[email protected]
feddral bank
BREAKING NEWS

டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு:தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி

பதிவு செய்த நாள்: 25 Oct 2016 10:36 am
By :

டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றிய ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா, கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி, திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி, தனது மகளின் தற்கொலை தொடர்பான வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அதனால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி இருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு கடந்த ஜூலை 1-ந் தேதியன்று, விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியது.

ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

அந்த மனு நீதிபதிகள் மதன் பி.லோகுர், ஆதர்ஷ் குமார் கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல் கே.ராமமூர்த்தி, தமிழக அரசு வக்கீல் யோகேஷ் கன்னா ஆகியோர் ஆஜர் ஆனார்கள். இந்த வழக்கில் ‘கேவியட்’ மனு தாக்கல் செய்திருந்த விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி தரப்பில் வக்கீல் பி.வில்சன் ஆஜர் ஆனார்.

தமிழக அரசில் சார்பில் ஆஜரான வக்கீல்கள் வாதாடுகையில் கூறியதாவது:-

விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். சி.பி.சி.ஐ.டி. இந்த வழக்கை முழுமையாக விசாரித்து முடித்து உள்ளது. இந்த விசாரணை குறித்து நிலைத்தகவல் அறிக்கை மாவட்ட கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில், விஷ்ணுபிரியா ஏற்கனவே 3 முறை தற்கொலைக்கு முயற்சித்து இருக்கிறார் என்றும், அதனால் இதனை தற்கொலை வழக்காகத்தான் கருத முடியும் என்றும், எனவே இது ஒரு தற்கொலை வழக்குதான் என்றும் கூறப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.யிடம் இருந்து மாற்றி சி.பி.ஐ. வசம் ஒப்படைத்து இருப்பது தேவையற்றது; தவறானது. எனவே, சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்து இந்த வழக்கை மீண்டும் சி.பி.சி.ஐ.டி. வசமே ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அதற்கு நீதிபதிகள், “போலீசில் உயர் பதவியில் இருக்கும் ஒரு பெண் அதிகாரி இப்படி திடீரென்று இறந்து இருக்கிறார் என்றால் அது சாதாரணமான விஷயம் அல்ல. எனவே, விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்து இருப்பது சரியான நடவடிக்கைதான். ஐகோர்ட்டின் இந்த உத்தரவில் நாங்கள் தலையிட முடியாது” என்று கூறி தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*