news@tamilnewsbbc.com
feddral bank
BREAKING NEWS

விவசாய வளர்ச்சி தமிழகத்தில் குறைந்து வருகிறது-திருநாவுக்கரசர் அறிக்கை

பதிவு செய்த நாள்: 26 Oct 2016 2:43 pm
By :

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்திய மாநிலங்களில் நிகழ்த்தப்பட்ட தொழில் சீர்திருத்தங்களுக்கான செயல்திட்டங்கள் குறித்த நிலவரங்களை மத்திய வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.

மொத்த மதிப்பெண்கள் 100 என்ற அடிப்படையில் முதலாவதாக ஆந்திர மாநிலம் 99.09, இரண்டாவதாக தெலுங்கானா 99.09, மூன்றாவதாக குஜராத் 97.92 என வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் 18 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டு 62.80 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளது.

ஆந்திர மாநிலம், தெலுங்கானா மாநிலம் முன்னணிப் பங்கு வகிப்பதற்கு காரணம் அந்தந்த முதலமைச்சர் எடுத்துள்ள தீவிர முயற்சியாகும். ஆனால் தமிழ் நாட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னை நந்தம்பாக்கத்தில் 100 கோடி செலவில் நடத்தி முடிக்கப்பட்டபோது ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக தமிழக அரசு அறிக்கையின் வாயிலாகக் கூறியது.

ஆனால் ஓராண்டு ஆகியும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி தொழிற்சாலைகள் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா ? என்கிற விவரங்களை தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் விவசாய வளர்ச்சி குறைந்து வருகிறது. அதேபோல வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 31.3.2016 நிலவரத்தின்படி 83 லட்சத்து 33 ஆயிரத்து 864 பேர் வேலை வாய்ப்பு கோரி பதிவு செய்திருக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 72 லட்சத்து 685 பேர் வேலை வாய்ப்பு பெறுவதற்காக கூடுதலாக பதிவு செய்திருக்கிறார்கள்.

ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கூடி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் 560 பொறியியல் கல்லூரிகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆண்டுதோறும் படித்து வெளியே வருகிறார்கள். இவர்களுக்கான வேலை வாய்ப்பு வழங்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது.

எனவே, இத்தகைய அபாயகரமான சூழ்நிலையில் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை பெருக்காமல் வேலை வாய்ப்பை பெருக்க முடியாது. வேலை வாய்ப்பை பெருக்குவதற்கு தொழில்துறையில் சீர்திருத்தங்கள் உடனடியாக செய்யப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளை செய்ய தமிழக அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds