feddral bank
BREAKING NEWS

மூன்று தொகுதிகளுக்கான இடைதேர்தல் இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்

பதிவு செய்த நாள்: 26 Oct 2016 10:04 am

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த நிலையில், புதிய திருத்தங்களுடன் வேட்புமனுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

பணம் பட்டுவாடா பிரச்சினையால் தேர்தல் ரத்து செய்யப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கும், காலியாக உள்ள திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் அடுத்த மாதம் (நவம்பர்) 19-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில், அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க. ஆகிய 5 கட்சிகள் போட்டியிட இருக்கின்றன. த.மா.கா.வின் நிலை என்ன என்பது குறித்து இன்று (புதன்கிழமை) தெரிவிப்பதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இதற்கிடையே, அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. ஆகிய 3 கட்சிகளும், தங்கள் கட்சிகளின் சார்பில் 3 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. பா.ஜ.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில், தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இன்று வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

மனு தாக்கல் செய்ய கடைசி நாள் நவம்பர் 2-ந் தேதி ஆகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 3-ந் தேதி நடக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் போட்டியில் இருந்து விலக விரும்பினால், தங்கள் வேட்புமனுக்களை 5-ந் தேதிக்குள் வாபஸ் பெற்றுக்கொள்ளலாம். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும். 19-ந் தேதி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டு 22-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது.

இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலுக்காக தாக்கல் செய்யப்படும் வேட்புமனுவில் புதிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தற்போது வேட்புமனு சமர்ப்பிப்பதற்கான படிவம் 2ஏ (பாராளுமன்ற தேர்தலுக்கானது) மற்றும் படிவம் 2பி (சட்டப்பேரவை தேர்தலுக்கானது) ஆகியவற்றில் வேட்பாளரின் புகைப்படத்தை ஒட்டுவதற்கும், தனது குடியுரிமை குறித்த உறுதிமொழியான, ‘நான் ஒரு இந்திய குடிமகன், வேறு எந்த நாட்டின் குடியுரிமையையும் பெறவில்லை’ என்ற உறுதிமொழியை அளிப்பதற்கான திருத்தங்களை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

இந்த திருத்தம் செய்யப்பட்ட படிவங்கள் அச்சிடப்பட்டு உரிய தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. திருத்தம் செய்யப்பட்ட புதிய படிவத்தில் வேட்பாளர்களின் வேட்புமனுவைப் பெறவேண்டும் என்று தற்போது தேர்தல் நடக்கவுள்ள சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds