தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய பா.ஜ.க. அரசின் தலைமை வக்கீல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டிற்கு அதிகாரம் கிடையாது, பாராளுமன்றம் மற்றும் அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று மறுபடியும் வலியுறுத்தி கூறியதன் மூலம் தமிழகத்திற்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை முடக்குவதன் மூலம் கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாக இதன்மூலம் நரேந்திர மோடி அரசு செயல்படுவது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
பன்மாநில நீர்த்தகராறு சட்டத்தின்படி “காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு என்பது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பிற்கு இணையானது; இதன் மீது மேல்முறையீடு செய்ய முடியாது; இதை திருத்துவதற்கு பாராளுமன்றத்திற்கு கூட அதிகாரம் கிடையாது” என தெளிவாக கூறப்பட்டுள்ள நிலையில் மத்திய பா.ஜ.க. அரசின் அரசியல் உள்நோக்கம் கொண்ட அணுகுமுறையின் மூலம் தமிழகம் வஞ்சிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் மன்னிக்க முடியாத குற்றத்தை பா.ஜ.க. அரசு செய்திருக்கிறது.
2 நாட்களாக நடந்த ரெயில் மறியல் போராட்டத்தில் தமிழகமே திரண்டெழுந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறது. இத்தகைய எதிர்ப்புகளுக்குப் பிறகும் மத்திய பா.ஜ.க. அரசு சுப்ரீம் கோர்ட்டு ஆணையின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றுச் சொன்னால் அதனால் ஏற்படுகிற கொந்தளிப்பான சூழலுக்கு நரேந்திர மோடி அரசு பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.