feddral bank
BREAKING NEWS

பொது மக்களை அவமானப்படுத்தும் வகையில் பேசிய மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்-காங்கிரஸ்

பதிவு செய்த நாள்: 16 Nov 2016 4:20 pm
By :

ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ந்தேதி இரவு அறிவித்தார். இதனால் ஏழை, நடுத்தர மக்கள் நாடு முழுவதும் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.

ரூபாய் நோட்டுகள் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் இன்று பிரச்சினை எழுப்பப்பட்டது.

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதோடு நாள் முழுவதும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

ஆனால் டெல்லி மேல்சபையில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது தொடர்பாக எதிர்க்கட்சிகள் பிரச்சினையை கிளப்பினர். இதை தொடர்ந்து ரூபாய் நோட்டு தொடர்பான விவாதத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் ஆனந்த் சர்மா விவாதத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு எடுத்த நடவடிக்கையால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

புழக்கத்தில் உள்ள 86 சதவீதம் ரூபாய் நோட்டுகள் எல்லாம் ரூ.500, ரூ.1000 தான். இந்த நோட்டுகள் ஒரே அறிவிப்பில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது கருப்பு பணமா? மத்திய அரசின் இந்த அறிவிப்பால் ஏழைகள், விவசாயிகள் துன்பத்தில் உள்ளனர். கருப்பு பணம் பதுக்கியவர்கள் நிம்மதியாக உள்ளனர்.

விவசாயிகளிடம் கிரெடிட் கார்டு உள்ளதா? எந்த பொருளாதாரம் பணம் இல்லாமல் வேலை செய்ய அனுமதி அளிக்கிறது. உரம் கூட வாங்க விவசாயிகளால் முடியவில்லை. இதற்காக அவர்களால் பணம் கட்ட முடியவில்லை. பணம் எடுக்க வரிசையில் நிற்க நேரமில்லை. நமக்கு உணவளிக்கும் விவசாயிகள் கருப்பு பணத்தையா? கொண்டு வருகிறார்கள்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை இந்திய பொருளாதாரம் கருப்பு பணத்தில் இயங்குகிறது என்ற செயலை உலகுக்கு தெரிவித்து உள்ளது. நாட்டில் நிதி நெருக்கடியை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

பணத்துக்கு கட்டுபாடு விதிக்க அரசுக்கு உரிமை இல்லை. கருப்பு பணம் சூட்கேசில் தூங்காது. சொத்துக்கள், தங்க நகையில் முதலீடு செய்யப்பட்டு இருக்கும். அல்லது வெளிநாடு சென்றிருக்கும். கருப்பு பணம் பதுக்கியவர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படவில்லை.

மத்திய அரசின் இந்த முடிவால் நாட்டுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் நடவடிக்கை குறித்து கேள்வி கேட்டால் தேசபக்தி குறித்து சந்தேகம் எழுப்பப்படுகிறது.

சுவீஸ் வங்கியில் கருப்பு பணம் வைத்துள்ளவர்கள் பட்டியல் மத்திய அரசிடம் உள்ளது. கருப்பு பணம் பதுக்கியவர்களின் பட்டியலை பிரதமர் மோடி வெளியிட வேண்டும். வரிசையில் நிற்கும் பொது மக்களை அவமானப்படுத்தும் வகையில் மோடி பேசியுள்ளார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

யாருடையை கருத்தையும் கேட்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டு அதனை பின்பற்ற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. நாம் நாகரீகமான நாட்டை சேர்ந்தவர்கள் சட்டவிதிகள் அடிப்படையில் செயல்படுகிறோம். ஆனால் மத்திய அரசு மக்களை குற்றவாளிகளாக கருதுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

மத்திய மந்திரி பியூஸ் கோயல் கூறியதாவது:-

மத்திய அரசின் இந்த முடிவை நாடே வரவேற்கிறது. முதல் முறையாக நாடு கவுரவம் அடைந்துள்ளது. நாட்டு மக்களின் விருப்பத்தை பிரதமர் நிறைவேற்றி இருக்கிறார்.

ஊழல் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக பிரதமர் போராடுகிறார். தேச நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டது. அரசியலுக்காக ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds