[email protected]
feddral bank
BREAKING NEWS

தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.358 கோடிக்கு மது விற்பனை

பதிவு செய்த நாள்: 31 Oct 2016 9:53 am

தமிழகம் முழுவதும் 6 ஆயிரத்து 200 ‘டாஸ்மாக்’ மதுபான கடைகள் உள்ளன. இந்த ‘டாஸ்மாக்’ கடைகளில் வழக்கமான நாட்களில் சராசரியாக ரூ.55 கோடி முதல் ரூ.65 கோடி வரை மதுபானங்கள் விற்பனை ஆகும். சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் ரூ.90 கோடி முதல் ரூ.100 கோடி வரைக்கும் மதுபானங்கள் விற்பனையாகும் என்று கூறப்படுகிறது.

அதேவேளையில் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் ‘டாஸ்மாக்’ கடைகள் முழுவதும் மதுப்பிரியர்கள் பிடியில் இருக்கும். குறிப்பாக தீபாவளி பண்டிகை காலத்தில் ‘டாஸ்மாக்’ கடைகளில் மதுப்பிரியர்களின் படையெடுப்பு அதிகமாகவே இருக்கும். அத்தியாவசிய பொருட்களுக்காக ரேஷன் கடைகளிலும், ‘டிக்கெட்’டுக்காக சினிமா தியேட்டர்களில் நீண்ட வரிசையில் நிற்பது போல, தீபாவளி பண்டிகை காலங்களில் ஒவ்வொரு ‘டாஸ்மாக்’ கடையின் முன்பு மதுபானங்களை வாங்குவதற்காக மதுப்பிரியர்கள் காத்திருப்பதை பார்க்கலாம்.

இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி, ‘டாஸ்மாக்’ கடைகளில் மதுப்பிரியர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. எப்போது பகல் 12 மணி ஆகும் என்று காத்திருந்து மதுபானங்கள் வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது. கடைகள் திறந்ததும் வேண்டிய அளவு மதுபானங்களை மதுப்பிரியர்கள் வாங்கி சென்றனர். ‘டாஸ்மாக்’ மது கடைகளை போலவே ‘எலைட்’, தனியார் மதுபான பார்களிலும் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதியது.

தீபாவளிக்கு முந்தைய நாளான 28-ந் தேதி மாலை 6 மணிக்கு மேல் ‘டாஸ்மாக்’ கடைகளில் கட்டுக்கடங்கா கூட்டம் இருந்தது. எப்படியும் மதுபானம் வாங்கியே தீர வேண்டும் என்று உறுதி எடுத்தபடி மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கி சென்றனர். ஒரு சிலர் 3 முதல் 5 பாட்டில்கள் வரை வாங்கி சென்றனர். மதுபானங்களுக்கு போட்டியாக ‘பீர்’ விற்பனையும் பட்டையை கிளப்பியது. பல ‘டாஸ்மாக்’ கடைகளில் சீக்கிரமே ‘பீர்’ பாட்டில்கள் தீர்ந்து விட்டன. இதனால் வண்டி எடுத்துக்கொண்டு ஒவ்வொரு கடையாக மதுப்பிரியர்கள் ‘பீர்’ பாட்டில்கள் வாங்க படையெடுத்தனர்.

அந்தவகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, கடந்த 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரையிலான 3 நாட்களில் ‘டாஸ்மாக்’ கடைகளில் சுமார் ரூ.358 கோடி அளவுக்கு மது வகைகள் விற்பனையாகி உள்ளது.

 இதுகுறித்து ‘டாஸ்மாக்’ உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது ரூ.325 கோடிக்கு ‘டாஸ்மாக்’ கடைகளில் மதுபான வகைகள் விற்பனை ஆகியிருந்தன. குறிப்பாக தீபாவளி தினத்தன்று மட்டும் ரூ.123 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை நடந்தது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, கடந்த 28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ரூ.108 கோடி, 29-ந் தேதி (தீபாவளி பண்டிகையன்று) ரூ.135 கோடி, 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ரூ.115 கோடி என மொத்தம் ரூ.358 கோடிக்கு மது வகைகள் விற்பனையாகி உள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.33 கோடி விற்பனை அதிகமாக நடந்துள்ளது. வழக்கம்போல் பிராந்தி மற்றும் விஸ்கி மதுவகைகள் அதிகம் விற்று தீர்ந்துள்ளது. இதற்கு போட்டியாக ‘பீர்’ விற்பனையும் நன்றாக நடந்து உள்ளது. கடந்த ஆண்டை விட ‘பீர்’ விற்பனை 10 சதவீதம் உயர்ந்து இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds