[email protected]
feddral bank
BREAKING NEWS

தமிழகம் மற்றும் புதுச்சேரி இடைத்தேர்தல்கள்: வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்

பதிவு செய்த நாள்: 24 Oct 2016 3:18 pm

தமிழ்நாடு, பாண்டிச்சேரி இடைத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது நாம் தமிழர் கட்சி. ‘ அரசியல் என்பது ஒரு வாழ்வியல் என்பதை மக்களுக்குப்  புரிய வைப்பதற்காகவே, தேர்தலில் களம் இறங்குகிறோம்’ என்கிறார் சீமான்.

தமிழ்நாட்டில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கும் பாண்டிச்சேரி, நெல்லித் தோப்பு தொகுதிக்கும் வருகிற நவம்பர் 19 அன்று இடைத் தேர்தல் நடக்க இருக்கிறது. இதில், தி.மு.கவும் அ.தி.மு.கவும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை இன்று அறிவித்துவிட்டார் சீமான். தஞ்சாவூரில் வழக்கறிஞர் நல்லதுரை, திருப்பரங்குன்றத்தில் வர்த்தகர் மகாதேவன், அரவக்குறிச்சியில் இயற்கை விவசாயி அரவிந்த் குருசாமி மற்றும் நெல்லித் தோப்பு தொகுதியில் வர்த்தகர் ரவி அண்ணாமலை ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

‘ இடைத்தேர்தலில் வெற்றி பெற என்ன வியூகம் அமைக்கப் போகிறீர்கள்’  என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேட்டோம்.

” எங்களுக்கு ஒரு வியூகமும் கிடையாது. நாங்கள் தனித்துப் போட்டியிடுகிறோம். தேர்தல் ஆணையத்திடம் ஒரே ஒரு கோரிக்கைதான் வைக்கிறோம். எதற்காக தேர்தலை ரத்து செய்தீர்கள் என்று. திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வென்ற சீனிவேல் இறந்துவிட்டார். எனவே, அங்கு இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் அதிகப்படியான பணம் கொடுக்கப்பட்டது என்பதுதான் பிரதான குற்றச்சாட்டு. அப்படியானால், தற்போது அந்தத் தொகுதிகளில் பணமே கொடுக்கவிடாமல், இறுக்கி நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம்? ஆளுங்கட்சியின் ஒட்டுமொத்த அமைச்சர்களும் அங்கு தேர்தல் பணி செய்யப் போகிறார்கள். மீண்டும் வீட்டுக்கு வீடு பணம் கொடுப்பார்கள் என்றால், தேர்தலையே நடத்தாமல் விட்டுவிடலாம். இதை ஒரு சடங்காக நடத்தாமல், முழுமையான ஜனநாயக மாண்போடு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றுதான் விரும்புகிறோம்.

‘ பணம் கொடுக்கப்படுவதைத் தடுக்க பறக்கும் படை அமைக்கிறோம் என்பார்கள். தெருவில் வருவோர் போவோரிடம் எல்லாம் சோதனை நடத்துவார்கள். பெற்ற தாய்க்கு மருத்துவ சிகிச்சைக்குப் பணம் எடுத்துக் கொண்டு போகிறவனிடம் பறிமுதல் செய்வார்கள். வியாபாரத்தை செய்துவிட்டு வீட்டுக்கு பணம் எடுத்துப் போகின்றவர்களையும், இவர்கள் மடக்கிப் பிடித்து சோதனை நடத்துவார்கள். இதுவரையில், பணம் கொடுக்கப்படும் இடங்களில் அதிகாரிகள் பறிமுதல் செய்தார்களா? பணம் கொடுத்தவன், வாங்கியவன் என்று நாடு முழுவதும் ஆயிரம் பேரைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், பணம் வாங்குபவர்களிடமும் கொடுப்பவர்களிடமும் ஒருவித பயம் உருவாகியிருக்கும். இப்போது என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்? பணம் சுத்தமாகக் கொடுக்கப்படாமல் தடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா? எனக் கேள்வி எழுப்புகிறோம்.

மாற்று அரசியலுக்கு வழி அமைக்க வேண்டும் என்றால், ஏற்கெனவே உள்ள பாதையில் பயணிக்க முடியாது. பணத்தைக் கொடுத்து வாக்குகளைப் பெறுகின்ற அழுக்குப் பாதையில் எங்களால் பயணிக்க முடியாது. நாங்கள் மக்களுக்கு அருகில் சென்று, ‘ அரசியல் என்பது ஒரு வாழ்வியல். இவர்கள் நடத்துவது அரசியல் அல்ல’ என்பதைப் புரிய வைப்பதற்காகவே இடைத்தேர்தலில் போட்டியிடுகிறோம். எங்களிடம் பணம் இல்லை. அது மக்களுக்கும் தெரியும். எனவே, தூய அரசியலை மக்களுக்கு எடுத்துரைக்கப் போகிறோம். வெற்றி தோல்வியைப் பற்றி சிந்திக்கக் கூடிய காலம் அல்ல இது. இது விதைப்புக்கான காலம். அறுவடைக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன” எனக் கொந்தளிப்போடு பேசி முடித்தார் சீமான்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*