feddral bank
BREAKING NEWS

மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து விடைப்பெற்றார் சைதை துரைசாமி

பதிவு செய்த நாள்: 26 Oct 2016 11:18 am

பெருநகர சென்னை மாநகராட்சி மேயராக கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் 25-ந்தேதி மேயராக சைதை துரைசாமி மற்றும் கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர். இவர்களுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார்.

இவர்களுடைய 5 ஆண்டுகள் பதவி காலம் கடந்த 24-ந்தேதியுடன் நிறைவடைந்தது. அனைவருக்கும் நன்றி தெரிவித்து சைதை துரைசாமி மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து விடைப்பெற்றார்.

இந்தநிலையில் சைதை துரைசாமி, நிருபர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-

கேள்வி:- அ.தி.மு.க.வின் முதல் மேயரான நீங்கள் 5 ஆண்டுகள் பணியை பூர்த்தி செய்துள்ளர்கள். முதல்- அமைச்சர் உத்தரவின்பேரில் கடந்த 5 ஆண்டுகளில் நீங்கள் நிறைவேற்றிய எந்த திட்டம் உங்களை பெருமிதம் கொள்ள வைக்கிறது?

பதில்:- முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில், ஏழை மக்கள் பயனடையும் வகையில் அம்மா உணவகங்களை திறந்து சாதனைப்படைத்தது தான் என் மனதிற்கு பூரிப்பையும், பெருமிதத்தையும் அளிக்கிறது.

கேள்வி:- இந்த திட்டம் நம்முடைய பதவி காலத்தில் நிறைவேற்றாமல் வந்துவிட்டோமே! என்ற மனக்குறையோடு போவதாக எண்ணுகிறீர்களா?

பதில்:- அப்படி எதுவும் இல்லை. திட்டமிடப்பட்ட அனைத்து திட்டங்களையும் கடந்த 5 ஆண்டுகளில் பொதுமக்கள் நலன் கருதி வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளோம். குறிப்பாக அம்மா வாரச்சந்தை திட்டம், அம்மா திரையரங்கம் திட்டம், சாலைகளில் குப்பைகள் கண்களில் படாதவாறு குப்பையும், குப்பை தொட்டியும் இல்லாத சென்னையை உருவாக்கும் திட்டம், பெருங்குடி, கொடுங்கையூரில் பூமிக்கடியில் (பங்கர் சிஸ்டம்) ராட்சத அளவில் குப்பை தொட்டி அமைத்து அவற்றில் குப்பைகளை கொட்டி பயனுள்ள வகையில் மின்சாரம் மற்றும் உரம் தயாரிக்கும் திட்டங்களுக்கான பெரும்பாலான பணிகள் நிறைவடைந்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளன. அதற்குள் என்னுடைய பதவி காலம் நிறைவடைந்து விட்டது.

கேள்வி:- பொழுதுபோக்கு மற்றும் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்ன?

பதில்:- மாநகராட்சியில் 2011-ம் ஆண்டு மேயராக பதவி ஏற்கும் போது 264 பூங்காக்கள் மட்டுமே இருந்தன. பொதுமக்கள் நலன் கருதி மூலிகை செடிகள் நடப்பட்டதுடன், இசையுடன் நடை பயிற்சி தளங்கள், கடிகாரம் வசதி, அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்கும் வகையில் கடந்த 5 ஆண்டுகளில் 300 புதிய பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி தற்போது 564 பூங்காக்கள் உள்ளன.

கேள்வி: மேயர் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா?

பதில்:- என்னை மேயர் வேட்பாளராக அறிவித்த பின்னர், பிரசாரத்தின் போது முதல்-அமைச்சர், சுத்தமான சென்னை, கை சுத்தமான மாநகராட்சி நிர்வாகம் என்று பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதியை லட்சிய இலக்காக கொண்டு நேர்மையுடனும், உண்மையுடனும், வெளிப்படை தன்மையுடனும், பொதுமக்களின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு நடந்து என்னுடைய பதவி காலம் முடியும் நாள் வரை அந்த வாக்குறுதியை காப்பாற்றி உள்ளேன். இது எனக்கு முழுமனநிறைவையும், மகிழ்ச்சியையும் தருகிறது.

கேள்வி:- மாநகராட்சியில் திறமையான நிர்வாகத்தை நடத்த முதல்-அமைச்சர் வழங்கிய அறிவுரைகள் என்ன?

பதில்:- ஒவ்வொரு பட்ஜெட்டின் போதும் புதுப்புது திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் அறிவுரை வழங்கினார். அதன்படி கொண்டு வரப்பட்டது தான் அம்மா உணவகம் திட்டம். இந்த திட்டம் என் பதவி காலத்தில் கொண்டு வர முதல்-அமைச்சர் ஆணையிட்டது, என் வாழ்க்கையில் கிடைத்த பெரும் பேறாக நினைக்கிறேன்.

அத்துடன் சமூகநலம், நிர்வாக சீர்திருத்தம், அடிப்படை கட்டமைப்பு ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க முதல்-அமைச்சர் அறிவுரை வழங்கினார். அதன்படி இந்த 3 அம்சங்களில் 207 புதிய திட்டங்கள் கொண்டு வந்தோம். குறிப்பாக அம்மா இலவச காப்பகங்கள், ஏழைகளுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், லட்சக்கணக்கான நபருக்கு கொசுவலை வழங்கியது, கொசுக்களை ஒழிக்க நொச்சிச்செடி, டெங்கு காய்ச்சலை தடுக்க நிலவேம்பு குடிநீர் இலவசமாக வினியோகம், நாட்டில் உள்ள எந்த மாநகராட்சி பள்ளியிலும் இல்லாத அளவில் முதல் முறையாக சென்னை பெருநகர மாநகராட்சி பள்ளியில் தங்கி படிக்க உண்டு, உறைவிடப்பள்ளி அமைத்தது, பிறந்த நேரத்துடன், தமிழ், ஆங்கிலத்தில் பிறப்பு சான்று, கட்டிட வரைபடத்தை பெறுவதற்கு எளிமையான முறைகள் கொண்டு வந்தது, போட்டித் தேர்வுக்கான பயிற்சி அளிப்பது போன்றவை பெருமை தருகிறது.

என்னுடைய சொந்தநிதியில் இருந்து மனிதநேய ஐ.ஏ.எஸ். அகாடமி சார்பில் 15 ஆண்டுகள் வளர்ந்த 213 மரங்கள் வழங்கப்பட்டு, பயனுள்ள வகையில் நடப்பட்டு உள்ளன. தொடர்ந்து வளர்ந்த பனைமரங்களும் விரைவில் நடப்பட உள்ளன. தொடர்ந்து சாலையில் நிற்கும் மரங்கள் நேராகவும், சீராக நடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds