[email protected]
feddral bank
BREAKING NEWS

முதல்அமைச்சர் உடல்நலம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்வதை உரிமை என்று கூற முடியாது-தி.மு.க.நிர்வாகிக்கு ஐகோர்ட் குட்டு

பதிவு செய்த நாள்: 25 Oct 2016 4:32 pm

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த நவ நீதகிருஷ்ணன் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தி.மு.க.வின் கோவை மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளராக பதவி வகிக்கிறேன். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தலில் சமூக வலைதளம் மூலமாக பிரசாரம் செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளேன்.

கடந்த அக்டோபர் 11-ந்தேதி, முதல்-அமைச்சர் உடல் நலம் குறித்து எனக்கு ‘வாட்ஸ்அப்’ மூலமாக வந்த ஒரு பாடலை முகநூலில் பதிவு செய்தேன். அந்த பாடலில், தமிழக அரசின் தற்போதைய அரசியல் நிலவரம், முதல்அமைச்சரின் தற்போதைய நிலை குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப்பதிவு என்னுடைய அசல் பதிவு அல்ல. வேறு ஒருவரிடமிருந்து வந்ததை நான் அப்படியே மற்றவர்களுக்கு அனுப்பி வைத்தேன்.

எதிர்கட்சியைச் சேர்ந்தவன் என்ற முறையில் ஆளுங்கட்சியை விமர்சிப்பது எங்களது கடமை. அதேநேரம், நான் முகநூலில் வெளியிட்ட பாடல் பதிவை, மறுநாளே அழித்து விட்டேன். இந்த நிலையில், பொள்ளாச்சி அ.தி.மு.க. நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில், மகாலிங்க புரம் போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்து என்னை கைது செய்யவும், என்னுடைய சமூக வலைதள பக்கங்களை முடக்கவும் முயற்சித்து வருகின்றனர்.

இதே போல பொள்ளாச்சி நகர 29-வது வார்டு தி.மு.க. இளைஞரணி அமைப்பாளரான ராஜிவ்காந்தியின் சமூக வலைதள பக்கங்களையும் முடக்க போலீசார் முயற்சிக்கின்றனர். போலீசாரின் இந்த செயல் சட்ட விரோதமானது.

எங்கள் இருவர் மீதும் ஆளுங்கட்சியினரின் தூண்டுதலின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆகவே எங்களை கைது செய்வதற்கும், எங்களின் சமூக வலைதளங்களை முடக்குவதற்கும் போலீசாருக்கு தடை விதிக்க வேண்டும். அதுபோல எங்களின் அன்றாட பணிகளில் போலீசார் குறுக்கிடக் கூடாது என உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ராஜேந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘அரசியலமைப்பு சட்டம் ஒருவருக்கு கருத்து தெரிவிக்க உரிமை வழங்கியிருந்தாலும், அவ்வாறு தெரிவிக்கப்படும் கருத்து, பிறரை பாதிக்காத வண்ணம் இருக்கவேண்டும்.

ஒருவரது தனிப்பட்ட வி‌ஷயத்தை விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமை கிடையாது. தமிழக முதல்அமைச்சர் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார். அவரது தனிப்பட்ட ஆரோக்கியம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்வதை, உரிமை என்று கூற முடியாது’ என்று கருத்து தெரிவித்தார். ‘இந்த வழக்கை முடித்து வைப்பதாக’ உத்தரவு பிறப்பித்தார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*