ரூபாய் நோட்டுகளை மாற்ற நகல் மற்றும் விண்ணப்ப படிவம் போன்றவை இனி தேவையில்லை

பதிவு செய்த நாள்: 16 Nov 2016 2:40 pm
By :

500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் வங்கிகளில் முடங்கி கிடக்கிறார்கள்.

அதிகாலை முதல் மாலை வரையில் பணத்தை மாற்ற வரிசையில் காத்து நிற்கும் கூட்டம் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலைமை அதற்கு மாறாக உள்ளது.

பணத்தை மாற்றியவர்களே மீண்டும் வருவதால் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வரும் பொது மக்களின் கையில் அழியாத மை தடவப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒருவர் ஒருமுறை மட்டுமே பணத்தை மாற்ற முடியும். காலையில் ஒரு வங்கியில் பணத்தை மாற்றி விட்டு மாலையில் மற்றொரு வங்கியில் பணம் மாற்றுவதை தடுக்க இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ஓட்டுப்பதிவின் போது பயன்படுத்தப்படும் அதே மையை விரலில் வைப்பதன் மூலம் ஒருவர் பணத்தை மாற்றி விட்டார் என்ற அடையாளம் உறுதி செய்யப்படுகிறது.

இத்திட்டம் கருப்பு பணத்தை ஒழிக்க எடுத்திருக்கும் முடிவுக்கு மிகவும் கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடையாள ‘மை’ தடவும் திட்டம் நாளை முதல் முழுமையாக செயல்படுத்தப்பட உள்ளது.

பணம் மாற்ற வரும் பொதுமக்கள் கை விரலில் அழியாத மை தடவுவதன் மூலம் இனி அவர் 2-வது முறையாக சென்று பணம் மாற்ற முடியாது. ஒருவர் ஒரு முறை மட்டும் தான் வங்கியில் கொடுத்து பணத்தை மாற்ற முடியும்.

வங்கிகளுக்கு செல்லும் போது ஏதாவது ஒரு அடையாள அட்டையை காண்பித்தால் போதுமானது. அதன் நகல் மற்றும் விண்ணப்ப படிவம் போன்றவை இனி தேவையில்லை.

கையில் உள்ள அடையாள அட்டையின் விவரங்களை வங்கி அதிகாரிகள் கம்ப்யூட்டரில் பதிவு செய்து விடுவார்கள்.

பெயர் விவரம், அடையாள அட்டை விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டியது இல்லை.

இதுகுறித்து புரசைவாக்கம் ஐ.ஓ.பி. வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், “பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்கள் அடையாள அட்டையை மட்டும் கொண்டு வந்தால் போதுமானது. அதனை அதிகாரிகளிடம் காண்பித்தால் அதில் உள்ள விவரங்களை பதிவு செய்து விட்டு கை விரலில் ‘மை’ தடவப்படும்.

விண்ணப்ப படிவம் தேவையில்லை. ஒரு வங்கியில் பணம் மாற்றி விட்டு இன்னொரு வங்கிக்கு சென்று பணத்தை மாற்ற இயலாது. பணம் மாற்றுபவர்களுக்கு தனி வரிசையும், வங்கி கணக்கில் பணம், காசோலை செலுத்த வருபவர்கள், பணம் எடுக்க வருபவர்கள் ஒரு வரிசையும் நிற்க வேண்டும்.

இத்திட்டம் மூலம் பணம் மாற்ற வருபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கிறோம்.

இதுவரையில் பணம் பெறாதவர்கள், அடையாள அட்டையை பயன்படுத்தாதவர்கள் மட்டுமே பயன் பெறுவார்கள்” என்றார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*