[email protected]
feddral bank
BREAKING NEWS

காங்கிரசின் அரசியல் நாடகம் எடுபடாது-பொன்.ராதாகிருஷ்ணன்

பதிவு செய்த நாள்: 03 Nov 2016 4:14 pm

இந்திய தேசிய நெடுஞ்சாலை துறையின் மாநிலங்களை இணைக்கும் சாலை திட்டத்தின் கீழ் ரூ.85 லட்சத்து 33 ஆயிரம் செலவில் கன்னியாகுமரி விவேகானந்தபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறையின் தர கட்டுப்பாட்டு ஆய்வு கூடம் மற்றும் தலைமை அலுவலகம் புதிதாக கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா பூமி பூஜையுடன் இன்று நடந்தது.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இதில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேசிய நெடுஞ்சாலை துறையின் தர கட்டுப்பாட்டு தலைமை அலுவலகம் கன்னியாகுமரியில் அமைய உள்ளது. வரும் காலங்களில் இது சிறப்பாக செயல்படும். தமிழகத்தில் உள்ள மாநில சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றி வருகிறோம். இதற்கு மாநிலத்தின் ஒப்புதலும் தேவைப்படுகிறது. எனவே உரிய ஒப்புதல் பெற்று தமிழகத்தில் மேலும் பல சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றப்படும்.

கேரள அரசு சிறுவாணி ஆற்றில் புதிதாக அணை கட்ட திட்டமிடுகிறது. அந்த மாநில அரசுக்கு அணை கட்ட எந்தவித உரிமையும் இல்லை. அந்த முயற்சி தவறானது. இதில் தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது.

இந்த அணை கட்டப்பட்டால் கொங்கு நாட்டு மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள். எனவே பிரதமர் நரேந்திர மோடி அணை கட்ட அனுமதி கொடுக்கமாட்டார். ஒரு சொட்டு தண்ணீரை கூட இழக்க நாங்கள் தயாராக இல்லை. காவிரி பிரச்சனையிலும் நமது உரிமை காக்கப்படும் விதத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.

ராணுவத்தில் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார். இதை அரசியலாக்க காங்கிரஸ் நினைப்பது சரியானது அல்ல.

ராணுவ வீரர் தற்கொலை விவகாரத்தையும் காங்கிரஸ் அரசியலாக்க நினைக்கிறது. காங்கிரசின் அரசியல் நாடகம் எடுபடாது. இதுபற்றி பேச காங்கிரசுக்கு தகுதி இல்லை. இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் நடக்கும் பிரச்சனையையும் அரசியலாக்க எதிர்க்கட்சியினர் பார்க்கிறார்கள். இந்தியா பாகிஸ்தான் எல்லை பிரச்சனையை தீர்க்க பிரதமர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனால் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது இந்த பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை.

புதுச்சேரி சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பாரதிய ஜனதா ஆதரவு கொடுத்து உள்ளது அந்த மாநில பாரதிய ஜனதாவின் முடிவு. புதுச்சேரியில் இருந்து காங்கிரஸ் ஆட்சியை அகற்ற இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

இந்தியா, இலங்கை மீனவர் பிரச்சனையில் நமது உரிமையை காக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியா, இலங்கை மீனவர்கள் பிரச்சனை பற்றி கடந்த 2 ஆண்டுகளாக பலகட்ட பேச்சு வார்த்தை நடந்து உள்ளது. தற்போது நடந்து வரும் பேச்சு வார்த்தையில் நல்ல முடிவு ஏற்படும்.

சென்னை மவுலிவாக்கத்தில் முறைகேடாக கட்டப்பட்டதால் 11 மாடி கட்டிடம் இடிக்கப்பட்டு உள்ளது. இதுபோல வேறு கட்டிடங்கள் கட்டி இருந்தால் அதையும் இடிக்க வேண்டும். இதுபோன்ற கட்டிடங்கள் கட்ட அனுமதி அளித்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீர்நிலைகள்- விளைநிலங்கள் பாதிக்கக்கூடிய அளவில் கட்டிடங்கள் உருவாகிறது. நெல் முளைக்க வேண்டிய பகுதியில் கல் முளைக்க விடுகிறார்கள். இதுபோல கட்டிடம் கட்ட அனுமதிக்க கூடாது. முறைகேடாக அனுமதி கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*