[email protected]
feddral bank
BREAKING NEWS

டிராபிக் ராமசாமியின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

பதிவு செய்த நாள்: 25 Oct 2016 9:48 am

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து சமூக வலைத்தளத்தில் எழுதுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து புகைப்படத்துடன் பொதுமக்களுக்கு அரசு மற்றும் ஆஸ்பத்திரி நிர்வாகம் விளக்கம் அளிக்க உத்தரவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனை எதிர்த்து கடந்த 21-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் டிராபிக் ராமசாமி சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சமூக வலைத்தளங்களில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி ஏதாவது எழுதினால் போலீஸ் கைது செய்வதாகவும், எனவே இந்த பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு அவரது உடல்நிலை குறித்த தெளிவான அறிக்கையை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

எனவே இந்த மனுவை தன் மீதான அவதூறு வழக்குக்கு எதிராக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தொடர்ந்த வழக்குடன் இணைத்து விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

 இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டிராபிக் ராமசாமி சார்பில் ஆஜரான வக்கீல் ஜி.எஸ்.மணி, ‘சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் டிராபிக் ராமசாமி மீது 2 வழக்குகள் பதிவு செய்து இருக்கிறார்கள். ஜெயலலிதா உடல்நிலை குறித்து தகவல் பரிமாறியதாக ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். யாருடைய உடல்நிலை குறித்து யாராவது எனக்கு ஏதாவது செய்தி அனுப்பி அதை நான் யாருக்காவது அனுப்பினாலும் என் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உண்டு. இரு வழக்குகளில் டிராபிக் ராமசாமி எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை உள்ளது. எனவே சுப்ரீம் கோர்ட்டு உடனடியாக தலையிட்டு கைது நடவடிக்கைகளுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், ‘தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல் ராகேஷ் திவிவேதியிடம், ‘இதற்கெல்லாமா ஒருவரை கைது செய்வீர்கள்? இதனை அரசு ஏன் வேறு வழியில் அணுகக்கூடாது?’ என்று கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு வக்கீல் ராகேஷ் திவிவேதி, ‘டிராபிக் ராமசாமி மீது தொடுக்கப்பட்ட வழக்கு அவதூறு வழக்கு அல்ல. வதந்தி பரப்பியதாக தான் வழக்கு பதியப்பட்டு உள்ளது. எனவே, இதனை அவதூறுக்கு எதிரான வழக்காக விசாரணைக்கு ஏற்கக்கூடாது’ என்று ஆட்சேபம் தெரிவித்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த மனுவை அவதூறுக்கு எதிரான வழக்குடன் இணைத்து விசாரிக்க முடியாது என்று விசாரணைக்கு ஏற்க மறுத்து வழக்கை முடித்து வைப்பதாக தெரிவித்தனர். மேலும் உரிய சட்டப்பிரிவின் அடிப்படையில் உரிய நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்யுமாறும் அறிவுறுத்தினர்.

இதன் அடிப்படையில் இன்று (செவ்வாய்க்கிழமை) டிராபிக் ராமசாமி தரப்பில் கைது நடவடிக்கைகளுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்வதாக வக்கீல் ஜி.எஸ்.மணி தெரிவித்தார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*