feddral bank
BREAKING NEWS

செந்தில்பாலாஜி அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட தடை இல்லை-ஐகோர்ட் உத்தரவு

பதிவு செய்த நாள்: 26 Oct 2016 5:29 pm

சென்னை ஐகோர்ட்டில், திருவல்லிக்கேணியை சேர்ந்த பாஸ்கர் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணி கேட்டு என்னை சுமார் 220 பேர் தொடர்பு கொண்டனர். இவர்களிடம் இருந்து ரூ.4.20 கோடி வசூலித்து, அப்போது போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜியிடம், அவரது உதவியாளர்கள் மூலம் கொடுத்தேன்.

அப்போது 220 பேருக்கும் வேலை வாங்கி தருவதாக செந்தில்பாலாஜி உறுதியளித்தார். ஆனால், சொன்னபடி வேலை வாங்கித் தரவில்லை. இதையடுத்து பணத்தை திருப்பிக் கேட்டபோது, அவர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், போலீசில் புகார் செய்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த புகார் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கவேண்டும். அந்த புலன்விசாரணையை துணை கமி‌ஷனர் மேற்பார்வையிட வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த ஐகோர்ட்டு கடந்த 4-ந் தேதி பிறப்பித்த உத்தரவில், குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது என்று அரசியல் கட்சிகளை அறிவுறுத்தியுள்ளது. ஆனால், அரவக்குறிச்சி தொகுதியின் வேட்பாளராக செந்தில் பாலாஜியை அ.தி.மு.க. அறிவித்துள்ளது. எனவே, குற்ற வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளான செந்தில் பாலாஜியின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

செந்தில்பாலாஜியை வேட்பாளராக அறிவித்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் ஞானசேகரன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், ‘ஒரு குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள்தான் வேட்பாளர்களாக தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால், செந்தில்பாலாஜி மீது குற்ற வழக்குத்தான் நிலுவையில் உள்ளது.

மேலும், தேர்தல் அறிவிப்பு வெளியாகி, தேர்தல் நடவடிக்கையும் தொடங்கி விட்டது. இந்த நிலையில், ஐகோர்ட்டில் தேர்தல் நடவடிக்கையில் தலையிட முடியாது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம். அதேநேரம், வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு துணை கமி‌ஷனர் மேற்பார்வையில் விசாரணை நடைபெற வேண்டும் என்று ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின்படி விசாரணை நடத்தி, அது தொடர்பான அறிக்கையை வருகிற நவம்பர் 7-ந் தேதி இந்த ஐகோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளனர்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds