[email protected]
feddral bank
BREAKING NEWS

கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க ஸ்டாலின் கோரிக்கை

பதிவு செய்த நாள்: 26 Oct 2016 5:44 pm
By :

சென்னையில் இன்று கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தி.மு.க. பொருளாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது முகநூலில் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

சர்க்கரை ஆலைகளில் உள்ள நிலுவை தொகை ரூபாய் 2,000 கோடியை உடனடியாக வழங்கக் கோரி கரும்பு விவசாயிகள் சென்னையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் உள்ள அரசு கூட்டுறவு சக்கரை ஆலைகளில் 350 கோடி ரூபாயும், தனியார் சர்க்கரை ஆலைகளில் 1,650 கோடி ரூபாயும் பாக்கி வைத்திருப்பதாக கரும்பு விவசாயிகள் தரப்பில் கூறி வருகிறார்கள்.

இந்த நிலுவைத் தொகையை வழங்கக் கோரி அதிமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை பல்வேறு போராட்டங்களை நடத்தி விட்டார்கள். ஆனாலும் வேளாண் துறை அமைச்சரோ, சர்க்கரை துறை ஆணையரோ கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்கவோ அல்லது தனியார் சர்க்கரை ஆலைகளிடம் உள்ள நிலுவைத் தொகையை பெற்றுத் தரவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தங்களின் கோரிக்கை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால் கரும்பு விவசாயிகள் இன்று காத்திருப்புப் போராட்டத்தில் குதித்து இருக்கிறார்கள்.

சர்வதேச சந்தையில் 1 டன் சர்க்கரை விலை 38,000 ரூபாய் வரைக்கு உயர்ந்தும் கூட விவசாயிகளின் பாக்கித் தொகையை வழங்க தனியார் சர்க்கரை நிறுவனங்கள் ஏன் முன் வரவில்லை என்று கரும்பு விவசாயிகள் எழுப்பும் கேள்வியில் நியாயம் இருக்கிறது.

தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்கள் இன்றைக்கு வறுமையில் வாடுகின்றன என்ற விவசாயிகளின் குமுறல் இந்த அரசின் செவிகளில் விழாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் கரும்பு விவசாயிகளின் கோரிக்கை பற்றி துளியும் அக்கறை காட்டாமல் அதிமுக அரசு தூங்கிக் கொண்டிருப்பது கண்டனத்திற்குரியது.

ஆகவே, இனியும் காலம் தாமதிக்காமல் கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகை குறித்து உடனடியாக கரும்பு விவசாயிகளையும், கரும்பு விவசாய சங்க நிர்வாகிகளையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுக்குரிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று முதல்வரின் இலாகாக்களை கவனித்து வரும் நிதியமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டிய கரும்பு விவசாயிகளை இப்படி போராட்டக் களத்திற்கு தள்ள வேண்டாம் என்றும் அதிமுக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*