[email protected]
feddral bank
BREAKING NEWS

பல்கலைக்கழக ஊழல் குறித்து டாக்டர் ராமதாஸ் அறிக்கை

பதிவு செய்த நாள்: 16 Nov 2016 5:18 pm

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

உயர்கல்வித்துறையில் தமிழகத்தை முதலிடத்திற்கு கொண்டு வரப்போவதாக முதல்வர் ஜெயலலிதா அடிக்கடி கூறிவரும் நிலையில், உயர்கல்வியை கற்பிப்பதற்கான ஆசிரியர்களை நியமிப்பதில் பெரிய அளவில் ஊழல் நடைபெறுவதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

கோவை பாரதியார் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மொத்தமுள்ள 118 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் நடைமுறையில் பெருமளவில் ஊழலும், முறைகேடுகளும் நடப்பதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன.

இரு பல்கலைக்கழகங்களிலும் துணைவேந்தர்களால் அதிகாரப்பூர்வமற்ற முறையில் நியமிக்கப்பட்டுள்ள முகவர்கள் நேர் காணலுக்கு வந்தவர்களை தொலை பேசியில் தொடர்பு கொண்டு, ‘‘பணம் கொடுத்தால் பணி நியமனம் நிச்சயம்’’ என பேரம் பேசுவதாக நேர்காணலில் பங்கேற்றவர்கள் கூறியுள்ளனர். இரு பல்கலைக்கழகங்களிலுமே உதவிப்பேராசிரியர் பணிக்கு ரூ.30 லட்சம் முதல் 40 லட்சம் , இணைப் பேராசிரியர் பணிக்கு ரூ.50 லட்சம், பேராசிரியர் பணிக்கு ரூ.60 லட்சம் என விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இரு பல்கலைக்கழகங்களின் பேராசிரியர் தேர்வு முறைகளும் இக்குற்றச்சாற்றுகளை உறுதி செய்யும் வகையில் தான் அமைந்துள்ளன. பொதுவாக பல்கலைக்கழக ஆசிரியர் நியமனங்களுக்கு எழுத்துத் தேர்வுகள் நடத்தப்படு வதில்லை. ஆனால், பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் தேர்வு மிகவும் நேர்மையாக நடத்தப்படுவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக விண்ணப்பித்தவர்களுக்கு எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்.

இதில், ஆசிரியர் பணிக்கான விலையை செலுத்த ஒப்புக் கொண்டவர்கள் சரியாக தேர்வு எழுதாவிட்டாலும், அவர்கள் தேர்ச்சி பெற வைக்கப்பட்டனர் என்றும், அதற்காக பல்வேறு வழிகள் கடைபிடிக்கப்பட்டன என்றும் பாரதியார் பல் கலைக்கழக நிர்வாகத்தில் உள்ளவர்களே கூறுகின்றனர்.

பல்கலைக்கழகக் கல்வியின் தரத்தைக் கருத்தில் கொண்டு, இப்பிரச்சினையில் தமிழக ஆளுனர் தலையிட்டு, இரு பல்கலைக் கழகங்களின் ஆசிரியர்கள் தேர்வு நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். எழுத்துத் தேர்வுக்காக பயன் படுத்தப்பட்ட விடைத்தாட்கள், நேர்காணல் மதிப்பீட்டு குறிப்புகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றி, ஒட்டுமொத்த ஆசிரியர் தேர்வு நடைமுறை குறித்தும் பணியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த ஆணையிட வேண்டும்.

மேலும் பல்கலைக்கழக ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான புதிய நடைமுறையை உருவாக்குவது குறித்து பரிந்துரை செய்வதற்காக கல்வியாளர்கள் அடங்கிய உயர்நிலைக்குழுவையும் அமைக்க வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds