[email protected]
feddral bank
BREAKING NEWS

தி.மு.க.வே முன் நின்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டும்-மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பதிவு செய்த நாள்: 18 Oct 2016 10:03 am

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பெரம்பூரில் ரெயில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க. பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். மாலையில் அவர் கள் விடுவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டிக்கும் வகையில் தமிழகத்தில் விவசாய அமைப்பை சேர்ந்தவர்கள் 2 நாட்கள் ரெயில் மறியல் போராட்டத்தை அறிவித்து இருக்கிறார்கள். அந்த போராட்டத்திற்கு தி.மு.க. துணை நிற்கும் என்று ஏற்கனவே தி.மு.க. தலைவர் கருணாநிதி எடுத்து சொல்லி இருக் கிறார். அவரின் அறிவுரையில் பேரில் இந்த போராட்டத்தை தி.மு.க. ஒருங்கிணைத்து நடத்தி இருக்கிறது.

கர்நாடகாவில் ஆளும் ஆட்சி, எதிர்க்கட்சி என்று இல்லாமல் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து ஒருங்கிணைந்து போராட்டம் நடத்துகிறார்கள். சட்டசபையை கூட்டுகிறார்கள், அமைச்சரவையை கூட்டுகிறார்கள். சட்டசபையில் தீர்மானத்தை நிறைவேற்றுகிறார்கள். உச்ச நீதிமன்ற தீர்ப்பை புறக்கணிக்கும் வகையிலும் செயல்படுகிறார்கள். ஆனால் நியாயமாக போராட வேண்டிய தமிழகம் இன்றைக்கு அந்த நிலையில் இல்லை என்பது வேதனையாக உள்ளது.

எல்லா அரசியல் கட்சி தலைவர்களும், குறிப்பாக நம்முடைய தலைவர் கருணாநிதி இந்த அரசுக்கு எத்தனையோ வேண்டுகோள் வைத்து இருக் கிறார். அதையெல்லாம் இந்த அரசு நிறைவேற்றவில்லை.

எங்களை பொறுத்தவரையில் விவசாய அமைப்புகள் நடத்திய முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு அளித்து இருக்கிறோம். 7-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம். விவசாய அமைப்பு நிர்வாகிகளை அழைத்து அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தி, தீர்மானம் நிறைவேற்றினோம். மத்திய அரசின் போக்கினை கண்டிக்கும் வகையில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றினோம். உடனடியாக அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்பதை முதல் தீர்மானமாக நிறைவேற்றினோம்.

இரண்டாவது தீர்மானமாக, சட்டசபை கூட்டத்தை கூட்டி, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், அனைத்து கட்சி பிரதிநிதிகளை டெல்லிக்கு அழைத்து சென்று அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். இந்த தீர்மானத்தை விளக்கி, எதிர்க் கட்சி தலைவர் என்ற முறையில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தீர்மானத்தின் நகலை கொடுத்தோம். நிச்சயமாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கிறோம் என்று அவர் உறுதி அளித்தார்.

இன்றைய மறியல் போராட்டத்தில் நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறேன். நல்ல முடிவு வர வேண்டும். நாளைக்கு (இன்று) இது சம்பந்தமான வழக்கு கோர்ட்டில் வருகிறது. அந்த நிலையை தெரிந்து கொண்டு, ஆளும் கட்சி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டாவிட்டாலும் தி.மு.க.வே முன் நின்று அனைத்து கட்சி கூட்டுவது குறித்து அனைத்து விவசாய சங்கங்களுடன் இணைந்து முடிவை அறிவிப்போம்.

நாளை (இன்று) நடக்கும் போராட்டத்திலும் நாங்கள் பங்கேற்போம். தற்போது டெல்டா மாவட்டத்திற்கு முக்கியத்துவம் தந்து பங்கெடுத்து இருக்கிறோம். எனவே எந்தெந்த மாவட்டத்தில் தி.மு.க. பங்கேற்கவில்லையோ? அந்த மாவட்டத்தில் பங்கேற்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள், ‘நிறுத்தி வைக்கப்பட்ட 2 தொகுதிகளுக்கும், காலியாக உள்ள ஒரு தொகுதிக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதே? தி.மு.க. சார்பில் வேட்பாளர்கள் எப்போது அறிவிக்கப்படுவார்கள்’ என்று கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த மு.க.ஸ்டாலின், ‘இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம். கருணாநிதி முடிவை அறிவிப்பார்’ என்றார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds