[email protected]
feddral bank
BREAKING NEWS

தென்மேற்கு பருவமழை குறைவு எதிரொலி வரட்சி மாநிலமாக கேரளா அறிவிப்பு

பதிவு செய்த நாள்: 01 Nov 2016 11:12 am

இயற்கை எழில் சூழ்ந்த மாநிலமாக பசுமையாக காட்சியளித்த கேரளா இன்று வறட்சி மாநிலமாக மாறி உள்ளது. இதற்கு காரணம் பருவமழை பொய்த்து போனதே ஆகும்.

கேரளாவில் வழக்கமாக தென்மேற்கு பருவமழை அதிக பலனை தரும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளாவிற்கு கைகொடுக்கவில்லை.

கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இந்த மழை சராசரியாக செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். 2 ஆயிரம் மில்லிமீட்டர் வரை மழை கொட்டித்தீர்க்கும். ஆனால் இந்த ஆண்டு 1353.3 மில்லிமீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது.

தென்மேற்கு பருவமழை 34 சதவீதம் இந்த ஆண்டு குறைந்துவிட்டது. இதனால் கேரளா வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளது. மாநிலத்தின் பெரிய அணைகளான முல்லை பெரியார், இடுக்கி அணைகளில் நீர்மட்டம் மிகவும் கீழே சென்றுவிட்டது.

மற்ற அணைகளின் நிலையும் இதைவிட மோசமாக உள்ளது. இதனால் கேரளாவில் குடிநீர் மற்றும் மின்சாரத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

இதைதொடர்ந்து கேரளா வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களும் வறட்சியின் பிடியில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள சட்டசபையில் மந்திரி சந்திரசேகரன் பேசும்போது இந்த தகவலை தெரிவித்தார். கேரள அணைகளின் சராசரியை விட 22 சதவீதம் தண்ணீர் குறைவாக உள்ளதாகவும் மேலும் 2 மாதங்களுக்கு தொடர் மழை பெய்தாலும் இந்த மழை குறைவை ஈடுகட்டமுடியாது என்றும் அவர் கூறினார்.

கேரளா வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது தொடர்ந்து விவசாயிகள் தாங்கள் பெற்றுள்ள விவசாய கடனை திருப்பி செலுத்த காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தின் வறட்சி நிலவரம் பற்றி அறிக்கை தயாரித்து மத்திய அரசிடம் ஒப்படைத்து நிதிஉதவி பெறவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கேரளாவில் நிலவும் வறட்சி பற்றி முதல்-மந்திரி பினராய்விஜயன் அரசு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். தண்ணீர் பயன்பாட்டை குறைக்கவும் கழிவு நீரை சுத்திகரித்து தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்கவும் நடவடிக்கை எடுக்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds